Tuesday, September 28, 2010

வை+ணவ முருகா வருகவே! வாராதிருக்க வழக்குண்டோ?

பல சமயங்களில் மனம் பேதலிக்கும் போது, நமக்குன்னே இருக்கும் ஒரு ஜீவன், இங்கே, இப்போது வந்தால், எவ்வளவு இதமா இருக்கும்?
மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே! தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!

-
இப்படியெல்லாம் ஏக்கம் வந்தால், அப்போது என் நெஞ்சில் ஓடும் பாட்டு.......இது தான்!

இந்த முருகன் பாட்டை எழுதியவர் ஒரு "வைணவர்"!
அப்படி-ன்னு உலகம் முத்திரை குத்தி வச்சிருக்கு!
வை+நவமோ, வையாத+நவமோ...
இந்த வைணவத்தை என் முருகன் தழுவிக் கொண்டான்!

அந்தக் கதை அங்கே! அந்தப் பாடல் இங்கே!




பேராதரிக்கும் அடியவர் தம்
பிறப்பை ஒழித்துப் பெருவாழ்வும்

பேறும் கொடுக்க வரும் பிள்ளைப்
பெருமான் என்னும் பேராளா!!

சேரா நிருதர் குல கலகா,
சேவற் கொடியாய்த் திருச்செந்தூர்த்

தேவா, தேவர் சிறைமீட்ட
செல்வா என்று உன் திருமுகத்தைப்


பாரா மகிழ்ந்து முலைத் தாயார்
பரவிப் புகழ்ந்து விருப்புடன் அப்பா

வா வா என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால்


வாரா திருக்க வழக்கு உண்டோ?
வடிவேல் முருகா வருகவே


வளரும் களபக் குரும்பை முலை
வள்ளிக் கணவா வருகவே!!



பாடல்: திருச்செந்தூர் பிள்ளைத் தமிழ்
பாடியது: பகழிக் கூத்தர்

வைணவன் என்று சிலர், இகழிக் கூத்தனாய் இகழ்ந்தாலும்,
வை+நவா என்று அவன், பகழிக் கூத்தனை அணைத்துக் கொண்டான்!

மடி மீது தலை வைத்து விடியும் வரை தூங்குவேனே!
தூங்குவது போல் தூங்கினாலும், அப்பப்போ அவன் மடியிலிருந்தே அவன் முகத்தை அரைக் கண்ணால் முழுங்குவேனே!
வாரா திருக்க வழக்கு உண்டோ? வடிவேல் முருகா வருகவே!!
பாரா திருக்க அறுமுகம் ஏன்?
பேதையைப் பார்க்க வருகவே!!

12 comments:

குமரன் (Kumaran) September 29, 2010 7:59 AM  

பாடல் விளக்கமும் சொன்னீங்கன்னா நல்லா இருக்கும் இரவி. புரியலை.

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 9:52 AM  

அறி-வினாவா? அரி-வினாவா? குமரன் :)

குமரன் (Kumaran) September 29, 2010 9:56 AM  

ரெண்டுமே இல்லை இரவி. நெசமாவே புரியலை. முதல் வரியே புரியலை.

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 11:08 AM  

உம்ம்ம்...
முதல்வனையே புரிந்து கொள்ளும் உங்களுக்கா முதல்வரி புரியவில்லை? வியப்பு தான்! முதலிலும் முற்றிலும் முருகா என்று வியப்புடன் விதப்பான் பொருள் இதோ...

பேராதரிக்கும் = பேர் ஆதரிக்கும்
உன் பேரை ஆதரிக்கும் அன்பர்கள்!

அவன் தான் நம்மை ஆதரிக்கணும்?
நாம் போய் எப்படி சர்வசக்தி படைத்த அவனை ஆதரிக்க முடியும்?
- என்று கூடத் தோனாது,

அந்த முருகன் "பேருக்கு" ஒரு குறையும் வந்துவிடக் கூடாதே என்று அந்தப் "பேரை" ஆதரித்துக் கொண்டே இருப்பார்களாம்! அதான் பேர் ஆதரிக்கும் அடியவர் தம்!

பேருக்கு அவன் பேரை வாயில் தரிப்போர் சிலர்!
அவன் பேர் ஆதரித்துப் பேரைத் தரிப்போர் சிலர்!

இப்படி பேர் ஆதரிக்கும் அன்பருக்கு பேறு கொடுக்கும் பிள்ளைப் பெருமான், இந்த முருகன்!

அவன் "பேரே" என்னைத் தாங்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 11:12 AM  

நிருதர் = அசுரர்
சேரா நிருதர் = இடம் காட்டியும் சேராதவர்கள், அந்த நிருதர்களுக்கு...

குல கலகா = கலகம் செய்பவன்! கலகத்தில் தானே வழி பிறக்கும்?

சேவற் கொடியாய் = கலகத்தில் உதித்த வெற்றிக் கொடியாய், சேவல் கொடி பறக்க...

திருச்செந்தூர்த் தேவா = செந்தூர் துரையே! என் செந்தூரப் பூவே!

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 11:20 AM  

தேவர் சிறைமீட்ட செல்வா = அமரர்களை எப்படியோ சிறை மீட்டாய்!

என்று உன் திருமுகத்தைப் பாரா மகிழ்ந்து = உன் முகத்தைப் பார்க்கா விட்டாலும், உன் பேரைச் சொல்லியே மகிழும் போது...

முலைத் தாயார் = முலை சுரக்கின்றது!

பரவிப் புகழ்ந்து விருப்புடன், "அப்பா வா வா" என்று உன்னைப் போற்றப்
பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் = இதுக்குப் பொருளே தேவை இல்லையே!

வாரா திருக்க வழக்கு உண்டோ? = வராமல் இருக்கும் வழக்கம் தகுமா?

வடிவேல் முருகா வருகவே = வடி வேல் என்னும் வினைத் தொகையால், என்னை வடித்து, வடித்துக் கொண்டு, வடிக்கப் போகும் வடிவேலா...வாடா...

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 11:40 AM  

//வளரும் களபக் குரும்பை முலை//

:)
களபம் = வாசமுள்ள சாந்து

குரும்பை = தென்னங் குருத்து, பனங் குருத்து-ன்னு சொல்றோம்-ல்ல! குரும்பை = இளம் தென்னை/பனை = இளநீர்-ன்னு வச்சிக்கோங்க!

சாந்து பூசி,
முற்றி விடாது,
இளநீர் போல் வளரும் மார்பகங்கள்!

அது என்ன "வளரும்" களபக் குரும்பை?

இளநீரை உடனே மரத்தில் இருந்து பறிக்க மாட்டார்கள்! சற்று வளரவும் விட்டு, முற்றவும் விடாது பறிப்பார்கள்! வளர்ந்து கொண்டே இருக்கும் போது பறிப்பார்கள்! அது போல் "வளரும்" குரும்பை!

இதுக்கே ராகவன், "அச்சோ என்ன ஆச்சு? புனித பிம்பம் இப்பிடியெல்லாம் பப்ளிக்கா பேசுதே"-ன்னு சொல்லப் போறான்! :)

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 11:54 AM  

முலைக் குரும்பை எப்போது வளரும்? =
* தரணும் போல் இருந்தால் வளரும்!
* பெறணும் போல் இருந்தால் தளரும்! வளராது!

அந்தப் பெண்,
* தாயாய் இருந்தால் = தரணும் போல் இருந்தால் தான் வளரும்!
* காதலியாய் இருந்தாலும் = தரணும் போல் இருந்தால் தான் வளரும்!

தருதலில் உள்ள சுகம்
பெறுதலில் உள்ள சுகத்தை விட அதிகம்!

அதனால் தான் "தர வேணும்" என்ற உணர்வுக்கு மட்டும் "வளர்கிறது"!

அய்யோ, சேய் துடிக்கிறதே/சேயோன் துடிக்கிறானே...என்று "நினைத்த" மாத்திரத்தில் வளர்கிறது! "உன்னித்து" எழுந்தன என் தட முலைகள்!

"உன்னித்து" என்றால் கூர்மை அல்ல!
எதிர் கருத்துக்கு மன்னிச்சிக்கோ ராகவா!
அவன்/அது தவிக்கிறதே என்று என்று "நினைத்த" மாத்திரத்தில் எழுந்தன என் தட முலைகள்!

வளரும் களபக் குரும்பை முலை
வள்ளி = இப்படியான பேதையே..

கணவா வருகவே = பேதையின் கண்ணாளா வருகவே!

ஒரு திரு முருகா வருகவே!
உன் பேர் ஆ-தரித்து நிற்கும் பேதைக்கு வருக வருகவே!!

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 12:59 PM  

இது உனக்காக "உன்னித்து" எழுந்த தமிழ், ராகவா!

*உன்னித்து* வைத்த பொருளோடு இவை நான்கும்
மன்னிய ஏதம் தரும் - பதினெண்கீழ்க் கணக்கு - ஆசாரக் கோவை
(கூராய் வச்ச பொருள் பெருமை தரும்-ன்னா அர்த்தம்? :)

*உன்னித்து* துயிலும் பொழுதின் கண்
உமையோர் பாகம் உடையார் தாம் - அப்பர் தேவாரம்

*உன்னித்து* மற்றொரு தெய்வம் தொழாள் - திருவாய்மொழி
(Sharp-ஆக இன்னொரு தெய்வம் தொழாளா? :)

ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் **உன்னித்தே** - ஆழ்வார்(?) அருளிச் செயல்

*உன்னித்து* உணர்ந்த முலை ஆளும் வித்தகனை - பெரிய திருமொழி

ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கே என்று
**உன்னித்து** எழுந்த என் தடமுலைகள் - கோதைத் தமிழ்

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 1:53 PM  

கூர்மையான முலையாக இருந்தால் ஆளைக் குத்தி விடும்! குழந்தைக்கு ஊட்ட முடியாது! ரத்தக் களறி தான்!

கலவியில் நகக் கீறல்கள் கூடப் பரவாயில்லை!:) ஆனால் கத்தி போல் குத்தி முதுகு வழியாக வரும் கூர் முலைக்கு எந்த ஆணும் இன்பமா இருக்க மாட்டான்! பயப்படுவான்! :) சும்மா தற்குறிப்பேற்றமாக வேண்டுமானால் ஒரு கவிதையில் பாடலாம்! ஆனால் பொதுவாகத் தமிழில், கூர் முலை = திரண்ட முலை! சால, உறு, தவ, நனி, கூர், கழி-யில் உள்ள கூர் = மிகுதி/திரளைக் குறிக்கும்! அதான் கூர் முலை=திரண்ட முலை!

முருக அன்பர்களுக்கு முருக அன்பர்களே துணை போலும்! பாருங்கள் அருணகிரித் திருப்புகழை...

அடல்வடி வேல்கள் வாளிகள்
இவைவிட ஓடல் நேர்படு
மயில் விழியாலும் மாலெனும்...மதவேழத்

அளவிய கோடு போல்வினை அளவளவான கூர்முலை,
அதில் முகம்மூடு ஆடையின்...அழகாலும்

அளவு அளவான கூர் முலையாம்! அதில் முகம் மூடுகிறானாம்!

Sharp-ஆன முலை என்றா பொருள்?
திருப்புகழுக்கு என்றே இருக்கும் முருகன் தளத்தில், kaumaram.com, என்ன பொருள்-ன்னு பாக்கறீங்களா? இதோ http://www.kaumaram.com/thiru/nt0728.html

அளவளவான கூர் முலை = அளவே அளவாகக் கொண்டதுமான, "மிக்கெழுந்த மார்பகத்தாலும்"-ன்னு சொல்லுறாங்க!

"கூர்" முலை = மிக்கு எழுந்த மார்பகம்
தவ நனி "கூர்" கழி! = மிகுதி, திரள், திரண்டு

முருக அன்பர்களுக்குக் கடைசி வரை கைகொடுப்பது முருக அன்பர்கள் தானே ராகவா?
உனக்காக "உன்னித்து" எழுந்த என் தமிழ்!

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 1:54 PM  

ஆக
* உன்னித்து = நினைத்து
* கூர் முலை = திரண்ட முலை

அவன்/அது தவிக்கிறதே என்று என்று "நினைத்த" மாத்திரத்தில் எழுந்தன என் தட முலைகள்!

Kannabiran, Ravi Shankar (KRS) September 29, 2010 2:17 PM  

நாம Back to piLLai tamizh வந்துருவோம் ராகவா! முலை இன்பம் போதும்! :)

நக்கீரர்-குமரன் பாட்டுக்குப் பொருள் சரியா இருக்கா-ன்னு சரி பார்த்துச் சரியாச் சொல்லட்டும்! :)

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP