Tuesday, November 23, 2010

பார்வையைப் பறித்த முருகன்! - PB ஸ்ரீனிவாஸ், P சுசீலா!

பார்வையற்றவள் அவள்!
அவளுக்குப் பார்வை போனது யாராலே? = முருகனாலே!

ஐயோ! என் முருகனா பார்வை பறிப்பவன்?
பன்னிரு விழியான், உன்னிரு விழியைப் பறித்துக் கொண்டானா?




"இருக்கவே இருக்காது! அவன் மூவிரு முகமும், முகம் பொழி கருணையும், அப்படிச் செய்யவே செய்யாது! கண்ணைப் பறித்த கந்தன் என்று ஒரு போதும் ஆக மாட்டான்!"

"அது எப்படிடீ அடிச்சி சொல்லுற? அவன் குடும்பத்தில் இது போல் நடந்துள்ளது, தெரியுமா உனக்கு?"

"அவன் அப்பா வேண்டுமானால், சுந்தர மூர்த்தி நாயனாரின் கண்ணைப் பறித்துத் திருப்பிக் கொடுத்தார்! ஆனால் அப்பனுக்கே பாடம் சொன்ன சுப்பன் இவன்! பாடம் சொல்ல மட்டும் மாட்டான்! அதன்படி நடப்பவனும் கூட! என் முருகனை அவசரப்பட்டு அப்படியெல்லாம் சொல்லி விடாதீர்கள்...."

"அடியே சங்கரீ! அதுக்கு ஏன்டீ நீ இப்படி பதறுகிற? உன் சந்தோஷத்தையும் பறிச்சவன் தானே அந்தத் திருப்பரங்குன்ற முருகன்? அது போல, இவள் கண்ணைப் பறிச்சிட்டான்-ன்னு வச்சிக்கோயேன்! இப்படிச் சொல்லுறது நான் இல்லடீ! தமிழ்நாடே போற்றும் கவியரசரான கண்ணதாசன்!"

"ஆகா! கண்ணதாசனா சொல்றாரு? போதையில் பேதை பாடியாதாகப் பாடி இருப்பாரு நம்ம கவிஞர்! என்ன தான் சொல்றாரு, என் முருகனை?"

"என் கண்கள் இரண்டை எடுத்து, கையோடு கொண்டானடி! " - இதான் அவரு பாட்டு!

"ஓகோ! இதானா! நான் என்னமோ ஏதோ-ன்னு பயந்தே போயிட்டேன்! இதுக்குப் பொருள் அப்படி இல்லடீ! நான் சொல்லட்டுமா? "சாந்தி" என்ற ஒரு திரைப்படம்; சிவாஜி, தேவகி, எஸ்.எஸ்.ஆர், விஜயகுமாரி எல்லாம் நடிப்பாங்க! பீம்சிங் இயக்கம்! அதுல கதாநாயகி பார்வை இல்லாதவள்! அவ பாடுறது தான் இந்தப் பாட்டு!

கண்கள் இரண்டை, வேலென எடுத்து, கையோடு கொண்டானடி! - என்று கதாநாயகி பாடுகிறாள்! = எனக்கு ஏன் கண் இல்லை தெரியுமா? என் வேல்விழியை அவன் வேல் ஆக்கிக் கொண்டான்!

வேல்விழி-ன்னு சொல்றோம்-ல்ல? அப்படீன்னா விழி யாருக்குச் சொந்தம்? வேலை உடையவனுக்குத் தான் "வேல்விழி" சொந்தம்? அதான் என் கண்ணே, அவன் வேலாகி விட்டது! அவனுக்கு நானாகி விட்டேன்! இதுல என் முருகனைக் குறை சொல்ல என்ன இருக்கு?".....



இது தான் கவிஞர் கண்ணதாசனின் கற்பனைத் தமிழூற்று!

அப்போது விழி-இல் விழியாள்...
இப்போது வேல் விழியாள் ஆனாள்!

பேதைக்கு அவன் தந்த காதல் மருந்தால்,
தன் கண்ணை, வேலாய் அவனுக்கே கொடுத்து,
அவன் கையிலேயே தங்கி விட்டாள் பேதை!

பாட்டைக் கேட்டுக் கொண்டே படியுங்கள்!


செந்தூர் முருகன் கோவிலிலே - ஒரு சேதியை நான் கேட்டேன்!
சேவல் கூவும் காலை நேரம், பாடலை நான் கேட்டேன்!
(செந்தூர்)

கண்கள் இரண்டை, வேலென எடுத்து, கையோடு கொண்டானடி!
கன்னி என் மனதில், காதல் கவிதை, சொல்லாமல் சொன்னானடி!
(செந்தூர்)

ஊர்வலம் போனவன், ஓரிரு மாதம் வாராமல் நின்றானடி!
வாராமல் வந்தவன், பாவை உடலை சேராமல் சென்றானடி!
(செந்தூர்)

நாளை வருவான் நாயகன், என்றே நல்லோர்கள் சொன்னாரடி!
நாயகன் தானும் ஓலை வடிவில், என்னோடு வந்தானடி!
ஆடை திருத்தி மாலைகள் தொடுத்து, வாசலில் வருவேனடி!
மன்னவன் என்னை மார்பில் தழுவி, வாழ்-எனச் சொல்வானடி!
வாழ்-எனச் சொல்வானடி!
(செந்தூர்)

படம்: சாந்தி
குரல்: PB ஸ்ரீநிவாஸ், பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MS.விஸ்வநாதன்

2 comments:

நாமக்கல் சிபி November 25, 2010 1:16 PM  

கே.ஆர்.எஸ் பாடலைப் படிக்கும்போதே மனசு மயங்குது!
இப்போ கேக்க முடியலை! கேட்டுட்டு மறுக்கா வரேன்!

ANGOOR November 27, 2010 8:57 PM  

அடியார்களுக்கும் , தமிழர்களுக்கு உதவும் உங்கள் முயற்சிக்கு என் பாராட்டுக்கள், உங்கள் வலைத்தளம் மூலம் நிறைய தெரிந்துகொண்டேன்.
நன்றி
தர்மா
தேவாரம் & திருமுறை பாடல்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய :
www.devarathirumurai.blogspot.com

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP