Sunday, November 07, 2010

கந்த சஷ்டி 3 - தமிழ்ச் சினிமாவில் "திருப்புகழ்"!

"அருணகிரிநாதர்" என்றொரு தமிழ்ப் படம்!
TMS அவர்களே அருணகிரியாக.. முழு நீளத்துக்கும் நடிச்ச படம்!


வாரியார் சுவாமிகள், சீர்காழி, எம்.எஸ்.வி போன்றவர்களும் திரையில் தோன்றியுள்ளார்கள்!
ஆனால் "முழு நீளத்துக்கும்" முருகத் திரையில் தோன்றும் நற்பேறு TMS-க்கு மட்டும் தான் வாய்த்தது!

படத்தில் அருணகிரியின் முழுக் கதையும் "ஒருவாறு" சொல்லி இருப்பார்கள்!

ஆனாலும் இன்னும் செவ்வியாகச் சொல்லி இருக்கலாம் என்பது என் தோழனின் கருத்து!
இன்னொரு படம் எடுத்து அருணகிரியை முழுக்கச் சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் அவனுக்கு உண்டு!

ஆனால் சுட்டிச் சுட்டி ரோபோ காலத்தில் அருணகிரியெல்லாம் சாத்தியம் ஆகுமா என்ன? :)
ஆகும்! சாத்தியம் ஆகும்!
சத்தியம் என்றுமே சாத்தியம் ஆகும்!

பக்த ராமதாசு என்ற படத்தில், யாருமே எதிர்பாராத நாகார்ஜூனா நடித்துச் சாத்தியப்படவில்லையா என்ன?
அன்னமய்யா என்ற படமும் அதே நாகார்ஜூனாவால் பெரும் வெற்றி பெற்றதே!

மாலவன் சொத்து மருகனுக்கே அல்லவா! வேங்கடவன் வெற்றி போல் வேலவனின் வெற்றியும் என்றும் சாத்தியமே!
தேவை: தகுந்த முனைப்பும், வெறுப்பு கலவாது அனைவரும் விரும்புமாறு வழங்கிடும் முறையும், எடுத்துக் கொண்ட பொருளின் நிறையும் மட்டுமே!



அருணகிரிநாதர் படத்தால் ஒரு சில திருப்புகழ்ப் பாடல்கள் மிகவும் பிரபலமாயின!
"முத்தைத் தரு பத்தித் திருநகை" என்ற முதல் திருப்புகழ்
= அந்தப் படத்தால் தான், தமிழ்நாட்டில் பலரையும் சென்று அடைந்தது!

TMS செய்த முருகத் தொண்டுகளில் இது முக்கியமான ஒன்று!

வாயில் நுழையாத வேகத் தமிழை
அனைவர் வாயிலும் நுழைய வைத்துக் காட்டினார் TMS!

அந்தப் படத்தால், எத்தனை பேர் போட்டி போட்டுக் கொண்டு திருப்புகழை மனப்பாடம் செய்தார்கள்!!

அதற்கு முன்பும், அதே பாட்டை ஓதுவார்களும் பாடினார்கள் தான்! ஆனால் மக்களைச் சென்றடையவில்லை!
நீட்டி முழக்கும் இசையாக மட்டுமே அந்தத் திருப்புகழ் முன்பு ஓதப்பட்டு வந்தது! அதைக் கம்பீர இசையாக மாற்றிக் காட்டியது இந்தத் திரைப்படம்!

இன்றும் தமிழ்நாட்டில்..
முருகன் பரவலாக பறந்து வருகிறான் என்றால் = அதற்குத் திரைப்படங்களின் பங்கு மகத்தானது! 

ஒரு கட்டத்தில், முருகன் படங்கள் போல், வேறெந்த திரைப்படங்களும், திரைப்படப் பாடல்களும் அப்படி உருவாகவில்லை!
70s & 80s = தமிழ்ச் சினிமாவின் பொற்காலம்! அந்தப் பொற்-காலத்தில், வெள்ளித்-திரைக்கு "முருகக் காய்ச்சல்" பிடித்துக் கொண்டது!:)

1. கந்தன் கருணை
2. தெய்வம்

3. திருவருள்
4. துணைவன்

5. வருவான் வடிவேலன்
6. யாமிருக்கப் பயமேன்
7. முருகன் அடிமை

8. கந்தர் அலங்காரம்
9. சஷ்டி விரதம்

10. வேலும் மயிலும் துணை 
11. மனிதனும் தெய்வமாகலாம்
12. வேலுண்டு வினையில்லை
13. திருவிளையாடல் - partly
14. ஸ்ரீ வள்ளி - old & new
15 ...& அருணகிரிநாதர் - 
etc etc main movies... & other lil' scenes in so many films!:)

இன்னிக்கும் பலருக்கு...
மனத்திலே, முருகன் மாயம் செய்கிறான் என்றால்...
= சிறு வயதில் பார்த்த, இந்தச் சினிமாக்களின் பங்கு மிக மிக உண்டு!

கே.பி.சுந்தராம்பாள் அம்மா & சீர்காழி-டி.எம்.எஸ்
ஏ.பி நாகராஜன்-கே.சங்கர்
தேவர் ஃபிலிம்ஸ் என்று அத்தனையும் ஒன்று சேர்ந்த மகத்தான கால கட்டம்!
சினிமாவில் பக்திப் பாடல்கள்-ன்னா..
அது முருகன் பாடல்கள் தான் என்ற நிலை அப்போது!:)


இதுவே..
தமிழ்க் கடவுள்-ன்னா = அது முருகன் மட்டுமே...
என்ற "தோற்றத்தையும்" சேர்த்தே உருவாக்கியது= சினிமாவின் சக்தி அப்படி! :)




சொல்லப் போனால் "தமிழ்க் கடவுள்" என்ற பதம் எந்த இலக்கியத்திலும் நேரடியாகச் சொல்லப்படவில்லை!
பண்டைத் தமிழ்ப் பண்பாட்டில் இறையியல் தொன்மத்தைக் காட்ட வந்த சொல் அஃது!

தொல்காப்பிய கால கட்டத்திலேயே திருமாலும் முருகனும் - இருவரும் தமிழ்க் கடவுளே! கொற்றவையும் கூட..
இருவருமே தமிழர்களின் அக-புற வாழ்வில் ஊறி இருந்ததைக் காட்டும் சங்க இலக்கியம் = மொத்த தொகுப்பும் இங்கே!

தமிழ்க் கடவுள்-ன்னா, அது முருகன் மட்டுமே என்ற தோற்றத்தையும் தெரிந்தோ தெரியாமலோ உருவாக்கியது சினிமாவின் சக்தி! :)
"இறையனாரும் எம்பெருமான் முருகவேளும் கட்டிக் காத்த தமிழ்ச் சங்கத்திலே"...என்று ஏபி நாகராஜனின் "வெறும்" வசனமே "தரவு" ஆகியது! :)

மாயோன் மேய மன் பெரும் சிறப்பின்.. தொல்காப்பியத் தமிழ் உலகம்..
*முன்னை மரபின் பெரும்பெயர் முதல்வ= திருமால்
*அரும் பெறல் மரபின் பெரும் பெயர் = முருகஇதெல்லாம், சினிமாவின் முன் எம்மாத்திரம்??
அட, தொல்காப்பியம் பெரிதா, சினிமா பெரிதா?? :)




தேவர் பிலிம்ஸ் = இதுக்கு ஒரு முக்கியக் காரணம்!
சிறந்த இயக்குநர்களான (என் அபிமான) ஏ.பி. நாகராஜன் & கே. சங்கர் = மற்றொரு காரணம்!
எம்.ஏ. திருமுகம் & ஆர். தியாகராஜன் போன்ற இயக்குநர்களையும் சொல்லி ஆகணும்!

இவர்கள் அனைவரும், ஒரு தலைமுறைக்கே, "முருக அலை" கொண்டு சேர்த்தவர்கள்! சினிமா (எ) மந்திர மயக்கத்தில் நாமும் கட்டுண்டோம்!

இதில் பலவும், "புராணக் கதைகள்" தான் (உண்மை அற்றவை);
தமிழ்க் கடவுளாம் முருகனின்,"தமிழ்த் தன்மையை" உணர்த்தாது= சம்ஸ்கிருத புராணங்களின் அடிப்படையில் அமைந்த "கதைகளே"!

எனினும், காட்சியின் பிரம்மாண்ட விரிவால், சினிமா மூலமாக, முருகனைக் கொண்டு சென்றது!
சினிமா வாகனம், மயில் வாகனத்தை விட வேகம் அல்லவா?:))


நமக்கு, மெய்யான சங்கத் தமிழ்த் தரவுகள், அதிகம் தெரியாது!

முதலாம் ஒளவை= அதியமான் காலம்; 2nd AD
அவ எப்படி மாம்பழக் கோவ முருகனைக்... கைலாஸத்தில் சாந்தப் படுத்த முடியும்?
அப்படீன்னா, Jesus க்கு அப்பறம் தான், முருகனே வளர்ந்து பெரியவன் ஆனான் -ன்னு ஆயீருமே??:))
இந்த "Logic" எல்லாம் சினிமா முன் = செல்லாது; செல்லாது:)

சங்கத் தமிழ் முருகன் = நடுகல் தொன்மம்! 
பூர்வ குடிகளின் தொன்மம்!
அதுவொரு அரும் பெரும் மரபு; "இயற்கை வழிபாடு"! அவ்வளவே!

இதர "புராணக் கதைகள்" = வடமொழி ஆதிக்கத்தால் வந்தவை;
= வீரபாஹூ!
(பாஹூ = தோள்; சுந்தர பாஹூ = அழகிய தோளன்); |
கஜபாஹூ (கயவாகு) -ன்னு ஒரு சிங்கள மன்னனைச் சிலப்பதிகாரம் சுட்டும்;

ஆனா, வீரபாஹூவை -> வீரபாகு -ன்னு ஆக்கி, அவனைத் "தமிழ் வீரன்" -ன்னு காட்டிக் கொண்டு இருக்கிறோம்!
சம்ஸ்கிருத புராணத்தை வைத்தா, "தமிழ்க் கடவுள்"-ன்னு நிலைநாட்டுவது?:))
ஐயகோ முருகா!:(
-----------

திருவிளையாடல் கதையும் இப்படியே! = "கொங்கு தேர் வாழ்க்கை" எனும் எழிலார் சங்கத் தமிழின் மேல் ஏற்றப்பட்ட "பொய்ப் புராணம்"!

பொண்ணு கூந்தலை மோப்பம் புடிச்ச "செண்பகப் பாண்டியன்" வரலாற்றிலேயே இல்லை:)
நக்கீரர் காலத்துப் பாண்டியன் = நன்மாறன் (இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்)

“அ முதல் ஹ” = 48 சம்ஸ்கிருத எழுத்து; அவையே 48 சங்கப் புலவர்கள் ஆச்சாம் (கபிலர்/பரணர்...)
அவங்களோட, சிவபெருமானே 49-வதா, சங்கத்தில் உட்கார்ந்தாராம்! சொல்லுறது: அதே “தருமி-திருவிளையாடல்” தான்!:)

So..., சங்கப் புலவர்களுக்கே 
= சம்ஸ்கிருத எழுத்து தான் மூலம்? புரியுதோ?:(

Proof: திகழ்தரு அகார ஆதி , ஹாகாரம் ஈறாச் செப்பிச்
புகழ் தரு நாற்பத்து எட்டு, நாற்பத்து எண் புலவர் ஆகி

சங்க மண்டபம் உண்டாக்கித், தகைமை சால் சிறப்பு நல்கி,
அங்கு அமர்ந்து இருத்திர் , என்ன இருத்தினான் அறிஞர் தம்மை!
(- சங்கப் பலகை கொடுத்த படலம்; தருமிக்குப் பொற்கிழி அளித்த படலம்)

அடக் கொடுமையே! ஒரு சைவத் "தமிழ் இலக்கியமே", தனக்கு வடசொல்லு தான் மூலம்-ன்னு சொல்லுதே!:(

இங்கு வந்தமர்ந்து, தமிழில் "பாண்டித்யம்" பெற்று, இங்கேயே மாற்றி எழுதும் சில தமிழ் "வாத்திகள்"!
அதை உணராது... "இழிவையே பெருமை" -ன்னு, நாமும் "இலக்கியம்" பேசிக் கொண்டு வாழ்கிறோம்!

Let mythology be mythology! No issues!
But to mix it on living Tamizh Poets & harming Tamizh = A Big NO!

இதே, ஒரு வடமொழி இலக்கியத்திலாச்சும், நம்ம தமிழ் போய் "ஏத்தி" இருக்கா?

அ முதல் -ன் வரை 30 எழுத்து; இந்த முப்பது  தான் முப்பது-முக்கோடி தேவர்கள் ஆச்சு!
ஆய்த எழுத்து தான் "ஆயுத மோகினி - விஷ்ணு பகவான்" ஆச்சு -ன்னு நாம ஏத்தி இருக்கோமா?

ஏன், தமிழுக்கு மட்டும் இப்படியொரு நிலைமை?:(
* "மதி மயக்கம்" கூடத் தீர்ந்து விடும்
* "மத மயக்கம்" - தீரவே தீராது!


(குறிப்பு:  மேற்சொன்னவை அவரவர் மனசாட்சிக்கான கேள்விகளே!

நாம, இயக்குநர்களைக் குறை சொல்ல முடியாது; So called "தமிழ் இலக்கியத்தில்" உள்ளதைத் தானே, படமாக எடுக்கிறார்கள்?
தமிழ் இலக்கியத்தில், "புராணத்தை" நுழைத்தது, அவர்கள் பிழை அல்லவே!)

நாம சினிமாவில் திருப்புகழ் என்ற பேசுபொருளுக்கு வருவோம்!
= அது தானே இந்த ஆண்டு சஷ்டிப் பதிவுகளின் மையப் பொருள்!

1. TMS = அருணகிரிநாதர் படத்தில், (பலப்பல திருப்புகழ்கள்)
2. வாணி ஜெயராம் = யாமிருக்கப் பயமேன் படத்தில், பாதி மதி நதி (சுவாமிமலைத் திருப்புகழ்)

அருணகிரிநாதர் படத்தில் வந்த ஒரு அழகிய திருப்புகழைப் பார்ப்போமா?

இது திருச்செந்தூர்த் திருப்புகழ்! அப்படியே கால்கள் தானாக நடனமிடும் திருப்புகழ்!
இந்தத் திருப்புகழக்கு என் முருகன் கால்களே நடனமாடிய போது, நம் கால்கள் எம்மாத்திரம்?

* திருப்புகழ் முதலில் தோன்றிய தலம் = திருவண்ணாமலை! = முத்தைத் தரு!
* ஆனால் அதோடு அப்படியே நின்று விட்டது! சும்மா இரு, சொல் அற!
* பின்பு வயலூர் சன்னிதியில் தான் முழு மூச்சாகத் துவங்கியது! = கைத்தல நிறை கனி!
* அப்படியே விராலி மலையில் வளர்ந்து, திருச்செந்தூர் வந்து சேர்ந்தது!

செந்தூர் வந்த சேர்ந்த அருணகிரி, அப்போ தான் முதன் முறையாக, அவன் செந்தில் செம்மேனியைச் சேவிக்கிறார்!
ஆளை விழுங்கி விடும் அழகன் அவரையும் விழுங்கி விட்டான்!

சேயோனின் அரவணைப்பில் மனம் துள்ளுகிறது அருணகிரிக்கு! கால்கள் துள்ளுகின்றன! வாயும் துள்ளுகிறது! வாய் மணக்கும் தமிழும் துள்ளுகிறது!

அருணகிரி முன்னழகை மட்டும் தானே பார்த்தார்! உற்சவ மூர்த்தியின் பின்னே வரப் பணிக்கின்றான் முருகன்!
= முன்னிலும் பின்பு அழகிய பெருமாள்!
புறப்பாட்டில் பின்னே வந்த அருணகிரிக்கு, தன் துள்ளும் நடனக் கோலத்தைக் காட்டி, மகிழ்விக்கின்றான் செந்திலான்!

அவர் பாட, அவன் ஆட, 
அவனுள் நான் ஆட,
என் முருகனின் நடனம்
இதோ கேட்டுக் கொண்டே படியுங்கள்....சினிமாவில் திருப்புகழை...


தண்டை அணி வெண்டை, அங் கிண்கிணி சதங்கையும்,
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே - நின்
தந்தையினை முன் பரிந்து, இன்பவுரி கொண்டு நன்
சந்தொடம் அணைந்து நின்ற அன்பு போலே


கால்களில் தண்டை ஒலிக்க...வெண்டை என்னும் வீரக் கழல் ஒலிக்க... சதங்கை, கிண்கிணி ஒலிக்க...சிலம்புகள் ஒலிக்க...
இப்படி தொம் தொம் என்று ஆடும் நடனத்தில், பல ஒலிகளும் கொஞ்சுகின்றன!
உன் அப்பாவாகிய ஈசனை வணங்கும் கோலத்தில் கருவறைக் காட்சி கொடுக்கும் செந்தில்-அம்-பதியானே! நீ இன்பம் பெற்ற மகிழ்ச்சியில் ஆடும் அன்பு....என்னையும் ஆட்டுவிக்கிறதே!

கண்டுற கடம்புடன், சந்த மகுடங்களும்,
கஞ்ச மலர் செங்கையும், சிந்து வேலும்,
கண்களும், முகங்களும், சந்திர நிறங்களும்,
கண்குளிர என்றன் முன் சந்தியாவோ?


இதைக் கண்டு....
உன் கடம்ப மாலை ஆட....திருமுடி மகுடம் ஆட....தாமரைக் கைகள் ஆட, சிந்து வேல் ஆட....
கண்கள் ஆட, முகம் ஆட...சந்திர நிறம் போல் ஒளிரும் உன் மேனி ஆட...
என் கந்த வேளே.....கண்ணாளா.....என் கண் குளிர....இது அத்தனையும் என்னை வந்து சந்திக்குமா? சந்திக்குமா? சொல்லுடா!

புண்டரிகர் அண்டமும், கொண்ட பகிரண்டமும்,
பொங்கி எழ, வெங்களம் கொண்ட போது,
பொன்கிரி எனச் சிறந்து, எங்கினும் வளர்ந்துமுன்,
புண்டரிகர் தந்தையும் சிந்தை கூரக்


தாமரையில் தவம் செய்யும் பிரம்மனின் உலகம் ஆட....மற்ற உலகங்களும் சேர்ந்து ஆட....
நீ போருக்குப் புறப்பட்ட போது பொங்கிய மகிழ்ச்சி போல், இன்று ஆட்டமும் மகிழ்ச்சி பொங்க...
பொன் மலை என்னும் செந்தூர் கந்தமாதான பர்வதத்தில் வளரும் வேலா...
உன் ஆட்டத்தை, அதோ அந்த ஆட்ட நாயகன் - குடமாடு கூத்தன் - திருமாலும் (பிரமன் தந்தை) பார்த்து மகிழ...ஆடல் வல்லான் உன் அப்பனும் பார்த்து மகிழ...

கொண்ட நடனம் பதம், செந்திலிலும் என்றன்முன்,
கொஞ்சி நடனம் கொளும் கந்தவேளே!
கொங்கை குற மங்கையின் சந்தமணம் உண்டிடும்,
கும்பமுனி கும்பிடும் தம்பிரானே!!


நீ ஆடும் இந்த நடனப் பதங்கள்....செந்தூரில் மட்டுமா? என் மனத்திலும் கொஞ்சி நடனம் செய்யும் கந்தவேளே!
குற மங்கையான அந்தப் பேதைப் பெண்ணின் மார்பில் வீசும் சந்தன அழுக்கையும் உண்டவா, எனைக் கொண்டவா!
கும்பமுனி அகத்தியன் கும்பிடும் தமிழ்க் கடவுளே! முருக வேளே!

என் ஆசை தீர ஆடு!
உன் ஆசை தீர ஆடு!
நம் ஆசை தீர ஆடு!

தண்டை அணி வெண்டை அங் கிண்கிணி சதங்கையும்
தண் கழல் சிலம்புடன் கொஞ்சவே
....முருகா!
என்னுள் நீ ஆட, உன்னுள் நான் ஆட, நம்முள் நாம் ஆட....என் முருகவா...ஆடுக ஆடுகவே!


படம்: அருணகிரிநாதர்
வரிகள்: அருணகிரி
இசை: ஜி.ராமனாதன்
குரல்: TMS

3 comments:

Anonymous November 13, 2010 1:10 PM  

very nice song. real dancing of murugan in this movie to this song.

Unknown April 06, 2020 5:06 AM  

படம் பழையதாக இருக்கலாம். முருகன் என்றும் இளமை! தமிழ் என்றும் இனிமை! நம்மை அருணகிரிநாதர் வடிவில் டிஎம்எஸ் கட்டிப் போட்டு விட்டார். பக்தி நிலைக்க இசையும் வேண்டும்.

Unknown April 06, 2020 5:15 AM  

தமிழ் மொழியை சொல்லி பிழைக்கும் இக்காலத்தில், நூற்றுக்கணக்காக வெளியாகும் சினிமாக்களில், இலக்கிய ரசனைமிகு, பண்டைய இலக்கிய பாடல்களை ஒவ்வொன்றாக மக்களிடம் இசையுடன் கலந்து, கட்டாயப்படுத்தி சேர்க்கலாம். காதலும் வீரமும் கலந்துதான் சினிமா எடுக்கிறார்கள். இலக்கிய களங்கம் ஏற்படாதவாறு முயற்சிக்கலாமே.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP