Friday, November 14, 2008

"கந்தன் கருணை" -1

"கந்தன் கருணை" -1

"ஆத்திகம்" வலைப்பூவில் நான் எழுதிவரும் "கந்தன் கருணை"யை இங்கும் பதிய ஆவல்! முடிந்ததும் போடலாம் என்றிருந்தேன். இடையில் இந்த இரு நாட்கள் கிடைத்ததால், முதல் பாகத்தை.... முருகன் பிறப்பு முதல் சூர சம்ஹாரம் முடித்து தேவசேனா திருக்கல்யாணம் வரை.... இன்றும், நாளையுமாய்ப் பதிகிறேன். இரண்டாம் பாகம் விரைவில் வரும்!அங்கு படிக்காதவர்கள் படிக்கலாமே! முருகனருள் முன்னிற்கும்!

"கந்தன் கருணை" -1
['ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்']


காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்



கந்தன் கருணையைப் பாடிடவே
கணபதி தாளினை நான் பிடித்தேன்
தடைகளைத் தாண்டி கருணைவெள்ளம்
மடைதிறந்திங்கே பாய்ந்திடுமே

கணபதி தருவான் அருள்வான்
எம்வாழ்வில் இனிமை சேர்ப்பான் [காலையில்]

சூரன் என்னுமோர் கொடுமரக்கன்
தேவரைச் சிறையினில் வதைசெய்தான்
துயரினை நீக்கிக் காத்திடவே
தேவரும் சிவனை வேண்டிநின்றார்

விமலன் அருளிட நினைந்தார்
விழிமலர் திறந்து அருள்செய்தார் [காலையில்]

நடனம் ஆடிடும் சிவனினின்று
எழுந்தன தீப்பொறி மூவிரண்டு
சீறியே பாய்ந்தன கண்ணினின்று
சேர்ந்தன கங்கையின் கரை புரண்டு

என் முருகன் புகழைப் பாடிடுவேன்
அது ஒன்றே என்செயல் என்றறிந்தேன் [காலையில்]

தீப்பொறி வெப்பம் தாளாது
கங்கையும் வறண்டனள் சோர்ந்திருந்து
சரவணப் பொய்கையில் விட்டனளே
கமலங்கள் ஆறும் மலர்ந்தனவே

என் முருகன் பிறந்தான் பிறந்தான்
என் வாழ்வு சிறந்திட மலர்ந்தான் [காலையில்]

கார்த்திகைப் பெண்டிர் மார்பினிலே
கனியமுதம் அவன் சுவைத்திருந்தான்
அன்னை உமையாள் சேர்த்தணைக்க
ஆறுமுகனாய்ப் பொலிந்திருந்தான்

தன் வண்ணம் காட்டியே சிரித்திருந்தான்
என் எண்ணம் யாவினும் அவன் நிறைந்தான் [காலையில்]

நாரதர் மாங்கனி கொணர்ந்துவர
சிவனதை வென்றிட ஏவிவிட
உலகைச் சுற்றிட மயில் மீது
வலம்வரச் சென்றான் என் முருகன்

கணபதி தாய்தந்தை வலம் வந்து
கனியினைப் பெற்றே சுவைத்திருந்தான் [காலையில்]

வலம்வந்த முருகன் திரும்பிவர
கனியதை அண்ணனிடம் கண்டுவிட
கோபம் கொண்டான் என் முருகன்
ஆண்டியாய் நின்றான் பழநியிலே

அகிலத்திற் கோருண்மை உரைத்துவிட
பாலகன் செய்திட்ட விந்தையிது [காலையில்]

தன்னை மதியா பிரமனிடம்
ஓமெனும் மந்திரப் பொருள்கேட்க
விழித்திட்ட அயனைச் சிறையிலிட்டான்
படைப்புத் தொழிலைக் கையெடுத்தான்

தன்னிகரில்லாத் தலைவனிவன்
என்னவன் புகழை என் சொல்வேன் [காலையில்]

பிரமனைச் சிறைவிட வேண்டிநின்ற
சிவனுக்குப் பொருளை உரைத்திட்டான்
பிரணவத்தின் பொருளைச் சொல்லியதால்
தகப்பன்சாமியாய்ப் பெயர்பெற்றான்


கற்றதன் பொருளை உணர்ந்துகொள்ள
என்னவன் செய்திட்ட லீலையிது [காலையில்]

அரக்கன் சூரனை அழித்திடவே
அன்னையும் தந்தாள் சக்திவேலை
நவவீரர் துணையுடன் புறப்பட்டான்
தென்திசை நோக்கி அவன் சென்றான்


வேலைப் பணிவாய் மனமே- உன்
வினைகள் தீர்ந்திடும் நிஜமே [காலையில்]

செந்தூர்க் கரையில் அவன் நின்றான்
அலைகடல் அதிரவே ஆர்ப்பரித்தான்
வீரவாகுவைத் தூது விட்டான்
வன்முறை தவிர்த்திடக் கெடு வைத்தான்

அழிபவன் எதையும் கேட்பதில்லை
அழிவதும் விதிவசம் நிகழ்வதுவே [காலையில்]

தூதனைச் சூரனும் அவமதித்தான்
முருகனைச் சிறுபிள்ளை என்றிகழ்ந்தான்
போருக்கு வரச் சொல்லி மதியிழந்தான்
அழிவைத் தானே தேடிக் கொண்டான்

இறைவன் முருகன் முறுவல் செய்தான்
கடலினைக் கடந்து ஈழம் வந்தான் [காலையில்]

தாரகன் என்னும் ஒரு தம்பி
சூரனின் சொல்லால் மதியிழந்து
மலையென எதிரில் மறைத்திருந்தான்
மாயக் குகையாய் தடுத்து நின்றான்

உட்சென்ற வீரர்கள் மயங்கி நின்றார்
வெளிவர வழியின்றி கலங்கி நின்றார் [காலையில்]

நிலைமை அறிந்த கந்தவேளும்
வேலினை அனுப்பிட முடிவெடுத்தான்
கூர்வேல் மலையைக் கிழித்ததுவே
மலையெலாம் பொடிப்பொடி ஆனதுவே

தாரகன் அழிந்தான் அழிந்தான்
வீரர்கள் மயக்கம் தெளிந்தார் [காலையில்]

தாரகன் அழிந்த சேதிகேட்டு
தமையன் துடித்தான் ஆத்திரத்தால்
சிங்கமுகாசுரன் எனும் தம்பி
தானே போரிடப் புறப்பட்டான்

தானென்னும் ஆணவம் கொண்டவனும்
தன்கதை முடித்திடப் புறப்பட்டான் [காலையில்]

தலைகள் கீழே விழ விழவே
வேறோர் தலைகள் முளைத்திடவே
வரமதைப் பெற்றிட்ட சிங்கமுகன்
தருக்கினால் கந்தனின் எதிர்வந்தான்

வேலுக்கு முன்னெவர் வரமுமிங்கு
நில்லாதெனவறியா மூடன் [காலையில்]

ஆயிரம் தலைகளை வெட்டியின்னும்
அசையாதிவனும் நிற்கையிலே
பூதப்படைகள் பயந்தோடி
நாலாபுறமாய்ச் சிதறியதே

முருகன் சிரித்தான் சினந்தான்
வேலினை விடுத்தொரு மூச்சு விட்டான் [காலையில்]

சீறிப் பாய்ந்தது வேலங்கு
சிங்கமுகன் மார் துளைத்ததுவே
சிரத்தைக் கொய்து வேலவனின்
காலடியில் கொண்டு சேர்த்ததுவே

அரக்கனும் மடிந்தான் அழிந்திட்டான்
பூதப் படைகளும் எழுந்தனவே!

காலையில் எழுந்ததும் சேவலின் கூவலைநான் கேட்டேன்
சோலையில் கூவிடும் இன்னிசைக் குயிலொலிநான் கேட்டேன்
என் முருகன் இவனே இவனே எனச் சூடிடும் உரு பார்த்தேன்
என் குமரன் அழகன் இவனே எனப் பாடல்கள் புனைந்திருந்தேன்

*********************************
[கந்தன் கருணை நாளை தொடரும்!]

1 comments:

Kannabiran, Ravi Shankar (KRS) November 15, 2008 2:19 PM  

//அங்கு படிக்காதவர்கள் படிக்கலாமே!//

அங்கு படித்தவர்கள் இங்கும் படிப்போமே! :)

சினிமா ஸ்டைலில் மொத்த கந்த புராணமும் கொடுத்துவிடுங்கள் SK! வித்தியாசமான முயற்சி! பாராட்டுக்கள்!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP