Wednesday, July 07, 2010

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு: தமிழ்க்கடவுள் முருகன்!

காணாமல் போனவர் பற்றிய அறிவிப்பு!
தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை!
வயது = ஆறில் இருந்து அறுபது வரை!
உயரம் = 5 அடி 11 அங்குலம்!
நிறம் = சிவப்பு (சேயோன்)

சுருள் முடி, சூரியக் கண்கள்
சுறுசுறு மூக்கு, சுவை இதழ்கள்
ஆறிரு திண் புயத்து அழகிய மார்பு
இஞ்சி இடுப்பு, இக-பர வளைவு
அதற்கும் கீழே....
இல்லை...அதற்கும் மேலே...

இதயம்!
- இது மட்டும் அவனுக்கு இருக்கவே இருக்காது!



மூவிரு முகங்கள் போற்றி, முகம் பொழி கருணை போற்றி என்று ஒப்புக்குப் பாடுவார்கள்! ஏன்?
இதயத்தில் தானே கருணை பொழியும்?
இவனுக்குத் தான் இதயமே இல்லையே! அதான் "முகம்" பொழி கருணை போற்றி என்று பாடல்!

பார்த்தவுடன் சொல்லவல்ல குணாதிசயங்கள்:

* மெத்த திமிர் பிடித்தவன் - பிடிவாதம் ஜாஸ்தி
* கொஞ்சம் வீரன் - கையில் வேல் இருக்கும்! - ஆனால் அதை "விட" எல்லாம் தெரியாது! சும்மாத் "தொட" மட்டுமே தெரியும்!
- தொளைபட்டு உருவத் "தொடு"வேலவனே, "தொடு"வேலவனே-ன்னு தான் இவனைச் சொல்லுவாங்க!

* சுமாரான அழகன் - மீசையில்லாத முகத்தை வச்சிக்கிட்டு ஊரை ஏமாற்றுபவன்
* அலங்காரப் பிரியன் - ஷோக்குப் பேர்வழி! நல்லா டிரெஸ் பண்ணுவான்! உடம்பில் சந்தனம் போல ஒரு மெல்லிய வாசனை வீசும்
* சரியான அலைஞ்சான்....பார்வை கண்டபடி மேயும்...மனம் முந்தியதோ, விழி முந்தியதோ, கரம் முந்தியதோ எனவே...

* நெற்றியில் மெல்லீசா மண்ணு போல திருநீறு இருக்கும்! அதை இவனே அப்பப்போ அழிச்சி விட்டுக்குவான்!
* பைக் ஓட்டக் கூடத் தெரியாது! வெறும் மொபெட் தான்! அதான், தானே ஓடவல்ல திறமையுள்ள மயிலை ஏமாத்தி, தன் பிடிக்குள்ளாற வச்சிருக்கான்!

* இவனுக்கு வெற்றி இல்லை! வேலுக்குத் தான் வெற்றி! - வெற்றிவேல் என்று வேலைத் தான் கூப்பிடுவாங்க! இவனை அல்ல!
இவன் சும்மா "தொடுவதோடு" சரி! மத்ததெல்லாம் வேலே தன் திறமையால் பார்த்துக்கும்!



இந்த மாங்கா தான் என் காதலன்! இந்த poRkki தான் என் pokkisham!
எல்லாம் என் விதி! - இவன் வந்து வாய்த்து விட்டான்!
கருவாய், உயிராய், கதியாய், "விதியாய்" - வாய்த்து விட்டான்!

இவனைத் தான் பல நாளாக் காணவில்லை!
ஆறு முகங்களைப் பார்த்து ஆறு மாசம் ஆகுது!
என்னமோ ஒரு மாதிரியாகவே இருக்கு!

இவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....
தக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு! - வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
யாராச்சும்....இந்தக் காணாமப் போனவனை....கண்டு பிடிச்சித் தருமாறு உங்களை இறைஞ்சுகிறேன்! டேய்...எங்க இருந்தாலும் வந்துருடா.....வந்துருவ தானே?

ஆறுமோ ஆவல்? ஆறுமுகனை நேரில்...காணாது....


இன்று முருகனருளில் இந்தப் பிரபலமான பாடல்! கேட்டுக்கிட்டே படிங்க!
The Best of MLV - எம்.எல்.வசந்தகுமாரி - Must Listen!

குன்னக்குடி வயலினில்

சுதா ரகுநாதன் குரலில், கீழே:


ஆறுமோ ஆவல்?
ஆறுமுகனை நேரில்...காணாது
(ஆறுமோ ஆவல்?)

ஏறு மயிலேறி, குன்றுதோறும் நின்று ஆடியவன்
பெரும் புகழைத் தெரிந்தும், அவன் பேரழகைப்...பருகாமல்

(ஆறுமோ ஆவல்?)

ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ? கூறுதற்கு இல்லாமல்
அற்புத தரிசனம், கற்பனை செய்தால் மட்டும்....
(ஆறுமோ ஆவல்?)

வரிகள்: கண்ணன் ஐயங்கார்
ராகம்: மாண்டு
தாளம்: ஆதி

* கண்ணன் ஐயங்கார் சிறந்த வைணவ அறிஞர்! இராமானுச தொண்டு குழுமத்தைச் சேர்ந்தவர்! அவர் பாடல்களில் என்றும் நிலைத்தது இந்த முருகன் பாட்டே!
* மாண்டு என்பது துள்ளலான கம்பீர ராகம்! மாண்ட் என்று இந்துஸ்தானி இசையிலும் குறிப்பிடுவார்கள்! மாசிலா நிலவே நம்..., ஜாதி மல்லிப் பூச்சரமே போன்ற பாடல்கள் எல்லாம் இந்த மெட்டில் தான்!


ஆறு முகத்தால், ஆறு மோகத்தால் - ஆறுமோ என் ஆவல்?

வாழ்வே கற்பனையாகிப் போனதா?...
கற்பனையே வாழ்வாகிப் போனதா?...
ஆறுமோ என் ஆவல்?
செந்தூர் முருகா சேர்த்துக் கொள்!

14 comments:

Rajewh July 08, 2010 1:26 AM  

இவனைக் கண்டு பிடித்துத் தருவோர்க்கு, எந்தை, எம்பெருமான்.......அதான் இவன் மாமன்....
தக்க சன்மானம் கொடுப்பதாகச் சொல்லி இருக்காரு!::)))


நீயல்லால் தெய்வமில்லை
எனது நெஞ்சே நீவாழும் எல்லை முருகா!

உங்க நெஞ்சுல இருக்காரு கண்டு பிடிச்சிட்டேன்
எங்கே சன்மானம்??

பிரகாசம் July 08, 2010 2:19 AM  

சூத மிகவளர் சோலை மருவுசு
வாமி மலைதனி ...... லுறைவோனே

சூர னுடலற வாரி சுவறிட
வேலை விடவல ...... பெருமாளே.


இந்த முருகன் நமக்கெல்லாம் தெரியாமல் சுவாமிமலையில் அருணகிரிநாதருக்கு மட்டும் வேலை விட்டெறிந்து வேடிக்கை காட்டியிருக்கிறான். என்ன ஓரவஞ்சனை பாருங்கள்.

நீங்கள் தேடும் ஆறுமுகனை நேற்றே நான் மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். எனக்கும் கொஞ்சம் சன்மானம் அனுப்பி வையுங்கள்

இதயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருந்தால் ஒரு இதயத்தை வைத்துக்கொண்டு எத்தனை பேருக்கு அருள்புரிவது. ஆறுமுகங்கள் மூலம் அதிகம் பேருக்கு அருள்புரியலாமே. மேலும் இதயத்தில் உள்ளது வெளியே தெரியாது. ஆனால் எங்களைப் போல் முருகனிடம் செல்பவர்கள் அவன் சிரித்த முகத்தைப் பார்த்தவுடனே நம் காரியம் ஆகிவிடும் என்று தெம்பாக வரலாமே.

Kannabiran, Ravi Shankar (KRS) July 08, 2010 10:09 AM  

@ராஜேஷ்
//உங்க நெஞ்சுல இருக்காரு கண்டு பிடிச்சிட்டேன்
எங்கே சன்மானம்??//

:)
என் நெஞ்சா? அதான் என் கிட்ட இல்லையே!
அதைத் திருடிக் கொண்டு தானே காணாமப் போனான்!

களவாணியைக் கண்டுபுடிச்சி தரச்சொன்னாக்கா,
அவன் திருடிக் கொண்ட போன பொருளில் தான் இப்போ அவனோட கை இருக்கு! கண்டுபுடிச்சாச்சி! சன்மானம் குடுங்க-ன்னா எப்படி? :))

குமரன் (Kumaran) July 08, 2010 10:21 AM  

இடுகையின் முதல் பாதிக்கு எனது வண்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)

Kannabiran, Ravi Shankar (KRS) July 08, 2010 12:21 PM  

//குமரன் (Kumaran) said...
இடுகையின் முதல் பாதிக்கு எனது வண்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். :-)//

வ"ண்"மையான கண்டனமா? அவ்ளோ வள்ளலா நீங்க? :)

எதுக்கு கண்டனம் குமரன்? முகம் பொழி கருணை-ன்னு பாட்டின் பொருள் எல்லாம் சரியாத் தானே சொல்லி இருக்கேன்?

Kannabiran, Ravi Shankar (KRS) July 08, 2010 12:30 PM  

//பிரகாசம் said...
வேலை விடவல ...... பெருமாளே//

வாங்க பிரகாசம் ஐயா!
அப்போ கூடப் பாருங்க! வேலை விட்ட முருகா இல்லை! வேலை விட "வல" முருகா தான்! விடவல, விடவல :)

//நீங்கள் தேடும் ஆறுமுகனை நேற்றே நான் மின்னஞ்சலில் அனுப்பி விட்டேன். எனக்கும் கொஞ்சம் சன்மானம் அனுப்பி வையுங்கள்//

போச்சுறா!
நான் தேடுவது என் முருகனை! ஆறுமுகன், பன்னிரு கையன், பதினெட்டு கண்ணனை அல்ல! :))

//இதயம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இருந்தால் ஒரு இதயத்தை வைத்துக்கொண்டு எத்தனை பேருக்கு அருள்புரிவது. ஆறுமுகங்கள் மூலம் அதிகம் பேருக்கு அருள்புரியலாமே//

ஹிஹி! ஒரு முகத்துல மூஞ்சைத் தூக்கி வச்சிப்பான்! அதுவே தாங்காது! ஆறு முகமும் மூஞ்சி தூக்கி வச்சிக்கிட்டா? :)

//மேலும் இதயத்தில் உள்ளது வெளியே தெரியாது. ஆனால் எங்களைப் போல் முருகனிடம் செல்பவர்கள் அவன் சிரித்த முகத்தைப் பார்த்தவுடனே நம் காரியம் ஆகிவிடும் என்று தெம்பாக வரலாமே//

இது என்னமோ சரி தான்!
உங்களைப் போல் முருகனிடம் செல்பவர்களுக்கு கட்டாயம் அவன் முகம் வேணும்!
ஆனால் எனக்கு இதயம் தான் வேணும்! அவன் மூஞ்சி அவன் கிட்டயே இருக்கட்டும்! :)

உண்மைத்தமிழன் July 08, 2010 1:02 PM  

கண்ணா..!

நீ ஆறு மாசமாத்தான தேடிக்கிட்டிருக்க..!

நான் நாப்பது வருஷமா தேடிக்கிட்டிருக்கேன்..!

நேர்ல மட்டும் சிக்கட்டும்.. வைச்சிக்கிறேன் மவனை..!?????

Kannabiran, Ravi Shankar (KRS) July 08, 2010 2:26 PM  

//கண்ணா..!
நீ ஆறு மாசமாத்தான தேடிக்கிட்டிருக்க..!//

ஆமா அண்ணாச்சி!
அப்பல்லாம் கூடவே தான் இருந்தான்! இப்போ தான் ஆறு மாசமாக் காணாமப் போயிட்டான் போல! ஆனா அவனே மனசு கேட்காம வந்துருவான் பாருங்க!

//நான் நாப்பது வருஷமா தேடிக்கிட்டிருக்கேன்..!//

Too Long! :)

//நேர்ல மட்டும் சிக்கட்டும்.. வைச்சிக்கிறேன் மவனை..!?????//

No way! I am here to protect him! :)

Jayashree July 09, 2010 2:26 AM  

Thanks a million Mr KRS.
என் பையனோட GUESS WHAT மாதிரி KRS ஓட "GUESS WHAT "அதிசய பட வைக்குமானு ஆவல்ல வந்து பாத்தேன்! (ஆ)சாமி ஏமத்தல!!:))எத்தனை வருஷம் கழித்து கேக்கறேன். கண்ணை நனைத்தது. நன்னா இருக்கணும்ப்பா.
அச்சா முருகனைக் காணுமா? எல்லாரும் சொல்லற மாதிரி நெஞ்ச குஹையில் தேடினா கிடைப்பான் குஹன்!! நா(ள்)ட் கணக்கு இல்லை நாட்டக் கணக்கு!!!!!:((
சரி மயில் கிட்ட கேக்கலாம் கொணர்த்தி உன் இறைவனையேனு சீக்கரம்!

வால்பையன் July 09, 2010 6:39 AM  

//தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை!//


மூணாவது பிகர் செட் பண்ண போயிட்டாரோ என்னவோ!

Kannabiran, Ravi Shankar (KRS) July 09, 2010 1:16 PM  

//வால்பையன் said...
//தமிழ்க் கடவுள் முருகன் என்பவனைக் காணவில்லை!//

மூணாவது பிகர் செட் பண்ண போயிட்டாரோ என்னவோ!
//

:)
நம்மையெல்லாம் செட் பண்ணித் தன்னிடம் சேர்த்துக் கொள்ளவே நேரஞ் சரியா இருக்காம் அண்ணாச்சி! அதுனால நோ மூனாவது ஃபிகர்! :)

தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ மயில் வாகனனே!
- முருகா, தாழ்வானவைகளை நீ செய்ய மாட்டாயே, என் விஷயத்தில் மட்டும் ஏன் இப்படி-ன்னு ஏற்கனவே ஒருத்தர் கோச்சிக்கிட்டாரு!
அதுனால இப்பல்லாம் என் முருகன் நெம்ப நல்லவன் ஆயிட்டான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) July 09, 2010 1:28 PM  

//Jayashree said...
Thanks a million Mr KRS.
என் பையனோட GUESS WHAT மாதிரி KRS ஓட "GUESS WHAT "அதிசய பட வைக்குமானு ஆவல்ல வந்து பாத்தேன்! (ஆ)சாமி ஏமத்தல!!:))//

ஓ நீங்களும் ஆறுமோ ஆவல்-ல்ல தான் வந்து பார்த்தீங்களா ஜெயஸ்ரீ அம்மா! ஏதோ உங்கள ஏமாத்தாம இருந்தேனே! அது வரைக்கும் ஓக்கே! :)

//எத்தனை வருஷம் கழித்து கேக்கறேன். கண்ணை நனைத்தது. நன்னா இருக்கணும்ப்பா//

நன்றி-ம்மா!
எம்.எல்.வி பாடும் கம்பீரத் தொனி, உங்களுக்குப் பிடிக்கும்-ன்னு தெரியும்! எங்கும் சரியாக் கிடைக்கல! அதான் கொஞ்சம் தேடி இட்டேன்!

//அச்சா முருகனைக் காணுமா? எல்லாரும் சொல்லற மாதிரி நெஞ்ச குஹையில் தேடினா கிடைப்பான் குஹன்!! //

நெஞ்சமே என் கிட்ட இல்லையே! அப்பறம் நான் எங்க-ன்னு தேடறது?

பாவிப் பைய, அவன் சென்றதோடு மட்டுமல்லாமல், என் நெஞ்சையும் அல்லவா லபக்-கிட்டு போயிட்டான்! குகை இருந்தாத் தானே குகனை அதில் தேட? அதான் ஆதாரமே இல்லாமப் பண்ணிட்டானே! :(

//சரி மயில் கிட்ட கேக்கலாம் கொணர்த்தி உன் இறைவனையேனு சீக்கரம்!//

அந்த ஒரே ஒரு நம்பிக்கையைத் தான் நம்பிக் கை பற்றி இருக்கேன்!

எளியவ, என் இறைவ
குக எனநினை எனதுஎதிரே
வெளிநிகழ் திரள் களைமீன்
மிளிர்சினை என மிடைவான்

பளபள என மினுமா
பலசிறை விரி தருநீள்
குளிர்மணி விழி மயிலே
கொணர்தி உன் இறைவனையே!

கொணர்தி என் இறைவனையே!
கொணர்தி என் இறைவனையே!

நாமக்கல் சிபி July 20, 2010 2:11 AM  

Namma Manasukkullaiye Olinji vilaiyaduran!

Sethu Subramanian August 27, 2014 4:41 PM  

பெரும் புகழைத் ---> (pErum pugazhum) பேரும் புகழும்
The first letter should be a neDil letter "pE" and not "pe"

Also it is "தீனர்க்கருள்" and not as written. தீனர்க்கருள் means "one who offers his grace to the unfortunate"

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP