Thursday, July 26, 2007

"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]



"கந்தகுரு கவசம்" -- 8 [282-320]
[ஸ்கந்தகிரியின் பெருமையும், அது இருக்கும் இடமும், அத்தலத்தைப் போற்றிடும் பெரியோரைப் பற்றியும் இங்கு சொல்லப்படுகிறது.]

மூவரும் தேவரும் முனிவரும் போற்றிடவே
ஸ்கந்தாஸ்ரமம் தன்னில் ஸ்கந்த ஜோதியுமாய்
ஆத்ம ஜோதியுமாய் அமர்ந்திட்ட ஸ்கந்தகுரு
இருளை அகற்றவே எழுந்திட்ட எங்கள் குரு ...... 285

எல்லை இல்லாத உன் இறைவெளியைக் காட்டிடுவாய்
முக்தியைத் தந்திடுவாய் மூவரும் போற்றிடவே
நம்பினேன் உன்னையே நம்பினேன் ஸ்கந்தகுரோ
உன்னையன்றி இவ்வுலகில் ஒன்றுமில்லை என்றுணர்ந்தேன்
நன்கறிந்து கொண்டேன் நானும் உனதருளால் ...... 290

விட்டிட மாட்டேன் கந்தா வீட தருள்வீரே
நடுநெற்றித் தானத்து நானுனைத் தியானிப்பேன்
ப்ரம்மமந்திரத்தைப் போதித்து வந்திடுவாய்
சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய்
சிவயோகியாக எனைச் செய்திடும் குருநாதா ...... 295

ஆசை அறுத்து அரனடியைக் காட்டிவிடும்
மெய்யடி யராக்கி மெய் வீட்டில் இருத்திவிடும்
கொங்கு நாட்டிலே கோயில் கொண்ட ஸ்கந்தகுரோ
கொல்லிமலை மேலே குமரகுரு வானவனே
கஞ்சமலை சித்தர் போற்றும் ஸ்கந்தகிரி குருநாதா ...... 300

கருவூரார் போற்றும் காங்கேயா கந்தகுரோ
மருதமலைச் சித்தன் மகிழ்ந்துபணி பரமகுரோ
சென்னிமலைக் குமரா சித்தர்க்கு அருள்வோனே
சிவவாக்கியர் சித்தர் உனைச் சிவன் மலையில் போற்றுவரே
பழனியில் போகருமே பாரோர் வாழப் ப்ரதிஷ்டை செய்திட்டார் ...... 305

புலிப்பாணி சித்தர்களால் புடை சூழ்ந்த குமரகுரோ
கொங்கில் மலிந்திட்ட ஸ்கந்த குருநாதா
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ...... 310

ஸ்கந்தகிரி என்பதை தான் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்
பக்தர்களும் போற்றும் பழநிமலை முருகா கேள்
கொங்குதேசத்தில் குன்றுதோறும் குடிகொண்டோய்
சீலம் நிறைந்த சேலம்மா நகரத்தில் ...... 315

கன்னிமார் ஓடையின்மேல் ஸ்கந்தகிரி அதனில்
ஸ்கந்தாஸ் ரமத்தினிலே ஞானஸ்கந்த சத்குருவாய்
அமர்ந்திருக்கும் ஜோதியே ஆதிமூல மானகுரோ
அயர்ச்சியை நீக்கிடுவாய் என் தளர்ச்சியை அகற்றிடுவாய்
சுகவனேசன் மகனே சுப்ரமண்ய ஜோதியே ...... 320

4 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) July 28, 2007 7:36 PM  

இன்றைய பதிவு சித்தர் ஸ்பெஷலா? அருமை SK!

//நால்வர் அருணகிரி நவமிரண்டு சித்தர்களும்//

சித்தர்கள் நவமிரண்டு = பதினெட்டுப் பேர் மட்டும் தான் அல்லவா SK?

பின்னாளிலும் சித்தர்கள் வந்தார்கள்..பட்டினத்துச் சித்தர், பத்ரகிரியார் எல்லாம்...இது பொதுவான பதினெண் சித்தர் கணக்கு என்று நினைக்கிறேன்!

VSK July 28, 2007 11:30 PM  

ஆமாம், ரவி.

பதினெட்டு சித்தர்களைத்தான் இதில் சொல்கிறார் ஸாந்தானந்த ஸ்வாமிகள்!

அடுத்து இன்றும் சித்தர்கள் இருக்கிறார்களே!

கோவி.கண்ணன் July 29, 2007 1:15 AM  

விஎஸ்கே ஐயா,
படம் மலேசியா பத்துமலை முருகன் தானே பார்த்து இருக்கிறேன்.

VSK July 29, 2007 3:16 PM  

அவரேதான் இவர், கோவியாரே!
:))

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP