Thursday, May 27, 2010

பித்துக்குளி - ஜிரா எழுதும் பதிவு - சிந்திக்கிலேன்!

முன்பு கண்ணன் பாட்டில், பித்துக்குளி ஹிட்ஸ் வரிசையில், "பால் வடியும் முகம் நினைந்து நினைந்தென் உள்ளம்" என்ற Fast Beat கண்ணன் பாட்டைப் பார்த்தோம் அல்லவா? அதே அலைவரிசையில், பித்துக்குளியார் முத்துக் குளித்த முருகன் பாடல்களை, முருகனருள் வலைப்பூவிலும் தொடர்ந்து காண்போம்! வாருங்கள்!


 
இன்று மிகவும் இயைந்து வரும் தினம்! மூவரின் பிறந்த நாள்! 
1. தமிழ்க் கடவுள் - என் காதல் முருகப் பெருமான் 
2. வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன் (எ) நம்மாழ்வார்
இருவருமே வைகாசி விசாகத்தில் தோன்றியவர்கள் தான்! 
இந்த ஆண்டோ, வைகாசி விசாகம், May-27 அன்று வருவதால்... இவர்களுடன் சேர்ந்து பிறந்தநாள் கொண்டாடிக் கொள்ளும்... 
3. தோழன் இராகவன் (எ) ஜிரா... 

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் முருகா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாறா! 
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :) 

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பல்லாண்டு பல்லாண்டு! 
  மகரந்தம் என்றும், இனியது கேட்கின் என்றும்...முன்னொரு காலத்தில் பல பதிவுகள் வாரி வழங்கிய கைகளால்...... இராகவன் கைகளால்...
ரொம்ப நாள் கழிச்சி...இன்றைய முருகனருள் பதிவு எழுதப்படுகிறது! இனி... இராகவன் கரம்; என் கரம்... இடையே பித்துக்குளிக்கு மட்டும்!
 
சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! - எதிரில் நிற்கும் எதிரியின் முகத்தில்! நாம் நிறைய தவறு செய்திருக்கிறோம். குற்றம் செய்திருக்கிறோம். ஆண்டவன் நமக்கும் வாழ்வளிப்பானா என்று என்றைக்காவது ஐயம் ஏற்பட்டால் இந்தக் கந்தர் அலங்காரப் பாடலைப் படியுங்கள், உண்மை விளங்கும். 

நாம் புகழாததால், நாம் வணங்காததால், நாம் நினைக்காததால் ஆண்டவன் நம்மை ஒரு போதும் தண்டிக்கப் போவதில்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொதுவானவர். தன்னை வணங்காதவரைத் தண்டிக்க அவர் இரண்டாந்தர எஜமானன் இல்லை. அவர் அனைவருக்கும் பொது. நல்லவருக்கு ஆன அதே இறைவனே தீயவனுக்கும். இருவரையும் வாழ்விக்க வேண்டிய கடமை ஆண்டவனுக்கு உண்டு. 

போருக்குப் போகிறான் சூரன். அவனது முகம் கடுகடுவென இருக்கிறது. செக்கச் சிவந்து இரத்த நிறத்தில் இருக்கிறது. கண் பார்வையில் அனல் பறக்கிறது. முருகனை ஒரு பிடி பிடிக்கவேண்டும் என்ற வெறியோடு போகிறான். போர்க்களத்தில் முருகனும் நிற்கின்றார். முருகனைப் பார்த்த சூரனுக்கு வியப்பு. பின்னே. புன்னகை தவழ குளிர் முகத்தோடு வந்து நின்றால்? 

கச்சியப்பர் சொல்கின்றார். "முழு மதியன்ன ஆறுமுகங்களும் முந்நான்காகும் விழிகளின் அருளும் வேறுள படையி சீரும் அணிமணி தண்டையார்க்கும் செழுமலரடியும் கண்டாண்". 
 ஆக சூரனுக்குத் தான் முருகன் மேல் ஆத்திரம். ஆனால் முருகனுக்கோ சூரன் மேல் அன்பு. குளிக்காமல் போவதால் ஆறு நம் மீது கோவிக்குமா? நாம் குளிக்கப் போனால் நம்மைத் தூய்மைப் படுத்துவது ஆறு. அப்படித்தான் முருகக் கடவுளும். நாம் வணங்கினால் நம்மை வாழ்விப்பார். நாம் வணங்காமல் போனால் நம்மை கோவிக்கவே மாட்டார். 

இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் என்று உணர்த்தும் தத்துவம். இது தமிழுக்கு மட்டுமே உரியது.

சரி......பித்துக்குளி-ன்னாலே என்ன ஞாபகத்துக்கு வரும்? எனக்கு என் முருகன் ஞாபகம் வருவான்! :) அப்பறமா முருகதாஸ்-இன் கூலிங் க்ளாஸ், தலையில் காவி Scarf! :) மனுசன் அப்பவே என்ன ஸ்டைலா இருக்காரு-ன்னு பாருங்க! :)) பித்துக்குளி முருகதாஸ் அவர்களின் இயற்பெயர் பாலசுப்ரமணியம்! கோயம்புத்தூர் காரரு! இந்தக் கொங்கு நாட்டுத் தங்கம், எதையும் கொஞ்சம் வித்தியாசமா பண்ணும்! நல்ல கர்நாடகப் பாடல்களை, அப்படியே இழு இழு-ன்னு இழுக்காம, கூட்டான பஜனை ஸ்டைலில், மக்களோடு மக்களாச் சேர்ந்து, அழகாகப் பாடிக் காட்டியவர்!

இதனால் தான், இந்தக் காலத்திலும், ஹார்மோனியம் மட்டுமே வச்சிக்கிட்டு, கல்லூரி மாணவர்களைக் கூடப் பித்துக்குளிக்கு, "ஓ" போட வைக்குது! Fast Beat காவடிச் சிந்தை, செஞ்சுருட்டி/நாதநாமக் கிரியை-ன்னு ராகத்தில் போடறது தப்பில்லை! ஆனா காவடிச் சிந்தின் அந்த ஜீவனான "துள்ளல்" போயிறக் கூடாதுல்ல? சில பண்டிதர்கள் அதை இழுத்து இழுத்தே ஜீவனைப் போக்கிருவாங்க! :) 

ஆனால் நம்ம பித்துக்குளியாரின் காவடிச் சிந்தைக் கேட்டுப் பாருங்க! "சுருட்டி" ராகமும் இருக்கும்! காவடியைச் "சுருட்டிக்"கிட்டு போகாமலும் இருக்கும்! :) சான்றாக, இந்தப் பாட்டையே எடுத்துக்கோங்களேன்! = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்! அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒருநாளும்! அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒருநாளும்!

இந்தப் பாடல் = சிந்திக்கிலேன் நின்று சேவிக்கிலேன்... அருணகிரிநாதர், தம் வாயாலும் மனத்தாலும் அலங்காரம் செய்து பார்த்த கந்தர் அலங்காரப் பாடல்! - இதை முருகதாஸ் எப்படி Handle பண்றாரு? * திருப் பரங்கிரி தனில் உறை, சரவண பெருமாளே-ன்னு, திருப்புகழை Hum பண்ணி ஆரம்பிக்கறாங்க திருமதி. பித்துக்குளி - தேவி சரோஜா! 
* அடுத்து, சிந்திக்கிலேன்ன்ன்ன்ன்ன் என்று ஏன்ன்-கறாரு, ஏங்கறாரு பித்துக்குளி! - கந்தர் அலங்காரம்
* கந்தர் அலங்காரத்தில் இருந்து மீண்டும் திருப்புகழுக்குத் தாவறாங்க! ஒரு டெம்ப்போ உருவாக்க, மெல்லிய பஜனை...மக்களோடு! கேட்டுக்கிட்டே பதிவை வாசிக்க, இதோ சொடுக்குங்கள்: பித்துக்குளியின் மாயக்குரலில்!


சிந்திக்கிலேன், நின்று சேவிக்கிலேன், தண்டைச் சிற்றடியை
வந்திக்கிலேன், ஒன்றும் வாழ்த்துகிலேன், மயில் வாகனனைச்
சந்திக்கிலேன், பொய்யை நிந்திக்கிலேன், உண்மை சாதிக்கிலேன்,
புந்திக் கிலேசமும் காயக் கிலேசமும் போக்குதற்கே!!!

சிந்திக்கிலேன் = முருகா உன்னைப் பற்றி உள்ளத்தில் கொஞ்சமும் சிந்திக்கவில்லை 
நின்று சேவிக்கிலேன் = உன்னை "நின்று" சேவிக்கவில்லை! "நின்று" வணங்கவில்லை 
தண்டைச் சிற்றடியை வந்திக்கிலேன் - அணிமணி தண்டை அணிந்த உனது செந்தாமரைப் பாதங்களை நான் கண்டு வழிபடவில்லை 
ஒன்றும் வாழ்த்துகிலேன் - ஒருமுறையாவது உனது பெயரைச் சொல்லியும் புகழைப் பாடியும் வாழ்த்தவில்லை 

மயில் வாகனனைச் சந்திக்கிலேன் - மயில் மீது அமர்ந்த ஐயனே உன்னைத் தேடி வந்து சரணடையவில்லை 
பொய்யை நிந்திக்கிலேன் உண்மை சாதிக்கிலேன் - பொய்யை நிந்தித்து உண்மையே பேசி வாழவில்லை. (பொய்யா விளக்கே விளக்கு என்கிறார் வள்ளுவர். அத்தோடு பொய்மையும் வாய்மையிடத்து புரை தீர்த்த.) 
புந்திக் கிலேசமும் - அறிவில் ஏற்படும் துன்பமும் 
காயக் கிலேசமும் - உடலில் ஏற்படும் துன்பமும் 
போக்குதற்கே - தீர்வதற்கே! 

முருகா, உன்னைப் புகழ்ந்து ஒன்றும் சொல்லாது போனாலும், உன்னை வணங்காது போனாலும், உனது புகழைப் பாடாது போனாலும்... உடலால், மனதால் அடையும் துன்பங்களைக் களைந்து, எங்களைக் காக்கின்ற உன் கருணைக்கு அளவுண்டோ! 

சிந்திக்கிலேன் = சரி! அது என்ன "நின்று" சேவிக்கிலேன்?
சொல்லுங்க பார்ப்போம்!  "நின்னாத்" தான் சேவிக்க முடியுமா? நடந்தோ, உட்கார்ந்தோ, படுத்தோ, மனசாலயே சேவிக்க முடியாதா? தரையில் உருண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்து, படுத்து எல்லாம் சேவிக்கிறாங்களே! ஏன் அருணகிரி, "நின்று" சேவிக்கிலேன் என்பதை மட்டும் குறிப்பிட்டுச் சொல்லுறாரு? சொல்லுங்க பார்ப்போம்! 

பின்னூட்டத்தில் நீங்கள் "நின்று" பேசிய பின், நாளைக்கி இங்கு செல்லுங்கள்! அங்கே விடை உண்டு! முருகக் கொடை உண்டு! மயிலின் நடை உண்டு! தடைக்குத் தடை உண்டு! 

அன்புடன், கோ.இராகவன் Ref: http://iniyathu.blogspot.com/2005/12/blog-post.html

அன்பே...உன்னைச் சிந்திக்கவே இல்லை....ஒரு நாளும்! 
அன்பே...உன்னைச் சேவிக்கவே இல்லை....ஒரு நாளும்! அன்பே, உன்னை "நின்று" சேவிக்கிலேன்! முருகாஆஆஆ!

6 comments:

Kavinaya May 27, 2010 7:52 AM  

வருக ஜிரா! உங்கள் வரவு நல்வரவாகுக! :)

பதிவு இன்னும் சரியா படிக்கலை. படமெல்லாம் நல்லா பார்த்தேன். வெகு அழகு. மெதுவா வரேன்...

Kannabiran, Ravi Shankar (KRS) May 27, 2010 11:17 AM  

//வருக ஜிரா! உங்கள் வரவு நல்வரவாகுக! :)//

நன்றி கவிநயா! :)
(அப்பாடா, அக்காவைப் பேரைச் சொல்லிக் கூப்டாச்சு! :)

//படமெல்லாம் நல்லா பார்த்தேன். வெகு அழகு//

எந்தப் படம்? Kites-aa? or Robinhood?? :)

Test May 29, 2010 12:39 AM  

புதிய பாடலுக்கு நன்றி, தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்

தக்குடு May 29, 2010 2:14 AM  

ஜிரா anna is back!!!!...;) good post.

Kannabiran, Ravi Shankar (KRS) June 01, 2010 12:45 PM  

//Logan said...
புதிய பாடலுக்கு நன்றி, தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்//

பாடல் புதுசு இல்லீங்க லோகன்! பழசு தான்! அருணகிரி போட்டது!
நம்ம பித்துக்குளி அதைப் புதுசு போல அழகா நகாசு செஞ்சிப் பாடி இருக்காரு!

//தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார்கள்//

யாரு? அருணகிரியா? ஜிரா-வா?? :)

Kannabiran, Ravi Shankar (KRS) June 01, 2010 1:01 PM  

//தக்குடுபாண்டி said...
ஜிரா anna is back!!!!...;)//

அவரு back இல்ல! அவரு என்னிக்குமே front தான்!
நான் தான் back-la இருக்கேன் கணேசா! :)

//good post//

அது என்ன அருணகிரியின் பாட்டுப் பதிவில் வந்து பீட்டர் விடறீக? :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP