Monday, January 31, 2011

சிவாஜி vs சரிதா - கீழ் வானம் சிவக்கும்! முருகன் பாட்டு!

இந்தப் பதிவு.....முருகனருள் தோழனுக்கு!
அவனுக்குப் பிடித்தமான பாட்டு, பிடித்தமான நடிகர்-நடிகை! பிடித்தமான பாடகர்! பிடித்தமான இசையமைப்பாளர்! பிடித்தமான படம்! :)



கீழ்வானம் சிவக்கும்-ன்னு ஒரு படம் வந்துச்சி! சிவாஜி-சாவித்திரி மாதிரி, சிவாஜி-சரிதா காம்பினேஷன்-ன்னு வச்சிக்குங்களேன்!
ரெண்டு பேரும் மாமனார்-மருமகளா போட்டி போட்டுக்கிட்டு நடிச்சி இருப்பாங்க!

நாங்க எல்லாரும் சென்னைக்கு வந்த போது...புரசைவாக்கம், Roxy தியேட்டரில் (இப்போ இந்த தியேட்டரே இல்ல, அடுக்கு மாடி சரவணா ஸ்டோர்ஸ் ஆகி விட்டது வேறு விஷயம்)...
ஒரே மாசத்தில் நாலைஞ்சு பழைய படங்களை எல்லாம் ஓட்டினாங்க! சிவாஜி ஹிட் படங்கள்! அதுல இதுவும் ஒன்னு! எப்படி ஞாபகம் இருக்கு-ன்னா...

1. சென்னையில், நாங்க எல்லாரும் சேர்ந்து பார்த்த முதல் படம் இது!
2. தியேட்டருக்கு கீழேயே, White Field Bakery! சின்னப் பையன் எனக்கு, அந்த கேக் வாசனையும், பட்டர் பிஸ்கட் வாசனையும்...ஆஆ...
3. இந்தப் படத்தில் வரும் - "முருகா முருகா முருகா" பாட்டு!

இந்தப் பாட்டில், ஒரு வீட்டுத் தோட்டத்தின் நடுவே முருகன் சிலை இருக்கும்!
அங்கே நின்னுக்கிட்டு, சிவாஜியும் சரிதாவும், மாறி மாறிப் பாடுவாங்க!
என்னமோ தெரியலை, அந்த முருகன் சிலை எனக்கு ரொம்ப பிடிச்சிப் போச்சி!

"அப்பா, மெட்ராஸ்-ல்ல வாடகை வீடு நல்லாவே இல்லை! ரொம்ப குறுகல்! நாம சொந்தமா வீடு கட்டிக்கிட்டுப் போனா, சின்ன தோட்டமாச்சும் வைக்கணும்!
நடுல, இதே போல ஒரு முருகன் சிலை வைக்கணும்!"-ன்னு சொல்லிய ஞாபகம்...எனக்கே இருக்கு! :)



படத்துக்கு வருவோம்!
சிவாஜி, பெரிய மருத்துவர்! அவரு பையன் சரத்பாபு - மருமகள் சரிதா! ரொம்ப பாசமா இருப்பாங்க மாமனாரும் மருமகளும்!
அப்போ....பார்வையற்ற ஜெய்சங்கர், கண் அறுவை சிகிச்சை செஞ்சிக்க, சிவாஜி கிட்ட வருவாரு! தன் தங்கையின் வாழ்வைக் கெடுத்தவனைக் கொலை பண்ணும் வெறியில் இருப்பாரு! அவர் கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்த சிவாஜிக்கு செம ஷாக்!

சரத்பாபுவும்-அந்தப் பெண்ணும் ஃபோட்டோவில் இருப்பாய்ங்க!

தன் பையன் சரத்பாபுவைப் போட்டுத் தள்ளத் தான் ஜெய்சங்கர் வந்திருக்காரு-ன்னு தெரிஞ்ச பிறகும், சிகிச்சை செய்வாரு சிவாஜி!
ஆனா Doctor vs Father உணர்ச்சிப் போராட்டத்தில் அப்பப்போ தவிப்பாரு! இதனால், சரிதா, சிவாஜி மேல சந்தேகப்பட்டு, வெறுப்பும் கோபமும் தானாவே வளர்த்துக்குவாங்க! ஆனா தன் கணவன் தான் அதில் உள்ளான்-ன்னு தெரியாது!

தன் புருஷன் தான் இதுல Involved-ன்னே தெரியாம, சிவாஜியைத் தாறுமாறாகச் சரிதா பேச...கதை விறுவிறு-ன்னு போகும்!

சிவாஜியைப் பொய்யர், புரட்டர், மருத்துவத் துரோகி-ன்னு எல்லாம் பேசிய அந்தப் பாசமிகு மருமகள்...சான்சே இல்லை!
சிவாஜிக்கு ஈடு குடுத்து நடிக்கவல்ல ஒரே பின்னாளைய கதாநாயகி = சரிதா! முதல் மரியாதை ராதா கூட அப்புறம் தான்!


பாட்டைக் கேட்டுகிட்டே படிங்க!

முருகன் முன்னாடி...
* குற்றம் சாட்டி ஒதுக்கும் ஒரு உள்ளமும்,
* குற்றவாளி "ஆக்கப்பட்டு" அழும் இன்னொரு உள்ளமும்,
மாறி மாறி மோதும் காட்சி!

குரல்: TMS, பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்
இசை: MSV
படம்: கீழ்வானம் சிவக்கும்

சரிதா:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே,
முருகா முருகா முருகா!
என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?

சிவாஜி:
கண் கண்ட தெய்வமே, கை வந்த செல்வமே
முருகா முருகா முருகா
முருகா முருகா முருகா

சரிதா:
சுந்தர வேல்முருகா, துண்டுகள் இரண்டாக
சூரனைக் கிழித்தாய் அன்றோ! - ஒரு
தோகையைக் காலடியில், சேவலை கை அணைவில்
காவலில் வைத்தாய் அன்றோ!

சிவாஜி:
மந்திரத் தெய்வங்களின் மாயக் கதைகளுக்கு
வரைமுறை கிடைாது அன்றோ!
அவை தந்திரம் செய்வதுண்டு, சாகசம் கொள்வதுண்டு
சகலமும் நன்றே அன்றோ!

என்னென்ன சொல்கின்றார், என்னென்ன செய்கின்றார்?
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?
(கண் கண்ட தெய்வமே)

சரிதா:
காட்சியைக் கொன்றவர் முன், சாட்சியைக் கொன்றுவிட்டு
ஆட்சியும் செய்தாய் ஐயா - உன்தன்
மாட்சிமை என்னவென்று காட்சிக்கும் தோன்றவில்லை
சூழ்ச்சியைச் சொல்வாய் ஐயா!

சிவாஜி:
பிள்ளையைக் கொன்றுவிட்டு, பெரிய விருந்து வைத்தான்
கள்ளமில் பரஞ் சோதியே - விருந்து
எல்லாம் முடிந்த பின்னே, பிள்ளையினை அழைத்தான்
இறைவன் அருள்ஜோதியே!

சரிதா: காரிருள் சூழ்ந்ததும் கதிரும் மறைந்தது - நீதி எல்லாம் துடிக்கும்!
சிவாஜி: மேற்கினில் சூரியன் மறைந்தாலும் - கீழ் வானம் சிவக்கும்!
சரிதா: கந்தன் இருப்பது உண்மை என்றால் இது உண்மைகள் வெளியாகும்!
சிவாஜி:காலம் வரும் வரை காத்திருந்தால் அது நல்லவர் வழியாகும்!!

இருவரும்: கண் கண்ட தெய்வமே!
கை வந்த செல்வமே!
முருகா முருகா முருகா!
முருகா முருகா முருகா!



சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு அது கேட்க...
சில உள்ளதுக்குள் உள்ளம் வைத்தது - உன் வேலையா?
வேலய்யா இது உன் வேலையா?-ன்னு இது கேட்க...
பாவம், என் முருகன் என்ன தான் பண்ணுவான்? ரெண்டு பேருமே முருகனைத் தான் துணைக்கு கூப்பிடறாங்க! யாரை-ன்னு அவன் பாக்குறது? எப்படிப் பாக்குறது?

* அவன் அர்ச்சனையைப் பார்ப்பதில்லை! = லட்சார்ச்சனை, லட்சம் பேர் செய்யறாங்க....ஒரு டிக்கெட் ரூ200.00 தான்! பிரசாத டின் கிடைக்காட்டி குடுமிப்பிடிச் சண்டை தான்! :)
* அவன் ஆட்களைப் பார்ப்பதில்லை! அவனோட பேரை, நிறைய வாட்டி ஒருவர் சொல்வதாலேயே அவர்களைப் பார்ப்பதும் இல்லை! = சரவணபவன் அண்ணாச்சி சொல்லாத முருகன் பேரா? :)

பின்பு எதைப் பார்க்கிறான் முருகன்?

சில உள்ளதுக்குள் கள்ளம் வைத்தது உன் வேலையா? வேலய்யா இது உன் வேலையா? என்று ஒரு உள்ளம் குற்றம் சாட்டும் போது...
தன்னையும், தன்-மானத்தையும், தன் மகிழ்வையும்...அன்புக்காகவே இழக்கத் துணிந்த அந்த அன்பு...அன்பிற்கும் உண்டோ டைக்கும் தாழ்!
= அந்த உருக அன்பு, முருக அன்பு ஒன்றினையே, முருகன் பார்க்கிறான்!
போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்!

பெரு காதல் உற்ற தமியேனை
நித்தல் பிரியாதே! பட்சம் மறவாதே!
கை வந்த செல்வமே! என் - முருகா முருகா முருகா!

7 comments:

Unknown January 31, 2011 11:24 PM  

வேலுண்டு வினையில்லை!
அவன் விளையாடும் விளையாட்டுக்களில் எப்பொழுதும் ஒரு பொருள் இருக்கும்!

Kannabiran, Ravi Shankar (KRS) February 01, 2011 7:17 AM  

//அவன் விளையாடும் விளையாட்டுக்களில் எப்பொழுதும் ஒரு பொருள் இருக்கும்!//

:)
ஒரே ஒரு பொருள் தானா? :)

Prasad February 01, 2011 7:56 AM  

@ Ravi: Super...

R. Gopi February 01, 2011 9:16 AM  

ரவி, வழக்கம் போலக் கலக்கல் பதிவு

Lalitha Mittal February 01, 2011 9:59 AM  

"avan vilaiyaadum vilayaattukkalil
eppozhuthum 'perarul'irukkum" enrum
sollalaame.pazhaththaik kottai vittathupol poikkobam kaatti nadiththu gnaanappazhamaaga namathu pazhanikku vanthu 'deraa'
adichchathu avan thamizharukkaaga seitha perum "perarul" allavaa?

குமரன் (Kumaran) February 02, 2011 9:20 AM  

சின்ன வயசுல மதுரை நியூசினிமாவுல பார்த்தது. இப்ப இன்னொரு தடவை பார்த்தென். நன்றி இரவி.

Kavinaya February 02, 2011 10:00 PM  

//போதும் நீ பட்டது; வா என்னிடம் என்று வாரி அணைத்துக் கொள்கிறான்!//

அப்படின்னு கேட்கும்போதே எவ்ளோ சுகமா இருக்கு.

மாத்தி யோசிக்கிறதில் நீங்கதான் expert :)

முருகா முருகா முருகா!

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP