Sunday, October 18, 2009

“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!” - சஷ்டி பதிவு!

“முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!


முன்னிற்கும் முருகனருள் என்றைக்கும் காத்திருக்கும்

தன்னிச்சை இல்லாது நிகழ்வனைத்தும் பார்த்திருக்கும்

வருவானே வடிவேலன் வள்ளலென வழங்கவே

தருவானே பெறுவானே தடையின்றி அனைத்தையுமே!



இறையிலர் எனச்சிலர் பகர்வதும் கேட்டேன்

முறையிலா மொழியென நின்னால் புரிந்தேன்

வரையிலா அன்பினை வற்றாது வழங்கும்

ஒருமுகம் கண்டதில் இறையெது தெளிந்தேன்!



நினைத்திடும் பொழுதெலாம் களிப்பினைத் தந்திடும்

இனித்திடும் கணங்களைத் தந்ததும் நீயே

இனித்தினம் நினைத்திட வைத்திடும் வண்ணம்

எனக்குளே இனிப்புடன் விதைத்ததும் நீயே!



அன்புடன் அழைத்ததும் அருகமர்ந்து கொண்டதும்

இன்புறும் மொழிகளை எளிதெனச் சொன்னதும்

என்புடல் உருகிட எண்ணங்கள் தந்ததும்

இன்றுயான் நினைக்கினும் சிலிர்த்திட வைக்குதே!



அருள்மிகு தோற்றம் அன்புரை பொழியும்

குழந்தையாய்ச் சிரித்து களிப்புறும் தேற்றம்

தருவதைத் தெளிவாய்த் திகட்டா வண்ணம்

அருளிடும் அன்பினில் எனைக்கரைய வைத்தாய்!



இருந்திடும் நொடிகள் ஒருசிலவாயினும்

அருந்திடும் அமுதினை வார்த்துநீ நின்றாய்

பருகிடும் பாலனின் தாயவள் பரிவினைக்

குழந்தையாய் வந்தே தாயுமாய் நின்றாய்!



படித்தது போதும் பயிற்சியில் முயல்வாய்

பிடித்ததில் பிடித்ததைப் பயனுறச் செய்வாய்

கொடுத்திடமட்டுமே அன்னைக்குத் தெரியும்

எடுப்பது ஒன்றே இங்கு யாம்செய்யும் வேலை!



ஏதிலார் குற்றம் இங்குனக்கு வேண்டாம்

தீதிலா மொழிகளை தினமும் பயில்வாய்

ஓதுதல் முடித்து உணருதல் செய்வாய்

காதலால் கசிந்து தாயவள் வருவாள்!



இயக்கம் நிகழ்வதும் இறையவள் செயலே

தயக்கம் இன்றியே தாளினைப் பணிவாய்

மயக்கம் விடுத்து மனநிறை கொள்வாய்

செயலின்விளைவை அவளிடம் விடுவாய்!



புரிந்ததில் புரிந்தது மிகமிகக் கொஞ்சம்

உரைத்திடும் மொழிகளில் உணர்ந்ததும் கொஞ்சம்

வருந்திடும் பயிருக்கு வளமெனப் பாய்ந்தாய்

இருந்திடும் நாட்களை நிறைவாகச் செய்தாய்!



எண்ணிடும் போதினில் மனமும் மகிழ்ந்திடும்

இன்னருள் தருபவன் அவனே இறைவன்

மண்ணினில் மாந்தரில் அப்படிச் சிலரும்

இருப்பதனாலே வான்மழை பொழியுது!



காண்பன யாவையும் நின்னில் நிறையே

கண்டதும் இங்கே கனிவின் எழிலே

கண்டதைச் சொல்லிடக் கலக்கம் இல்லை

விண்டதைப் பகிர்வதே களிப்பின் எல்லை!



சொன்னதைச் சொல்வது சொல்லிட இனிக்குது

சொன்னதை நினைப்பது சுகமாய் இருக்குது

சொன்னதை உன்னுதல் இத்தனைச் சுகமெனில்

சொன்னதைச் செய்வது பேரருள் தருமே!



சொன்னதில் சிலதே சொல்லிட வைத்தது

இன்னமும் சொல்லிட இறையருள் வேண்டும்

சொன்னதில் பிழைகள் இருந்திடக் கூடும்

முன்னவன் முருகன் முன்னின்று காப்பான்!

**************************

4 comments:

VSK October 18, 2009 9:50 AM  

அனைவருக்கும் முருகனருள் முன்னிற்கும்!!

Kannabiran, Ravi Shankar (KRS) October 18, 2009 9:57 AM  

சஷ்டிப் பதிவு முதல் நாள்!
முருகனருள் வலைப்பூவில் முருகனருள் முன்னின்று காக்க என்று துவங்குவதும் பொருத்தம் தான்!

நன்றி SK ஐயா!

Kannabiran, Ravi Shankar (KRS) October 18, 2009 9:59 AM  

//இறையிலர் எனச்சிலர் பகர்வதும் கேட்டேன்//

ஹா ஹா ஹா!
"இல்லை" என்ற சொல்லிலும் "உளன்"!

உளதாய், இலதாய்
...
அருள்வாய் குகனே!

VSK October 18, 2009 10:29 PM  

வந்தருள் தந்தமைக்கு மிக்க நன்றி ரவி!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP