Sunday, May 13, 2007

043. தாய்ப்பால் கொடுத்தாள்



குமரகுருபரரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம். பாண்டி நாட்டில் பிறந்த தமிழ் முத்து. ஊமைக் குழந்தையாய் இருந்து திருச்செந்தூர் முருகப் பெருமான் அருளால் பேசவும் பாடவும் அருள் பெற்ற கவி. "பூமேவு செங்கமலம்" என்று தொடங்கும் கந்தர்கலி வெண்பா எழுதியவர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் எழுதியவர். இவர் திருமலை மன்னருக்குச் சம காலத்தவர்.

கவியரசர் கண்ணதாசன்
ராதா ஜெயலட்சுமி
இவரைப் பற்றிய சிறிய வரலாற்றை ஆதிபராசக்தி என்ற திரைப்படத்தில் காட்டுகிறார்கள். முருகப் பெருமான் அருளால் அவர் பேசும் திறன் பெற்றதும் பாடும் பாடலே இந்தப் பதிவில் நாம் காணப் போகும் முருகனருள் பாடல். கவியரசர் கண்ணதாசன் எழுதி திரையிசைத்திலகம் கே.வி.மகாதேவன் அவர்கள் இசையமைத்து ராதா(ஜெயலட்சுமி) அவர்கள் பாடிய அருமையான பாடல். (ராதா ஜெயலட்சுமி அவர்கள் தெய்வம் என்ற திரைப்படத்தில் திருச்செந்தூரில் போர் புரிந்து என்ற அருமையான பாடலையும் பாடியுள்ளார்கள்.)

சந்தநயம் மிகுந்து தமிழ்வளம் கொழிக்கும் இந்தப் பாடல் முருகன் அடியவர்கள் கேட்கவும் பாடவும் மிகப் பொருத்தமானது. இந்தப் பாடலை இந்தச் சுட்டியில் இருந்து இறக்கிக் கொள்ளலாம். அதற்கு cooltoadல் அக்கவுண்ட் வைத்திருக்க வேண்டும். ஓசிதான். வைத்துக்கொள்ளுங்கள். அங்கு வேறு நிறைய நல்ல பாடல்களும் கிடைக்கின்றன.

தாய்ப்பால் கொடுத்தாள் பராசக்தி
தனிக்கருணைத் தமிழ்ப் பால் கொடுத்தான் தமிழ் முருகன்
வாய்ப்பாயால் பாடும் பழந்தமிழில்
பாடத் தொடங்குகிறேன் ஆடும் மயில் வேலன் அருள்

தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
தந்தைக்கு மந்திரத்தைச் சாற்றிப் பொருளுரைத்த
முந்து தமிழ் சக்தி மகன் முருகன் வந்தான்
பல் முளைக்கு முன்னே எனக்குக் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
ஆதிசக்தி நாயகியின் பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
கலைஞானக் கண் திறந்து வைத்து தமிழும் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்
என்றும் நீங்காத செந்தமிழில் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்

வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
வந்த கலி தீர்ந்ததென்று
கந்தர்கலி பாட வந்தேன்
சந்தமுள்ள நூறுகவிச் சரணம் தந்தேன்
அந்தக் கந்தனவன் தனது திருச்சரணம் தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்
கந்தன் வந்தான் கவிதை தந்தான்


அன்புடன்,
கோ.இராகவன்

13 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) May 13, 2007 11:00 AM  

//பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
//

விளக்குங்க ஜிரா.
நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-)

//ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்//

பாட்டின் மகுடமே இங்கு தான்.
அவ்வளவு அற்புதமான வரிகள்.
ஆங்கார-ஓங்கார-ரீங்கார என்று அவ்வளவு அருமை!

சோமாஸ்கந்த திருவுருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் வரிகள்.
தாமரைக்கும் தண்டுக்கும் இடையே தாவிப் பாயும் வண்டோ அந்த முருகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) May 13, 2007 11:07 AM  

இந்தப் படத்தை ஒரு முறை கண்டு களித்த போழ்து, கண்களுக்கு மற்றுமொரு அரும்பொருளாய் புலப்பட்டது!

தாமரை என்றாலே திருமகள் அல்லவா?
அந்தத் தாமரைக்குள் இருக்கும் ஓங்காரத் தேன் பெருமாள்.

அந்த மாமனிடம் காதல் கொண்டு
ஓங்காரத் தேன் பருக
ரீங்காரம் செய்ய வந்தான்
மருகன், வண்டாய் முருகன்!

G.Ragavan May 13, 2007 11:22 AM  

//// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
//பாதிசக்தி ஆனவர்தம்
நீலிக்கண்ணிலே பிறந்த முருகன் வந்தான்
//

விளக்குங்க ஜிரா.
நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-) //

நான் விளக்கனுமா ரவி? நீங்களே விளக்கலாமே. நீலிக்கண் என்று சொல்லப்படுவது நெற்றிக்கண். நீலிக்குக் கண்ணீர் நெற்றியிலே என்று சொல்லும் பழமொழியும் பிரபலமே.

////ஆங்கார சக்தி என்னும்
ஓங்காரத் தாமரைக்குள்
ரீங்காரம் செய்யும் வண்டு
கந்தன் வந்தான்//

பாட்டின் மகுடமே இங்கு தான்.
அவ்வளவு அற்புதமான வரிகள்.
ஆங்கார-ஓங்கார-ரீங்கார என்று அவ்வளவு அருமை!

சோமாஸ்கந்த திருவுருவத்தை நினைவுக்குக் கொண்டு வரும் வரிகள்.
தாமரைக்கும் தண்டுக்கும் இடையே தாவிப் பாயும் வண்டோ அந்த முருகன்! //

உண்மைதான் இந்த வரிகள் அப்பன், அம்மை, மகன் மூவரையும் இணைக்கும் வரிகள். அதைத்தான் கவிஞரும் இங்கு சொல்கிறார்.

G.Ragavan May 13, 2007 11:24 AM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
இந்தப் படத்தை ஒரு முறை கண்டு களித்த போழ்து, கண்களுக்கு மற்றுமொரு அரும்பொருளாய் புலப்பட்டது!

தாமரை என்றாலே திருமகள் அல்லவா?
அந்தத் தாமரைக்குள் இருக்கும் ஓங்காரத் தேன் பெருமாள்.

அந்த மாமனிடம் காதல் கொண்டு
ஓங்காரத் தேன் பருக
ரீங்காரம் செய்ய வந்தான்
மருகன், வண்டாய் முருகன்! //

இது நீங்கள் சொல்லும் பொருள் ரவி. கவிஞர் சொல்வது அதல்ல. சோமாஸ்கந்தந்தைச் சொல்கிறார் கவியரசர். மேலும் இங்கு ஓங்காரம் என்பது தாமரை. அந்தத் தாமரையோடு சேர்ந்தது சக்தி. அந்த சிவசக்தியோடு ரீங்காரம் செய்யும் வண்டு முருகன். நீங்கள் சொல்லும் பொருளில் ஆங்கார சக்தி காணப்படவில்லையே.

வெற்றி May 13, 2007 1:17 PM  

இராகவன்,
இதுவரை கேட்டிராத பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

/* நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-) */

ரவி, முற்றிலும் உண்மை. எங்கட ஊரிலும் இதே நிலைதான், -;)))

G.Ragavan May 13, 2007 2:39 PM  

// வெற்றி zei...
இராகவன்,
இதுவரை கேட்டிராத பாடலைப் பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி. //

வெற்றி அருமையான பாடல் இது. முடிந்தால் இறக்குமதி செய்து கேளுங்கள். நல்ல தமிழ்ப் பாக்களை விரும்புகிறவர்கள் இதையும் விரும்புவார்கள்.

///* நம்ம ஊரிலே நீலிக்கண், நீலிக்கண்ணீர்-ன்னாலே வேறு அர்த்தம் ஆகி விட்டது! :-) */

ரவி, முற்றிலும் உண்மை. எங்கட ஊரிலும் இதே நிலைதான், -;))) //

வெற்றி, அதற்குக் காரணம் பழையனூர் நீலி. அவள் பெயர் நீலிதானா என்று தெரியவில்லை. அழுது அழுதே காரியம் சாதித்தாள். அவளால் திருவாலங்காட்டு நெசவாளர்கள் எல்லாரும் தீப்பாய்ந்தார்கள். ஆனால் அவள் கணவனைப் பழிவாங்கி விட்டாள். அது உண்மை. அனைத்திற்கும் ஆலங்காட்டு ஈசனே சாட்சி.

கோவி.கண்ணன் [GK] May 13, 2007 9:28 PM  

மிக அருமையான அழகான பாடல் !

Kannabiran, Ravi Shankar (KRS) May 14, 2007 12:16 AM  

//நீங்கள் சொல்லும் பொருளில் ஆங்கார சக்தி காணப்படவில்லையே//

ஜிரா
கவிஞர் அடியேன் சொன்ன பொருளில் பாடவில்லை தான்.
அதான் சோமாஸ்கந்தம் என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லி விட்டேனே!

ஆங்கார சக்தி = பிரகருதி, அதுவே தண்டு.
ஓங்காரம்/தாமரை = பெருமாள்/திருமகள்
இதே போன்ற வர்ணனை திருமழிசைப்பிரான் கவியிலே வரும்!

அதில் ரீங்கரிக்கும் வண்டு நம்ம மருகன் என்று நான் தான் சும்மா ஒரு சுவைக்குக் கொண்டேன். அவ்வளவே! :-)
இப்படிப் பல்வகையாலும் பொருத்தி மகிழ்வதும் ஒரு இன்பம் தானே!
திருப்புகழின் ஒவ்வொரு அடியிலும் பெருமானே என்னாது பெருமாளே என்று தானே இன்புறுகிறோம்! :-)

G.Ragavan May 14, 2007 3:12 AM  

// கோவி.கண்ணன் [GK] zei...
மிக அருமையான அழகான பாடல் ! //

ஆமாம் கோவி. மிக அழகான பாடல். கவியரசரின் சொல்நயம் மிக அருமை.

G.Ragavan May 14, 2007 3:16 AM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) zei...
//நீங்கள் சொல்லும் பொருளில் ஆங்கார சக்தி காணப்படவில்லையே//

ஜிரா
கவிஞர் அடியேன் சொன்ன பொருளில் பாடவில்லை தான்.
அதான் சோமாஸ்கந்தம் என்று முதல் பின்னூட்டத்திலேயே சொல்லி விட்டேனே!

ஆங்கார சக்தி = பிரகருதி, அதுவே தண்டு.
ஓங்காரம்/தாமரை = பெருமாள்/திருமகள்
இதே போன்ற வர்ணனை திருமழிசைப்பிரான் கவியிலே வரும்!

அதில் ரீங்கரிக்கும் வண்டு நம்ம மருகன் என்று நான் தான் சும்மா ஒரு சுவைக்குக் கொண்டேன். அவ்வளவே! :-) //

அதத் தெளிவாச் சொல்லீருங்க. ஏன்னா..நீங்க ஆன்மீகப் பதிவு போடுறவரு. நீங்க சொல்றது சரின்னு இங்க நெறையப் பேரு நெனைப்பாங்க. ஆகையால கொஞ்சம் பாத்துக்கோங்க ரவி. :-)

// இப்படிப் பல்வகையாலும் பொருத்தி மகிழ்வதும் ஒரு இன்பம் தானே!
திருப்புகழின் ஒவ்வொரு அடியிலும் பெருமானே என்னாது பெருமாளே என்று தானே இன்புறுகிறோம்! :-) //

மறுபடியும் மன்னிக்கனும். பெருமாள் என்பது பெரும் ஆள். அந்த வகையில்தான் அருணகிரி அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார். கண்ணன் மருகன் என்று சொன்னதெல்லாம் சரிதான். ஆனால் கோனாடு சூழ் விராலி மலையுறை பெருமாளே என்று சொல்லும் பொழுது அது முருகனை மட்டுந்தான் குறிக்கிறது. இந்த இடத்தில் அந்தப் பெருமாள் வரவில்லை.

Kannabiran, Ravi Shankar (KRS) May 14, 2007 10:18 AM  

//பெருமாள் என்பது பெரும் ஆள். அந்த வகையில்தான் அருணகிரி அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருக்கிறார்//

பெருமாள் என்பது பெரும் ஆள் தான் என்றாலும் வைணவர்களே அச்சொல்லைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். மற்றவர்களும் அப்படியே கையாளுகிறார்கள்.

இப்படிப் பரவலாக இருக்கும் ஒரு சொல்லையே, முருகனுக்காக, அருணகிரியார் பல முறை கையாண்டு இன்புறுகிறார் என்றால், அவருக்கு இருக்கும் நல்லிணக்கமும், ஒன்றோடு ஒன்று பொருத்திப் பார்த்து இன்புறும் சுவையும் - இதை தான் குறிப்பிட்டேன், ஜிரா!

முருகன் என்றால் முருகப் பெருமானை மட்டும் குறிக்காது, அழகன் என்றும் குறிக்கும் அல்லவா...

அருணகிரியார் பெருமாளே என்று பயன்படுத்தியது போல்,
கவிதைச் சுவை கருதி, "கரகமல சங்க சக்ர முருகோனே" என்றும் பெருமாளை அழகனாகச் சொல்லியும் பாடலாமே!

சொல்ல வந்தது என்னவென்றால்
பெரும்பான்மையாகக் குறிப்பிடும் சொற்களைக் கூட சில சமயம் சுவை கருதிப் பொருத்தி மகிழலாம் என்பதே!
அருணகிரியாரின் அன்பு மனம் நமக்கும் அமைந்தால் இது அழகாகக் கைக்கூடும்!

//ஆகையால கொஞ்சம் பாத்துக்கோங்க ரவி//

அடியேன் "அப்படியே" பாத்துக்கறேன் ஜிரா:-)))

வல்லிசிம்ஹன் May 14, 2007 11:41 AM  

raghavan,

enjoyed reading abt neeli.

and nila mayilmithu jnalamvalam vantha MuruGan.

NanRi.

G.Ragavan May 14, 2007 2:44 PM  

// வல்லிசிம்ஹன் zei...
raghavan,

enjoyed reading abt neeli.

and nila mayilmithu jnalamvalam vantha MuruGan.

NanRi. //

வாங்க வல்லிசிம்ஹன். உங்க பின்னூட்டம் ஆங்கிலத்திலா. வெளிய இருந்து பாத்தீங்களா.

நீலி கதையே சுவையானதுங்க. ஒங்களுக்கும் தெரிஞ்சிருக்கும். ஒருத்தனை மணந்து வாழ்ந்து...அவனால் வஞ்சிக்கப்பட்டு...உயிரையும் விட்டு.....ஆவியா வந்து அவனைப் பழி வாங்குனாளே..அப்பப்பா...அவன் கதறுனானே...இது பெண்ணில்லை பேய்னு....ஆலங்காட்டு வெள்ளாளர்களை அழுதே ஏமாத்துனாளே...அவ அவனைக் கொன்னதும்....தங்களாலதான் அவன் இறந்தான்னு...வெள்ளாளர்கள் எல்லாரும் தீக்குதிச்சதும்...முழுக்க முழுக்க உணர்ச்சி மிகுந்த கதைங்க.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP