Sunday, March 28, 2010

முருகனருள் 149: உனக்கும் எனக்கும் கல்யாணமா!!!

முருகனருள் வலைப்பூ 150-ஐ தொடும் நல்வேளையிலே...
மங்களகரமாக இங்கு ஒரு திருமணம்!
அப்படியே கற்பனை பண்ணிப் பார்த்துக்கோங்க அந்த அழகுத் திருக்கல்யாணத்தை!

* பேரழகுப் பெட்டகமான மயிலார், முருக மா பிள்ளையை, முருக மாப்பிள்ளையாக்கி, பறந்தடித்துக் கொண்டு வர...
* நிகழும் திருவள்ளுவராண்டு 2041, பங்குனித் திங்கள் பதினைந்தாம் நாள் (29-Mar-2010), உத்திர நட்சத்திரம் கூடிய பங்குனி உத்திர நன்னாளிலே...

* மத்தளம் கொட்ட, வரிசங்கம் நின்றூத,
* அடியார்கள் வாழ, அரங்கநகர் வாழ, செந்தில் மா நகரும் சிறப்புடனே தாம் வாழ,
* ஆன்றோர்-சான்றோர்-ஆச்சார்யர்கள் மங்களாசாசனம் பாட
* ஆழ்வார்கள்-நாயன்மார்கள் நாலாயிரப் பாசுரங்களாலும், தேவாரப் பதிகங்களாலும் நல்லாசி கூற,
* எற்றைக்கும், ஏழேழ் பிறவிக்குமாய்,
* காதல் திருமணம் இனிதே நடக்கின்ற போழ்தினிலே,

* அன்பர்கள்-அடியார்கள் நீங்கள் எல்லாரும்...
* சுற்றமும் நட்பும் சூழ வந்திருந்து,
* முத்துடை தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ் எழுந்தருளி,
* பல்லாண்டு பல்லாண்டு என்னுமாறும்,
* கண்ணாரக் கண்டு, கையாரத் தொழுது,
* தம்பதிகளை ஆசிர்வதித்து அருளுமாறு விண்ணப்பம்!




ஆகா! யாருப்பா தம்பதிகள்? யாருக்கும் யாருக்கும் கல்யாணம்? :)

வாரணமாயிரம் சூழ வலஞ் செய்து-ன்னு, தோழி கோதையின் கனவு எல்லாருக்கும் தெரியும்! ஆனால்...ஆனால்...இதோ....பின்வரும் பாட்டை எங்காச்சும் படிச்சிருக்கீங்களா-ன்னு பாருங்க? :)

இன்னைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்
என்னை உடையவன் எழில்முருகத் திருநம்பி
முன்னை என் கால்பற்றி, முன்றில் அம்மியின் மேல்,
நன்மெட்டி நாண் பூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான்!

இது போல ஒரு பத்து பாசுரம் இருக்கு! அதை முருகனருளான மாதவிப் பந்தலில் அப்பறமா இடுகிறேன்!
இப்போ கல்யாணப் பந்தல்-ல கூடுவோம்!
அப்பறமா மாதவிப் பந்தல்-ல கூடுவோம்! :)



இன்னும் சில மணி நேரத்தில் முருகனருள்-150 உதிக்கப் போகிறது!
இப்போது சிற்றஞ் சிறுகாலே!
உலகம் உவப்ப பலர் புகழ் ஞாயிறு.....பதிவு கண்டாங்கு!

முருகனருள்-150, கவிநயா அக்காவின் காவடிச் சிந்து என்று முன்னமே முடிவாகி விட்டது!
பங்குனி உத்திரம் அன்னிக்கி இட, ஷைலஜா அக்காவும் ஒரு பாட்டு எழுதி அனுப்பி இருந்தார்! சபாஷ் சரியான போட்டி! :)

பங்குனி உத்திரம் = முருகனுக்குத் திருமண நாள் ஆகையாலே...
கொஞ்சம் உரிமை எடுத்துக்கிட்டு,
ஷை-அக்காவின் கவிதையை, கல்யாணக் கவிதையா, மாற்றி விட்டேன்!
அக்காவும், பெரிய மனசு பண்ணி, என்னை மன்னிச்சிட்டாங்க! அப்படித் தானே-க்கா? :)

சில வரிகளை மட்டுமே கல்யாணத்துக்கு ஒட்டி வருவது போல் மாற்றம் செஞ்சேன்!
அக்காவின் வைர வரிகளில் எல்லாம் கை வைக்கவில்லை!
மாங்கல்யத் தங்க வரிகளில் மட்டுமே தங்க வைத்தேன்:)

* அப்போ, கண்ணன் பாட்டு-99: அடியேன் எழுதிய கவிதையை, ஷைலஜா அக்கா பாடித் தந்தாங்க!
* இப்போ, முருகனருள்-149: அக்கா எழுதிய கவிதையை, அடியேன் பாடித் தருகிறேன்!

நன்றிக்...கடன் பல தீர்த்து.........கந்தன் என்னை அழைத்துக் கொள்ளட்டும்!
இதோ...பாடலும்...இசையும்...சிறப்புப் பதிவுமாய்...



முருகனருள்-149!



[தடை நீங்கி....திருமண உறுதியும் அறிவிப்பும்]

திருச்செந்தூர் என்ன வெகு தூரமா? - உன்
திருவடி அன்றி வேறு பரிகாரமா?
ஒருச்செந்தூர் அங்கே நம் மனத்தோரமா
உனக்கும் எனக்கும் திருக் கல்யாணமா!!!

[திருமணம் - திருமாங்கல்யம் - அம்மி மிதித்தல்]

வாள்கொண்ட கண்ணுக்கு மை தீட்டினேன் - உன்னை
வரவேற்கச் செவ்வாழைக் கை நீட்டினேன்!
ஆட்கொண்டு மாங்கல்யம் தனைப் பூட்டினாய் - என்னை
கைப்பற்றிக் கால்பற்றிச் சுகம் கூட்டினாய்!

[முதல் இரவு - பாலும் பழமும்]

பால்தந்து உனக்கென்னைத் தேர் ஆக்கினேன்!
பழம்தந்துன் பழந்தோல்வி நேர் ஆக்கினேன்!
தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!
தமிழ்தந்துன் திருமார்பில் கரைந்து ஆடினேன்!

[எந்நாளும்...]

காதல்கொண்டார் சொல்லும் சொல் என்னவோ? - என்
வேதமும் நீ அன்றி வேறென்னவோ?
சாதல் வந்தால் கூட கவலை இல்லை! - என்
சங்கீதம் நீயன்றி வேறு இல்லை!!!
முருகா! முருகா! முருகா! முருகா!


உன் கையை நீநீநீட்டி.......என் கையை ஈஈஈட்டிக் கொள்!
தாவிப் படரக் கொழு கொம்பு இல்லை!
கொழு கொம்பு வேண்டேன்! கந்து தனையே வேண்டினேன்!

கந்தா...கை நீநீநீட்டி கையைப் பற்றிக் கொள்!
தனிக் கொடியை, தணி-கைக் கொடியைச் சுற்றிக் கொள்!

உன் கையும் உண்டு, எனக்கொரு மெய்த் துணையே! முருகாஆ!

கந்தனுக்காகத் தான் கண்ட கனாவினை
முந்துற மாதவிப் பந்தல் பகர்ந்து என்
அந்தமும் ஆவியும் நீயே நீயெனச்
செந்தூர் அவனிடம் சென்று சேர்மினே!

18 comments:

Kavinaya March 28, 2010 10:30 PM  

பாடலும் நீங்கள் பாடியிருக்கும் விதமும் வெகு அழகு.

ஷைலஜா March 28, 2010 10:55 PM  

பாடலை சிறப்பித்த அன்புத்தம்பிக்கு நன்றி முதல்ல...வரேன் முழுப்பதிவையும் படிச்சிட்டு!

Rajewh March 29, 2010 1:23 AM  

அருமை . மிக்க நன்றி

Test March 29, 2010 11:39 AM  

பாடல் அழகா, பாடியது அழகா பட்டிமன்றமே நடத்தலாம்.... அருமை KRS அவர்களே

Srirangam V Mohanarangan March 29, 2010 12:44 PM  

என்ன கண்ணபிரான்! அசத்துறீரு ஐயா! மின் மணல் வெளியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் போல் உள்ளது. :--)))

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:37 PM  

//கவிநயா said...
பாடலும் நீங்கள் பாடியிருக்கும் விதமும் வெகு அழகு//

நன்றி-க்கா!
நான் பாட எல்லாம் இல்லை! சும்மா மனசுக்குள்ளாற பேசினேன்! :)

சரி..எங்கே 150-க்கு நீங்க ஆளையே காணோம்! நீங்க தானே அங்கு விண்மீன்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:38 PM  

//ஷைலஜா said...
பாடலை சிறப்பித்த அன்புத்தம்பிக்கு நன்றி முதல்ல...//

பாடலை மாற்றிய படுபாவித் தம்பி-ன்னு வேணும்-ன்னா சொல்லுங்க! ஒத்துக்கறேன்! :)

//வரேன் முழுப்பதிவையும் படிச்சிட்டு!//

வாங்க வாங்க! நீங்க இல்லாம எப்படி இந்தக் கல்யாணம் நடக்கும்? :)

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:41 PM  

//Sri Kamalakkanni Amman Temple said...
அருமை . மிக்க நன்றி//

என்ன ராஜேஷ்! அங்கயும் இங்கயும் ஓட விடறேனா?
பந்தலுக்கும் முருகனருளுக்கும் அப்படி ஒரு "இது"! :)

கல்யாணம்-ன்னாலே ஓடியாடி வேலை செய்ய வேணாமா? அதான்! நீங்க செய்யாம வேற யாரு செய்வா? :)

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:44 PM  

//Logan said...
பாடல் அழகா, பாடியது அழகா பட்டிமன்றமே நடத்தலாம்.... அருமை KRS அவர்களே//

பாடும் போது ஒரு இடத்தில்...கடைசிப் பத்தியில்...கொஞ்சம் அடைச்சிக்கிச்சு! சட்-ன்னு தொடர முடியலை...சரி இன்னொரு முறை பாடிறலாமா-ன்னு யோசிச்சேன்! அப்பறம் அப்படியே விட்டுட்டேன் லோகன்!

Kannabiran, Ravi Shankar (KRS) March 29, 2010 2:46 PM  

//Srirangam V Mohanarangan said...
என்ன கண்ணபிரான்! அசத்துறீரு ஐயா! மின் மணல் வெளியில் ஒரு தண்ணீர்ப் பந்தல் போல் உள்ளது. :--)))//

ரங்கன் சார்...நீங்களா? என்னோட வாரணமாயிரத்துக்கு ஏதாச்சும் திட்டப் போறீங்களோ-ன்னு பயமா இருந்திச்சி! :))

தண்ணீர்ப் பந்தலா? மாதவிப் பந்தல்-ல எல்லாப் பந்தலும் இருக்கு போல! :)

வல்லிசிம்ஹன் March 29, 2010 8:30 PM  

ஷை அக்கா எழுத தம்பி ரவி பாட, திருமணம் கண்ட கந்த முருகனுக்கு ஆரத்தி எடுக்க இதோ நாங்கள் வந்துவிட்டோம்.
150க்கும் வாழ்த்துகள். ஆன்மீகம் தழைக்க ,மாதவிப்பந்தல் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்க நீண்ட நாள் தழைத்தோங்கி சிறக்கணும்.

குமரன் (Kumaran) March 29, 2010 9:45 PM  

திருக்கலியாணம் என்றால் மங்கலம் என்று பொருள்!

பொங்கும் மங்கலம் எங்கும் தங்குக!

மாதவிப்பந்தல் மட்டுமின்றி மாதவிப்பந்தலாரும் நித்யகல்யாண மூர்த்தியாகத் திகழட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 4:57 PM  

//வல்லிசிம்ஹன்
ஷை அக்கா எழுத தம்பி ரவி பாட, திருமணம் கண்ட கந்த முருகனுக்கு ஆரத்தி எடுக்க இதோ நாங்கள் வந்துவிட்டோம்//

ஆரத்தி எடுத்தா தட்டுல காசு போடணும்! அடுத்த முறை சென்னை வரும் போது போட்டுடறேன் வல்லீம்மா! :)

//150க்கும் வாழ்த்துகள்//

ஆசிக்கு நன்றி வல்லீம்மா!

//ஆன்மீகம் தழைக்க ,மாதவிப்பந்தல் எல்லோருக்கும் அடைக்கலம் கொடுக்க நீண்ட நாள் தழைத்தோங்கி சிறக்கணும்//

என்னது இது மாதவிப் பந்தல்-ன்னு சொல்றீங்க?
ஆன்மீகம் தழைக்க, முருகனருள், நீண்ட நாள் தழைத்தோங்கி சிறக்கணும்-ன்னு மாத்தி ஆசிர்வாதம் பண்ணுங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 5:12 PM  

//குமரன் (Kumaran) said...
திருக்கலியாணம் என்றால் மங்கலம் என்று பொருள்!//

கல்யாண குணம் போலவா குமரன்? :)

//மாதவிப்பந்தல் மட்டுமின்றி மாதவிப்பந்தலாரும் நித்யகல்யாண மூர்த்தியாகத் திகழட்டும்!//

நித்ய கல்யாண மூர்த்தியா?
உம்ம்ம்..
எனக்கு என்ன சொல்றது-ன்னே தெரியலை குமரன் அண்ணா! ஆசிக்கு நன்றி மட்டும் சொல்லிக்கறேன்! உங்கள் ஆசி முன்பு கூட உடனே நிகழ்ந்துள்ளது!

சரீ...என்ன இது நீங்களும் மாதவிப் பந்தல்-ன்னே சொல்றீங்க வல்லியம்மாவைப் போல! என் முருகனருளுக்கு ஆசி கூறுங்கள்!

Kannabiran, Ravi Shankar (KRS) March 30, 2010 5:22 PM  

நம் முருகனருளுக்கும் ஆசி கூறுங்கள்! :)

VSK April 10, 2010 11:15 PM  

//தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!//

முதலிரவுக்குப் பொருத்தமில்லாத வரி!! எங்க தேவசேனா முருகனோட தூக்கத்தை காண விரைந்து ஓடினார்னு சொல்றது .... கோவம் கோவமா வருது! :)))

அதைத் தவிர மத்ததெல்லாம் சூப்பர்!

Kannabiran, Ravi Shankar (KRS) April 11, 2010 12:21 PM  

//
//தோள்தந்து துயில்காண விரைந்து ஓடினேன்!//
முதலிரவுக்குப் பொருத்தமில்லாத வரி!! எங்க தேவசேனா முருகனோட தூக்கத்தை காண விரைந்து ஓடினார்னு சொல்றது .... கோவம் கோவமா வருது! :))//

:)
வாங்க SK ஐயா!
முதலிரவுக்குப் பொருத்தம் இல்லாத வரியா? எது? துயில் காண-என்று பாடியதா? ஹிஹி! முதலிரவு ஃபுல்லா துயிலவே மாட்டாங்களா என்ன? :)

Kannabiran, Ravi Shankar (KRS) April 11, 2010 12:37 PM  

பாட்டை இன்னொருகா வாசிங்க!

வெறும் துயில் இல்லை!
தோள் தந்து துயில்!
காலை முழுக்க கல்யாணம்! இரவு முழுக்க கள்யாணம்!
களைப்பா இருக்கும்-ல்ல? :)

குப்புறப் படுத்து அடிச்சிப் போட்டாப் போல தூங்குவது இல்லை! = அது தூக்கம்! துஞ்சுவது!
இது வேற! இது துயில்! அறி துயில்! தோள் தந்து துயில்!

பஸ்ஸிலே புது மண ஜோடி, தோள் தந்து துயில் கொள்வதைப் பார்த்து இருக்கீக தானே? :)

செல்ல்லலமா, மெல்ல்ல்லமா...
இவள் தோளிலே அவன் துயில,
அவன் தலைமேல் இவள் சாய..
மந்திர பாஷைகளுக்கு இடையே
மயக்கும் துயில்! அறி துயில்!
1st Half-இடையில் களைப்பாறும் துயில்!
2nd Half செல்லும் முன் இளைப்பாறும் துயில்!

இதுக்கு மேல சொல்ல எனக்கு வெட்கமா இருக்கு! :)

தோள் தந்து துயில் காண...
"விரைந்து ஓடினேன்" என்று அறைக்குள் "மெய்" பேசி,
நாளை காலை யாராச்சும் கேட்டா "பொய்" பேசுவேன்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP