Friday, March 14, 2008

அருளாளன் வடபழநி ஆண்டி!


வடபழநி முருகன்

======================================================================

அருளாளன் வடபழநி ஆண்டி!

காணிக்கை கேளாமல், என்ற னுக்குக்
கடவுள்திருச் சந்நிதியின் பெருமை சொல்லி
கோணிச்சென் றிடாமல் உள்ளம் நன்கு
குவிந்துதொழ வடபழநிக் கோயில் காட்டி
ஊணிற்கென் றாக்காமல் செவ்வாய் தோறும்
உள்ளுருக்க உயர்வுக்கென் றழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமையினை நான்கண்டு மகிழ லானேன்!

ஞாயிற்றின் பின்னாலே திரியும் திங்கள்;
நடந்துவரும் திங்களுக்குப் பின்னே செவ்வாய்;
ஆயிற்று வடபழநிக் கோயி லில்தான்
அடியேன்நான் கண் விழிப்பேன்; அலறிஓடிப்
போயிற்று உலகநினை வென்கின் றாற்போல்
பொங்கிவரும் கண்ணீரில் எனையி ழப்பேன்!
வாயற்று நின்றுவட பழநிக் குள்ளே
வாழ்வெல்லாம் நானாக வளங்கொ ழிப்பேன்!

பாகாக உருகுகின்ற கிளியென் றென்னைப்
பதமாக இள்முருகன் வருடி விட்டான்;
சாகாத கவலையினைச் சாக வைத்தான்;
சந்ததமும் மெய்ப்பொருளைக் காண வைத்தான்;
போகாத ஊருக்குப் போக வைத்து
புகழ்மலையின் உச்சியிலே வாழ வைத்தான்;
ஆகாத தென்னவெனக் காட்டி விட்டான்
அருளாளன் வடபழநி ஆண்டி தானே!

நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!

தண்டத்தை ஏந்துகிறான்; உலகம் போற்றும்
தவக்கோலம் தாங்குகிறான்; தனியே நின்றிவ்
வண்டத்தை ஆளுகிறான்; நம்பி னோர்க்கிங்(கு)
ஆனந்தம் அருளுகிறான்; அனுப வித்துக்
கண்டத்தை எழுதுகிறேன்; அவனை விட்டால்
கதியில்லை நிம்மதியைக் காண! திங்கள்
துண்டத்தை அணிந்தவனின் மைந்த னைநீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!

- ஆக்கம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள்

”தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே!” என்று என்னவொரு
அழுத்தத்துடன் சொன்னார் பாருங்கள். அதுதான் இப் பாடலின்
முத்தாய்ப்பான வரிகள்

6 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) March 15, 2008 6:37 PM  

செளந்திரா கைலாசம் அவர்களின் அருமையான பாடல் வாத்தியார் ஐயா! பாடலின் சுட்டி இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!

//ஊணிற்கு என்று ஆக்காமல் செவ்வாய் தோறும்
உள் உருக்க உயர்வுக்கு என்று அழைத்த அந்த
மாணிக்கக் குரலுக்குள் குருவின் நாத
மகிமை//

ஆகா...என்ன ஒரு லயிப்புடன் வந்த சொற்கள்!

//நீர்
தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே//

முருகனைத் தொழுதால் மட்டும் போதுமா? தொழுது "இருக்க" வேண்டும்! அப்படி இருந்தால், சொல்வீர் பின்னே! :-)

எனக்கு இந்தப் பாட்டு மிகவும் பிடித்து விட்டது!

SP.VR. SUBBIAH March 16, 2008 4:40 AM  

///ஆகா...என்ன ஒரு லயிப்புடன் வந்த சொற்கள்!///

ஆமாம்,முருகனைப் பற்றி எழுதினாலே ஒரு லயிப்பு வந்துவிடுகிறது கே.ஆர்.எஸ்!

அதுவும் அந்த அம்மையார் போன்ற பக்தைகளுக்குச் சொல்லவா வேண்டும்?

எனக்கு அந்த அம்மையார் எழுதிய பக்திப் பாடல்கள் அனைத்துமே பிடிக்கும்!

தி. ரா. ச.(T.R.C.) March 18, 2008 3:16 AM  

தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே//

தொழுது விட்டு உடனே பலனை எதிர்பார்க்கக் கூடாது. இருந்து பொருத்திருந்து பார்த்தால்தான் அருளின் பெருமை புரியும்.நல்ல பாட்லை தந்தமைக்கு நன்றி

SP.VR. SUBBIAH March 18, 2008 2:58 PM  

////தி.ரா.ச.(T.R.C.) said...

தொழுதிருந்து பாருங்கள்; சொல்வீர் பின்னே//

தொழுது விட்டு உடனே பலனை எதிர்பார்க்கக் கூடாது. இருந்து பொருத்திருந்து பார்த்தால்தான் அருளின் பெருமை புரியும்.நல்ல பாடலை தந்தமைக்கு நன்றி///

வாருங்கள் நண்பரே!
நன்றாகச் சொன்னீர்கள்; நன்றி உரித்தாகுக!

உண்மைத்தமிழன் March 19, 2008 7:47 AM  

//நான்என்ற மமதைக்கே வழிவி டாமல்
நடக்கின்ற தெதுவாக இருந்த போதும்
ஏன்என்ற கேள்விக்கே இடங்கொ டாமல்
எடைபோட்டுப் பார்க்கின்ற மனம்வ ராமல்
கோன்என்ற திருக்குமரன் அளந்தெ டுத்துக்
கொடுப்பதெலாம் அமுதமென்னும் கொள்கை யோடு
தான்இன்று வரை வாழ்ந்து வருகின் றேன்நான்
தனியாக ஓரின்பம் பெறுகின் றேனே!//

ஆஹா. என் உள்ளத்தில் உள்ளதை கண்ணாடி போல் அப்படியே வெளிப்படுத்தியுள்ளாரே அம்மையார்..

முருகா.. நீயே ஆட்டி வைக்கிறாய். நீயே ஆடுகிறாய்.. நீயே அடக்குகிறாய்..

எல்லாம் உன் செயல் அப்பனே..

Subbiah Veerappan March 20, 2008 4:33 PM  

////முருகா.. நீயே ஆட்டி வைக்கிறாய். நீயே ஆடுகிறாய்.. நீயே அடக்குகிறாய்..
எல்லாம் உன் செயல் அப்பனே..////

ஆட்டிவைத்தலிலேயே அடக்குதலும் உள்ளடங்கிவிடுமே சுவாமி?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP