Sunday, July 22, 2007

07/26/07"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]



"கந்தகுரு கவசம்" -- 6 [206-240]

பகுத்தறிவான கந்தன் பரங்குன்றில் இருக்கின்றான்
பழனியில் நீயும் பரம்ஜோதி ஆனாய் நீ
பிரம்மனுக்கு அருளியவா ப்ரணவப் பொருளோனே
பிறவா வரமருளி ப்ரம்ம மயமாக்கிடுவாய்
திருச்செந்தூரில் நீ சக்திவேல் தாங்கி விட்டாய் ...... 210

பழமுதிர் சோலையில் நீ பரஞ்ஜோதி மயமானாய்
ஸ்வாமி மலையிலே சிவஸ்வாமிக் கருளிய நீ
குன்றுகள் தோறும் குருவாய் அமர்ந்திட்டோய்
ஸ்கந்தகிரியை நீ சொந்தமாக்கிக் கொண்டனையே
ஸ்கந்த குருநாதா ஸ்கந்தாஸ்ரம ஜோதியே ...... 215

பிறப்பையும் இறப்பையும் பெயர்த்துக் காத்திடுவாய்
பிறவாமை என்கின்ற பெருவரம் நீ தந்திடுவாய்
தத்துவக் குப்பையை மறந்திடச் செய்திடுவாய்
எந்த நினைப்பையும் எரித்து நீ காத்திடுவாய்
ஸ்கந்தா சரணம் ஸ்கந்தா சரணம் ...... 220

சரணம் அடைந்திட்டேன் சடுதியில் வாருமே
சரவண பவனே சரவண பவனே
உன்னருளாலே நான் உயிரோடிருக்கின்றேன்
உயிருக்குயிரான கந்தா உன்னிலென்னைக் கரைத்திடப்பா
என்னில் உன்னைக் காண எனக்கு வரமருள்வாய் ...... 225

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
இந்திரியம் அடக்கி இருந்தும் அறிகிலேன் நான்
மனதை அடக்க வழி ஒனறும் அறிந்திலேன் நான்
ஸ்கந்தா உன் திருவடியைப் பற்றினேன் சிக்கெனவே ...... 230

சிக்கெனப் பற்றினேன் செப்பிடுவீர் உபதேசம்
காமக் கசடுகள் யாவையும் களைந்திடுவாய்
சித்த சுத்தியும் ஜபமும் தந்திடுவாய்
நினைப்பு எல்லாம் நின்னையே நினைந்திடச் செய்திடுவாய்
திருமுருகா உன்னைத் திடமுற நினைத்திடவே ...... 235

திருவருள் தந்திடுவாய் திருவருள்தான் பொங்கிடவே
திருவருள் ஒன்றிலே நிலைபெறச் செய்திடுவாய்
நிலைபெறச் செய்திடுவாய் நித்யானந்தமதில்
நித்யானந்தமே நின்னுரு வாகையினால்
அத்வைதானந்தத்தில் இமைப்பொழுது ஆழ்த்திடுவாய் ...... 240

[இன்னும் நம்மை ஆனந்தத்தில் ஆழ்த்த, கவசம் தொடரும்!]


இடகலை பிங்கலை= முன்னம் சொன்ன ஸோஹம் ஹம்ஸம் எனும் ஹம்ஸ மந்திரம் மூலமமக, இடது, வலது நாசி வழியே செல்லும் காற்று!
நித்யானந்தம்= உனை உணர்ந்ததால் எனக்கு வரும் இன்பம்.
அத்வைதானந்தத்தில்= நீயும் நானும் ஒன்றானோம் எனும் ஆனந்தம்.

0 comments:

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP