Wednesday, May 30, 2007

வைகாசி விசாகம்: Happy Birthday! அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்!

வைகாசி பொறந்தாச்சு. மணம் பேசி முடிச்சாச்சு! வைகாசி-ன்னாலே கல்யாணங்கள் மட்டும் தானா?

பஞ்சவர்ணக் கிளி என்னும் படத்தில், ஒரு திருமண வரவேற்பு (ரிசப்ஷன்); அதில் ஒரு நடனக் காட்சி. ஆடுறவங்க பேர் எல்லாம் தெரியாது...
ஆனா அந்தப் பாட்டில், மிருதங்கத்துக்கு என்றே ஒரு கட்டம் வரும் பாருங்க; நிஜமாலுமே சூப்பர்!
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் - இது தான் அந்த நடனம் + பாடல்!

இன்று வைகாசி விசாகம் (May 30, 2007)
அப்படி என்ன விசேடம், இந்த வைகாசி விசாகத்துக்கு?
வேதம் தமிழ் செய்தான் - மாறன் சடகோபன் - என்னும் நம்மாழ்வார் அவதரித்த திருநாள்!
இறைவனின் திருவடிகள் அம்சமாக அவனியில் வந்தவர் அவர்!
அது மட்டுமா?

விசாக நட்சத்திரத்தில் தோன்றினான் ஒரு அழகன்.
அவனுக்கு விசாகத்தான் என்ற பெயரும் உண்டு!
(அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம சுப்பையா சாரைத் தான் கேட்கணும்)

உம்பர்கள் சுவாமி நமோநம
எம்பெரு மானே நமோநம
ஒண்டொடி மோகா நமோநம

இன்சொல் விசாகா கிருபாகர
செந்திலில் வாழ்வாகியே, அடியேன் தனை
ஈடேற வாழ்வருள் பெருமாளே!

என்று திருப்புகழும் "விசாகன்" என்றே கொண்டாடுகிறது!
அவன் தான் விசாகன்-முருகன்!


அந்த விசாகன் தோன்றிய தினமும் இந்த வைகாசி விசாகம் தான்!
So....
Happy Birthday, Dear Muruga!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், அன்பு முருகா!

(பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!

ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)





சுசீலாம்மாவின் தேன் குழையும் குரலில், பாட்டைக் கேட்க இங்கே சொடுக்கவும்

சத்தியம், சிவம், சுந்தரம்! ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம்! ஆஆஆ....

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்.
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)


பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)



மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!
ஆ ஆ..
(அழகன் முருகனிடம்)





படம்: பஞ்சவர்ணக்கிளி
இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி
வரிகள்: வாலி
குரல்: பி.சுசீலா

38 comments:

துளசி கோபால் May 30, 2007 12:30 AM  

வாத்தியார் ஐயா,

//அதுக்காக விசாகத்துல பொறந்தவங்க எல்லாம் அழகா இருப்பாங்களா-ன்னு
என்னைக் கேட்காதீங்க; வலையுலக ஜோதிட விற்பன்னர், நம்ம
சுப்பையா சாரைத் தான் கேட்கணும்//

நீங்க சொல்லுங்க இதுக்கு விளக்கம்.

வைகாசி விசாகம்- மிகவும் சிறப்பு.

தை விசாகம்-?

இதுக்கும் யாராவது விளக்கம் சொன்னால் நலம்.

KRS,

பஞ்சவர்ணக்கிளி படம் வாங்கிவந்தேன் இந்த வருட சென்னை விஸிட்டில்.
அருமையான பாட்டு. அதுக்கேத்த நடனமும் கூட!

VSK May 30, 2007 12:39 AM  

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!

முருகனருள் முன்னிற்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 12:59 AM  

//துளசி கோபால் said...
தை விசாகம்-?
இதுக்கும் யாராவது விளக்கம் சொன்னால் நலம்.//

டீச்சர், நீங்க தை விசாகமா?
விசாகத்தில் பிறந்தவங்க
விசாலமா மாளிகையில் வாழ்வாங்க-ன்னு ப்ளாக்கர் புராணம் சொல்லுதாமே? :-)
இருங்க, எதுக்கும் மாணவர் தல, நட்சத்திரத்தைக் கேட்டுட்டு வாரேன்!

//பஞ்சவர்ணக்கிளி படம் வாங்கிவந்தேன் இந்த வருட சென்னை விஸிட்டில்.
அருமையான பாட்டு. அதுக்கேத்த நடனமும் கூட!//

ஆமாங்க டீச்சர்
தமிழுக்கும் அமுதென்று பேர் பாட்டு கூட, அந்தப் படம் தான்-னு நினைக்கிறேன்!

மெளலி (மதுரையம்பதி) May 30, 2007 1:25 AM  

அருமையான பாடல், நன்றி சிபி.

அடியேனும் அழகன் முருகனை வாழ்த்தி வணங்குகிறேன்.

மதுரையம்பதி.

நாமக்கல் சிபி May 30, 2007 1:36 AM  

வேலனுக்குப் பிறந்த நாளா?

கையிலெடுத்துக் கொஞ்சி மகிழ்ந்துக் கொண்டாட வேண்டாமா?

அழகன் முருகனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

உண்மைத்தமிழன் May 30, 2007 2:00 AM  

என் அப்பனுக்குப் பொறந்த நாளா?

தமிழ்மணத்தைத் திறந்தவுடனேயே இதுதான் முதலில் இருந்தது எனது பாக்கியம். திறந்தேன். முருகனையும் பார்த்தேன். பாடலையும் கேட்டு நானும் சேர்ந்து பாடினேன்.. "அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்.. அவன் ஆலயத்தில் என் அன்பு மலர் பூசை வைத்தேன்.." முருகா உன்னையே தொழுகிறேன்.. நின் பாதம் சரணடைகிறேன்.. அபயம்.. அபயம்.. அபயம்..

யோகன் பாரிஸ்(Johan-Paris) May 30, 2007 5:32 AM  

ரவிசங்கர்!
முருகனுக்குப் பிறந்த நாளா?? வணங்குகிறேன்.
இந்தப் பாடல் இனிய தமிழுக்கும் இசைக்கும் உதாரணம். என்றும் கேட்டு மகிழலாம்.

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 9:05 AM  

//VSK said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!//

அழகன் முருகன் சார்பாக, நன்றி SK! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 9:06 AM  

//மதுரையம்பதி said...
அருமையான பாடல், நன்றி சிபி.
அடியேனும் அழகன் முருகனை வாழ்த்தி வணங்குகிறேன்//

பல்லாண்டு பல்லாண்டு என்று வாழ்த்துங்கள் மெளலி சார்!
நன்றி

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 9:07 AM  

//நாமக்கல் சிபி said...
வேலனுக்குப் பிறந்த நாளா?
கையிலெடுத்துக் கொஞ்சி மகிழ்ந்துக் கொண்டாட வேண்டாமா?//

ஆமாம் சிபி...
வாரி எடுத்து அணைத்து மடி மேல் வைத்துக் கொஞ்சி மகிழலாம் நாள் முழுதும்!

தி. ரா. ச.(T.R.C.) May 30, 2007 9:50 AM  

பால்வடியும் உந்தன் வதனத்தைக் காணவே பறந்தோடி வந்தேன் மால் மருகா.பிறந்தநாள் வாழ்த்துக்கள்.படத்தில் ஆடியது L விஜயலக்ஷ்மி என்று நினைக்கிறேன்

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 1:18 PM  

//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
என் அப்பனுக்குப் பொறந்த நாளா?//

ஆமாங்க! அப்பனின் சுப்பனுக்குப் பொறந்த நாள் தான் வைகாசி விசாகம்!

//தமிழ்மணத்தைத் திறந்தவுடனேயே இதுதான் முதலில் இருந்தது எனது பாக்கியம். திறந்தேன். முருகனையும் பார்த்தேன். பாடலையும் கேட்டு நானும் சேர்ந்து பாடினேன்..//

ஆகா...நாங்க எப்போ நீங்க ஆடும் காட்சியைக் காண்பது?
யூட்யூப்-இல் அப்லோட் பண்ணுங்க!! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 1:19 PM  

//யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
ரவிசங்கர்!
முருகனுக்குப் பிறந்த நாளா?? வணங்குகிறேன்.
இந்தப் பாடல் இனிய தமிழுக்கும் இசைக்கும் உதாரணம்.//

நன்றி யோகன் அண்ணா!
முருகன் அவதார நட்சத்திரம் வைகாசி விசாகம்!
நாம் பிறந்த நாள்/ தோன்றிய நாள் என்றே கொள்ளலாம்!

G.Ragavan May 30, 2007 2:36 PM  

மிகவும் அருமையான பாடல். இந்தப் பாடல் கவியரசர் எழுதி மெல்லிசைமன்னர்கள் இசையில் வெளிவந்தது. இசையரசியின் தேங்குரலும் குழைவும் முருகனருளை அனைவருக்கும் சூரை விடுகிறது. அதனால் நம்மைச் சூரை விடுகிறது.

பனி பெய்யும் மாலையிலே
பழமுதிர்ச்சோலையிலே
கனி கொய்யும் வேளையிலே
கன்னி மனம் கொய்து விட்டான்
பன்னிரண்டு கண்ணழகைப்
பார்த்து நின்ற பெண்ணழகை
வள்ளல்தான் ஆள வந்தான்
பெண்மையை வாழ வைத்தான்

// (பிறவான், இறவான் என்று பாட்டை எடுத்துக் கொண்டு, யாரோ வரப் போறாங்கப்பா...
அவுங்க என்ன தான் சொன்னாலும், நாம அன்பா Happy Birthdayன்னு சொல்றத விடமாட்டோம்-ல!
ஏன்னா...நான்...அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்! :-)//

சொல்லிய சொல்லும் சொல்லின் உள்ளும் உள்ளத்தின் துள்ளும் துள்ளதன் எள்ளும் அறிந்தவன் இறைவன். அப்படியிருக்க யார் வந்து அந்தப் பாட்டையெல்லாம் சொல்லப் போறாங்க ரவி?

வெட்டிப்பயல் May 30, 2007 2:59 PM  

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

ஜி.ரா,
பார்த்தா சொல்லிடுங்க...

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 7:38 PM  

//தி. ரா. ச.(T.R.C.) said...
பால்வடியும் உந்தன் வதனத்தைக் காணவே பறந்தோடி வந்தேன் மால் மருகா. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.//

பறந்"தோடி" வந்த திராச ஐயா.
தோடி ராகத்தில் நீங்க வந்து வாழ்த்தியது மகிழ்ச்சி!

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 7:57 PM  

// G.Ragavan said...
இந்தப் பாடல் கவியரசர் எழுதி//

ஜிரா
வாலி எழுதியதாச் சொல்றாங்களே!
கொஞ்சம் பாத்துச் சொல்லுங்களேன்.

//அப்படியிருக்க யார் வந்து அந்தப் பாட்டையெல்லாம் சொல்லப் போறாங்க ரவி?//

இறைவன் சொல்லும் உள்ளும் துள்ளும் எள்ளும்,
அதனில் விள்ளும், பள்ளும் நள்ளும் கள்ளும் அறிந்தவன் தான் ஜிரா!

ஆனா இந்த "லொள்ளும்" என்ற ஒன்று உள்ளதே!
அதான் பாட்டை எடுத்து வரும் அன்பர் மனத்துக்கு, ஆசை மனத்தையும் காட்டி மகிழ்விக்க எண்ணினேன்! :-)

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 7:59 PM  

ஜிரா
ஆங் புது கெட்டப் நல்லாத் தான் இருக்கு! செவ்வேள் ஏறிய மஞ்ஞை தெரியும்! நீங்க செவப்பா போட்டுக்கினு எதில் ஏறிப் போறீங்க?

உங்க பழைய படங்கள் எல்லாம் சும்மா காணாமப் போச்சுனா, இங்க கேளுங்க! ஒரு பெட்டகமே இருக்கு! :-))

Kannabiran, Ravi Shankar (KRS) May 30, 2007 8:12 PM  

//வெட்டிப்பயல் said...
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!
ஜி.ரா,
பார்த்தா சொல்லிடுங்க...//

பாலாஜி...வருகைக்கு நன்றி!

அது என்னாங்க அது, "ஜிரா பார்த்தா சொல்லிடுங்க"-ன்னு டபாய்க்கிறீங்க? :-)))

1. அப்பிடின்னா, ஜிரா பார்க்கலைங்கறீங்களா?
இல்லை, அவர் பார்த்தா மட்டும் தான் சொல்ல முடியும் ன்னு சொல்ல வரீங்களா?
அவர் எப்படியும் சொல்லிடுவார் தெரியும்-ல? :-)

2. ஏன், ஜிராவை மட்டும் பாவம் வேலை வாங்குறீங்க? இங்க எத்தினி பேரு இருக்கோம்? எல்லாரும் சேர்ந்து சொல்லலாம்-ல? :-)

3. அது ஏன், நீங்க சொல்ல மறுக்கறீங்க? ஏன் இந்த பாரபட்சம்?
முருகனிடம் நீங்களே சொன்னா எவ்வளவு சந்தோசப்படுவார்! பாலாஜியே சொன்னா மருகனுக்கு எவ்ளோ மகிழ்ச்சி!

அப்பாடி,
கேள்வியின் நாயகன் பாலாஜிக்கே கேள்வி கேட்டாச்சு!
கொத்தனார் ஸ்டார் வீக்ல, இதெல்லாம் கேக்காம இருக்க முடியுமா! :-)))))))

வல்லிசிம்ஹன் May 31, 2007 12:11 AM  

எங்க வீட்டில ஒரு ஐப்பசி முருகன் முதப்பிள்ளையா இருக்காரு.
அதனாலேயே திருப்பரங்குன்ற முருகனை ரொம்பக் கொண்டாடுவோம்.
இப்ப ரவி பதிவுலே மயிலோடு முருகனைச் சேவித்ததில் மகிழ்ச்சி.

மெய்யுருகப் பாடிவந்தால் தன்னைத்தான் தருபவனோ||
உள்ளமுருக
முருகனைப் பாடவைத்த ரவிக்கு நன்றி.

G.Ragavan May 31, 2007 2:14 PM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
// G.Ragavan said...
இந்தப் பாடல் கவியரசர் எழுதி//

ஜிரா
வாலி எழுதியதாச் சொல்றாங்களே!
கொஞ்சம் பாத்துச் சொல்லுங்களேன். //

வாலியா, கே.சங்கர் படமென்றால் எனக்குத் தெரிந்து கவியரசர்தான் எப்பொழுதும் எழுதிருக்கிறார். வருவான் வடிவேலனில் கூட அவர்தான். இந்தத் தகவலைச் சரி பார்க்க வேண்டும்.

// இறைவன் சொல்லும் உள்ளும் துள்ளும் எள்ளும்,
அதனில் விள்ளும், பள்ளும் நள்ளும் கள்ளும் அறிந்தவன் தான் ஜிரா!

ஆனா இந்த "லொள்ளும்" என்ற ஒன்று உள்ளதே!
அதான் பாட்டை எடுத்து வரும் அன்பர் மனத்துக்கு, ஆசை மனத்தையும் காட்டி மகிழ்விக்க எண்ணினேன்! :-) //

ஆசை மனதைக் காட்டி மகிழ்விக்க எண்ணினீரா? எத்தனை முறை. ஏனென்றால் ஆசாநிகளம் துகளாயின பின்...என்றும் ஜிராவுக்குத் தெரியுமாம் :)

G.Ragavan May 31, 2007 2:20 PM  

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஜிரா
ஆங் புது கெட்டப் நல்லாத் தான் இருக்கு! செவ்வேள் ஏறிய மஞ்ஞை தெரியும்! நீங்க செவப்பா போட்டுக்கினு எதில் ஏறிப் போறீங்க? //

ஆம்ஸ்டர்டாம்ல உள்ள கால்வாய்கள்ள படகுச் சாவாரி. அதுதான் அந்தப் படம்.

// உங்க பழைய படங்கள் எல்லாம் சும்மா காணாமப் போச்சுனா, இங்க கேளுங்க! ஒரு பெட்டகமே இருக்கு! :-)) //

என்னங்க சொல்றீங்க...எங்கயிருந்து இதெல்லாம் கெடைச்சது. இருக்குறத அனுப்பி விடுங்க. எங்கிட்ட இல்லாதது கூட உங்ககிட்ட இருக்கும் போல இருக்கே.

Kannabiran, Ravi Shankar (KRS) May 31, 2007 7:43 PM  

//வல்லிசிம்ஹன் said...
எங்க வீட்டில ஒரு ஐப்பசி முருகன் முதப்பிள்ளையா இருக்காரு.//

ஆகா..
அவரு ஐப்பசி விசாகமா?

//இப்ப ரவி பதிவுலே மயிலோடு முருகனைச் சேவித்ததில் மகிழ்ச்சி//

மயிலோடு முருகன் சிலை, எந்தக் கோவில்-னு தெரியுதுங்களா....?
மிக உயரமான முருகன்! கல்லில் கலை வண்ணம்!

குமரன் (Kumaran) July 05, 2007 10:44 PM  

மெய்யுருகப் பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ?!

ஆகா. இரவிசங்கர் கருணையால் இன்று கண்ணன் மேலும் கந்தன் மேலும் உள்ள அருமையான பாடல் வரிகளைக் கேட்டேன். அங்கே கண்ணதாசன் உருக்கினார் என்றால் இங்கே வாலி. இரண்டு இடத்திலும் சுசீலாம்மா. அருமை.

வெற்றி July 05, 2007 11:25 PM  

இராகவன்,
அருமையான பாடல். மிக்க நன்றி.

முருக பத்தர்களிடம் ஒரு கேள்வி:

போன வார இறுதியில் ஒரு கட்டுரையை வாசித்ததும் எழுந்த கேள்வி. முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடம் எது?

நானானி July 06, 2007 6:40 AM  

காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! ராகவன்!
ஓர் அற்புதமான் பாடலை பிறந்தநாள்
பரிசாக தந்திருக்கிறீர்கள்!!
எல்.விஜயலக்ஷ்மியின் நடனமும்
வீணை வித்வான் சிட்டிபாபுவின் வீணையும் மேலும் பாடலுக்கு மெருகூட்டியிருக்கும். அது மிருதங்கம்
அல்ல...தபேலா! அதன் கண்கண் என்ற தாளமும் மனதில் கும்மென்று
ஏறி உட்காரும்.

Kannabiran, Ravi Shankar (KRS) July 06, 2007 9:46 AM  

//குமரன் (Kumaran) said...
ஆகா. இரவிசங்கர் கருணையால் இன்று கண்ணன் மேலும் கந்தன் மேலும் உள்ள அருமையான பாடல் வரிகளைக் கேட்டேன். அங்கே கண்ணதாசன் உருக்கினார் என்றால் இங்கே வாலி. இரண்டு இடத்திலும் சுசீலாம்மா. அருமை.//

நன்றி குமரன்!
இரவிசங்கர் கருணையா? அச்ச்சோ!
கந்தன் கருணை, கண்ணபிரான் கருணை என்று வேண்டுமானால் சொல்லுங்க!
சுசீலாம்மா குரல் சாரலில் குளித்து மகிழத் தான் ஜிரா சீவீஆர் ரெண்டு பேரும் தனி வலைப்பூவே தொடங்கிட்டாங்களே!

Kannabiran, Ravi Shankar (KRS) July 06, 2007 10:26 AM  

//வெற்றி said...
இராகவன்,
அருமையான பாடல். மிக்க நன்றி.//

நன்றி வெற்றி!
ஜிரா என் நண்பர் தான்! நீங்க அவரு கிட்ட சொன்னீங்கனா கூட பரவாயில்லை. அவர் பாக்கெட்டில் கை விட்டு எடுத்துக் கொள்கிறேன்! :-)))

//முருக பத்தர்களிடம் ஒரு கேள்வி:
போன வார இறுதியில் ஒரு கட்டுரையை வாசித்ததும் எழுந்த கேள்வி. முருகன் வள்ளியைத் திருமணம் செய்து கொண்ட இடம் எது?//

என்னங்க திடீர்ன்னு இந்தக் கேள்வி. மற்ற அன்பர்களும் வந்து சொல்லட்டும். அடியேன் அறிந்ததைச் சொல்கிறேன்.

வள்ளி மலையில், பல விளையாட்டுக்கள் புரிந்து வள்ளியின் கைத்தலம் பற்றிய கந்தன்.
துரத்திய வீரர்கள் மடிய, பின்னர் வள்ளியின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைவரையும் உயிர்பித்தான். அவர்கள் வேண்டிய வண்ணம், முறைப்படி வள்ளியை மணம் புரிந்தான். பின்னர் திருத்தணிகையில் சில காலம் தங்கி, கந்த வெற்பு ஏகினான் என்பது புராணம்!

வள்ளித் திருமணம், அவள் இடத்தில், அவள் குலப்படி, நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்று வாரியார் சுவாமிகள் சொல்லுவார்.
அப்படிப் பார்த்தால் வள்ளி மலை தான்!

திருத்தணிகையில் நடந்தது என்று சொல்வாரும் உண்டு!
தணிகை வள்ளி மலைக்கு அருகில் தான் உள்ளது. சில காத தூரம் தான் என்று திருப்புகழிலும் வரும்! ஆனால் அங்கு தான் மணம் நடந்தது என்பதற்கு உறுதியான சான்றுகள் இல்லை!

இத்தனைக்கும், இன்னொரு கருத்துப்படி, கதிர்காமத்தில், வெட்டா இன மக்கள் சூழ, அங்கு தான் வள்ளித் திருமணம் நடந்தது என்றும் சிலர் சொல்லுவர்!

ஆனால் ஆய்வுகள் கொண்டு பார்க்கையில் வள்ளிமலையைக் கொள்வதே ஏற்றதாக இருக்கும் என்பது அறிஞர் பலர் கருத்து!

Kannabiran, Ravi Shankar (KRS) July 06, 2007 10:30 AM  

// நானானி said...
காலம் கடந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!//

முருகனுக்குக் கூட belated ஆ? நன்றி நானானி!

//அது மிருதங்கம்
அல்ல...தபேலா! அதன் கண்கண் என்ற தாளமும் மனதில் கும்மென்று
ஏறி உட்காரும்.//

ஹூம்...பாட்டில் வீணையும் தாளமும் நாட்டியத்தை அப்படித் தூக்கிக் கொடுக்கும்! நீங்க சொல்வதின் வாயிலாகப் பாட்டின் வெற்றி புரிகிறது!

வெற்றி July 06, 2007 11:04 AM  

ரவி,

/* நன்றி வெற்றி!
ஜிரா என் நண்பர் தான்! நீங்க அவரு கிட்ட சொன்னீங்கனா கூட பரவாயில்லை. அவர் பாக்கெட்டில் கை விட்டு எடுத்துக் கொள்கிறேன்! :-))) */

ஐய்யய்யோ! ரவி, மன்னித்துக் கொள்ளுங்கள். :-)) இப் பதிவை வாசிக்க முன் இராகவனின் பதிவொன்றை வாசித்தேன். அதனால் மறந்து போய் இது இராகவன் பதிவு என நினைத்து அவரின் பெயரை விளித்து விட்டேன் என நினைக்கிறேன் :-))

/* என்னங்க திடீர்ன்னு இந்தக் கேள்வி. */

போன வார இறுதியில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு பேராசிரியரின் கதிர்காம முருகன் ஆலயத்தைப் பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்திருந்தேன்.

அக்கட்டுரையில் அவர், சிங்கள முருக பத்தர்கள், கதிர்காமப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள், மற்றும் அப் பகுதியில் வசிக்கும் வேட இனத்தவர்கள், வள்ளி கதிர்காமப் பகுதியில் வாழ்ந்த வேடப் பெண் என்றும் முருகன் வள்ளியை கதிர்காமத்திலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் நம்புவதாக தெரிவித்திருந்தார்.

இன்றும் ஒவ்வொரு வருடமும் கதிர்காமத்தில் முருகன் திருமண வைபவத்தை வேடர்களின் முறையில் கொண்டாடப்படுவதாக அறிந்தேன்.

அதனால்தான் இந்தக் கேள்வி பிறந்தது. :-))

பேராசிரியரின் அக் கட்டுரையை கொஞ்ச நேரத்தில் இங்கே தருகிறேன்.

முருகன் - வள்ளி திருமணம் நடந்த இடம் பற்றி பழங்கால இலக்கியங்கள், மற்றும் தேவாரம், திருப்புகழ் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளதா?

நன்றி ரவி. பெயர் குழப்பத்திற்கு மீண்டும் என் மன்னிப்புக்கள்.

வெற்றி July 06, 2007 11:14 AM  

[1]"வள்ளி மலையில், பல விளையாட்டுக்கள் புரிந்து வள்ளியின் கைத்தலம் பற்றிய கந்தன்."

[2]"வள்ளித் திருமணம், அவள் இடத்தில், அவள் குலப்படி, நடந்திருக்கவே வாய்ப்புண்டு என்று வாரியார் சுவாமிகள் சொல்லுவார்.
அப்படிப் பார்த்தால் வள்ளி மலை தான்!"

[3]"ஆனால் ஆய்வுகள் கொண்டு பார்க்கையில் வள்ளிமலையைக் கொள்வதே ஏற்றதாக இருக்கும் என்பது அறிஞர் பலர் கருத்து!"
------------------------------
ரவி, அப்படியாயின் இந்த வள்ளிமலை கதிர்காமத்தை அண்டிய பகுதியாக இருந்திருக்குமோ?

வள்ளிமலை என்ற இடம் இன்றும் தமிழகத்தில் உண்டா?

வெற்றி July 06, 2007 12:00 PM  

ரவி,
நான் மேலே குறிப்பிட்டிருந்த கட்டுரையின் சுட்டி கீழே. முருகன் -வள்ளி திருமணம் பற்றி சிங்களவர்கள், தமிழர், வேடர்கள் ஆகியோரின் நம்பிக்கைகள் பற்றி அறிய இக் கட்டுரையை நேரம் கிடைக்கும் போது படித்துப் பாருங்கள்.

கட்டுரையை வாசிக்க இங்கே சொடுக்கவும்

Kannabiran, Ravi Shankar (KRS) July 06, 2007 3:19 PM  

வெற்றி

கதிர்காமம்.ஒர்க் கட்டுரையை படித்துப் பார்த்தேன். அருமையாக உள்ளது. நான் அறியாத பல தகவல்கள். அதுவும் பெளத்தரும், நம்மவரும் சேர்ந்து வணங்கிடும் இறைவன்...மிக அழகாகச் சொல்லி உள்ளார்.

வள்ளித் திருமணம் வேடர்கள் (Veddas) புடை சூழ கதிர்காமத்தில் நடந்தது என்று சிலர் சொல்வதாக முன்னரே சொல்லி இருந்தேன்! அதனால் இன்னும் ஆர்வமாகக் கட்டுரையை வாசித்தேன். ஆனால் கட்டுரை ஆசிரியரும் ஒரு குறிப்பாகத் தான் சொல்கிறாரே தவிர நிறுவ வில்லை!

//ரவி, அப்படியாயின் இந்த வள்ளிமலை கதிர்காமத்தை அண்டிய பகுதியாக இருந்திருக்குமோ?//

அப்படி ஒரு கால் இருந்தாலும் இருக்கலாம்! ஆனால் நூலாதாரங்கள் தேட வேண்டும்!

//வள்ளிமலை என்ற இடம் இன்றும் தமிழகத்தில் உண்டா?//

உண்டு, வெற்றி.
ஆந்திர எல்லை ஓரம், வேலூர் மாவட்டத்தில் (எங்கள் ஊரில் இருந்து ஒரு மணி நேரப் பயணம் தான்)
.....திருத்தணிகைக்கு அருகில் தான் உள்ளது.
வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் திருப்புகழ் ஆசிரமும் உள்ளது. வாரியார் சுவாமிகளும் தவபீடம் ஒன்று அங்கு கட்டியுள்ளார்.
இதோ சுட்டி

Kannabiran, Ravi Shankar (KRS) July 06, 2007 3:34 PM  

//முருகன் - வள்ளி திருமணம் நடந்த இடம் பற்றி பழங்கால இலக்கியங்கள், மற்றும் தேவாரம், திருப்புகழ் போன்றவற்றில் கூறப்பட்டுள்ளதா?//

வள்ளித் திருமணம் இலக்கியங்களில் பேசப்படுகிறது!
பல சமயச் சொற்பொழிவுகள் இந்தத் தலைப்பில் நிகழ்ந்தாலும்...இந்த ஊர் தான் திருமணம் நடந்த ஊர் என்று அறுதியாகக் குறிப்படப் படவில்லை என்றே நினைக்கிறேன்!
ஒருவாறு மற்ற குறிப்புகள் வைத்துத் தான் உணர்ந்து கொள்கிறார்கள்!

திருப்புகழில் "வதன சரோருக நயன சிலீமுக" என்ற ஒரு புகழ் வரும்!
அதில் வள்ளிமலை-திருத்தணி அருகருகில் இருப்பதாகக் குறிப்பு கொடுக்கிறார் அருணகிரியார்!

வள்ளி புனத்தில் நின்று
வாராய் பதி காதம் காதரை
ஒன்றும் ஊரும் வயலும் ஒரே இடை என்று பாடுகிறார்.

"என் ஊர் (திருத்தணிகை) உன் ஊரில் இருந்து (வள்ளிமலை) இரண்டரை காதம் (காதம்+காதம்+அரை) தூரம் தான்!
என் ஊரும், உன்னூராகிய வள்ளிமலையும் நெருங்கி உள்ளன,
இடையில் ஒரே ஒரு வயல்தான் உள்ளது", என்று முருகப்பெருமான் வள்ளியை அழைப்பதாகப் பாடல்!

திருமணம் வேடுவர் முறைப்படி வள்ளிமலையில் நடந்தேறி
பின்னர் அவர்கள் திருத்தணிகை சென்று சில கால் தங்கி
பின்னர் கந்த வெற்பினை அடைகிறார்கள் என்று தான் பலரும் கருதுகிறார்கள்!

//ஐய்யய்யோ! ரவி, மன்னித்துக் கொள்ளுங்கள். :-)) மறந்து போய் இது இராகவன் பதிவு என நினைத்து அவரின் பெயரை விளித்து விட்டேன் என நினைக்கிறேன் :-))//

அச்சோ வெற்றி!
எதற்கு இத்தனை மன்னிப்புகள்! நான் சும்மா விளையாட்டுக்குத் தான் ராகவன் பாக்கெட்டில் இருந்து நானே எடுத்துக் கொள்கிறேன் என்று சொன்னேன்!

ராகவனை விளித்தாலும்
கண்ணபிரானை விளித்தாலும்
எல்லாம் ஒன்று தான்! வெவ்வேறு அவதாரங்கள் அவ்வளவே! :-)))))

சீனு July 06, 2007 3:42 PM  

அட்டகாசமான, என்னுடைய ஃபேவரைரைரைரைரைட் பாடல்...

ஹூம். இந்த கணினி யுகத்துல தமிழ் நாட்காட்டியே மறந்து போச்சு. யாராவது e-தமிழ் நாட்காட்டி இருந்தா அனுப்புங்கப்பா...

வெற்றி July 06, 2007 11:18 PM  

ரவி,
எனது கேள்விகளுக்குப் பொறுமையாகவும் அன்பாகவும் விளக்கமளித்தமைக்கு மிக்க நன்றிகள்.
இணையச் சுட்டிக்கும் மிக்க நன்றி.

/* அதில் வள்ளிமலை-திருத்தணி அருகருகில் இருப்பதாகக் குறிப்பு கொடுக்கிறார் அருணகிரியார் */

நான் குறிப்பிட்ட கட்டுரையில் பேராசிரியர் சண்முகலிங்கம் அவர்களும் வள்ளி கதிர்காமத்தைச் சேர்ந்தவர் என்பதை நிறுவ அருணகிரிநாதரின் திருப்புகழை ஆதாரமாகக் கொண்டுதான் சொல்கிறார் என நினைக்கிறேன்.

அருணகிரிநாதர் இப்படிச் சொல்கிறாராம் என அவர் அக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

"The Vedda form of worship predominates from Kathirkaamam to all the ancient centres of Murukan worship. The puja by the forest dwelling Veddas is very much loved by you, who dwell at Kathirkaamam"

இது எந்தத் திருப்புகழ் என எனக்குத் தெரியாது.

அருணகிரிநாதர் சமீபத்தில் [டோண்டுவின் பாணியில்] சில நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் என நினைக்கிறேன்.

ஆனால் முருகன் - வள்ளி திருமணம் கிறிஸ்துவுக்கு முன் பல நூற்றாண்டுகளுக்கு முன் நடந்ததென நினைக்கிறேன்.ஆக அருணகிரியாரும் செவிவழியாகத் தான் கேள்விப்பட்டதையே பாடியிருப்பார் என நம்புகிறேன். இல்லையா?

ரவி, வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளிமலைப் பகுதிகளில் இப்போதும் வேடர்கள்/ஆதிகுடிகள் வாழ்கிறார்களா?
அப்படியிருந்தால் அவர்களில் உள்ள வயோதிபர்களை அணுகி இந்த முருக வழிபாடு பற்றி ஆய்வு செய்தால் சில துப்புகள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

முருக வழிபாட்டு முறை பற்றிக் கட்டாயம் ஆய்வுகள் ஆராச்சிகள் செய்ய வேண்டும்.அதன் மூலம் பழங்காலத் தமிழர்களின் வாழ்வு முறைகளையும் அறியக் கூடியதாக இருக்கும், இல்லையா?

VSK July 08, 2007 1:10 AM  

Tiruthani Murugan temple is one of the famous Hindu temples dedicated to Lord Muruga. It is one of the Arupadaiveedu, the six holy abodes of Lord Muruga, the others being Palani (100 km west of Madurai), Swamimalai (150 km east of Madurai), Tirupparangunram (5 km from Madurai), Pazhamudircholai (10 km north of Madurai) and Thiruchendur (100 km south of Madurai). It is located in the township of Tiruttani 50 km north of Chennai enroute to Thirupathi. According to Hindu mythology, Lord Murugan married Valli, the daughter of a hunter, here.

வள்ளி பிறந்த இடம் வள்ளிமலை.

வள்ளிமலை வட ஆற்காடு மாவட்டத்தில், வாலாஜாவுக்கு அருகே இருக்கிறது.

லீலைகள் முடித்து மணந்த இடம் திருத்தணி.

திருத்தணியில் சூரன் போர் முடித்து தங்கியிருக்கையில்தான், நாரதர் வள்ளியைப் பற்றிச் சொல்ல, முருகன் விரைகிறார், வள்ளிமலையில் தினைப்புனம் காக்கும் வள்ளியை நோக்கி.
நம்பிராஜனுக்கு, இறுதியில் தான் யாட் எனக் காட்டியதும், அவர் சம்மதத்துடன் திருத்தணியில் மணந்ததாக வரலாறு சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இரண்டையும் வைத்துப் பார்க்கையில் மேலே சொல்லியிருப்பது உண்மையாக இருக்க முடியும்.

MSATHIA July 10, 2007 10:55 AM  

//பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே,
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான்!
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை,
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்!//

ஆஹா.. ஆஹா..என்ன கவிநயம்!!!

\\மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ!
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ!
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்,
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்!\\

என்ன பக்தி... என்ன பக்தி..
இதுவரை இந்த பாட்டை அர்த்ததோட ரசிச்சதில்லை. அருமை. நன்றி கண்ணா!!

-சத்தியா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP