Saturday, October 29, 2011

3) பழனி: வசன மிக வேற்றி...மறவாதே!

சஷ்டி 3ஆம் நாள்:
வாங்க, பழனி மலைக்குப் பொடிநடையாப் போய் வருவோம்!

மூன்றாம் படைவீடு = மலையின் கீழே இருக்கும் திருவாவினன்குடிக் கோயில் தான்!
ஆனா, மலை மேல ஒருத்தன், Show காட்டிக்கிட்டு, கவர்ச்சியா நிக்குறானா...
So, என்னவன் நிர்வாண அழகுல மயங்கி, மேலுள்ள ஆலயமே செம ஹிட் ஆயிருச்சி:))



இந்தத் திருப்புகழ் மிக எளிமையானது! நாலே வரி! எங்கே...கேட்டுக்கிட்டே பாடுங்க & படிங்க பார்ப்போம்...

வசன மிக வேற்றி...மறவாதே
மனது துயர் ஆற்றில்...உழலாதே
இசை பயில் சடாட்ச...ரமதாலே
இகபர செளபாக்யம்...அருள்வாயே


பசுபதி சிவாக்யம்...உணர்வோனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா
அசுரர் கிளை வாட்டி...மிகவாழ
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!!



பழனியாண்டவர் (மூலவர் - ராஜ அலங்கார ஓவியம்),
சின்னக்குமாரர் (உற்சவர் - புகைப்படம்)


பொருள்:


வசன மிக வேற்றி...மறவாதே = உன் பேரையே, வசனமாய் உருப்போட்டு உருப்போட்டு
மனது துயர் ஆற்றில்...உழலாதே = மனசைத் துயரம் என்னும் ஆற்றில் மிதக்க விடாது செலுத்துவேன்!

இசை பயில் சடாட்ச...ரமதாலே = இசையாய் இனிக்கும் "சரவணபவ" என்னும் சடாட்சரம் (திருவாறெழுத்து) - அதையே சொல்லுவேன்!
இகபர செளபாக்யம்...அருள்வாயே = இகம்-பரம் (இம்மை-மறுமை) இரண்டிலும் இன்பம் கொடுடா, என் முருகா!!

பசுபதி சிவாக்யம்...உணர்வோனே = பசு-பதி-பாசம் என்னும் சைவ ஆகமத்தை உணர்ந்தவனே
பழநிமலை வீற்று...அருளும் வேலா = பழனி மலை மேல் வீற்றிருக்கும் வேலவா!

அசுரர் கிளை வாட்டி...மிகவாழ = அசுரரைக் கிளையோடு (குடும்பத்தோடு) வாட்டினாயே!
அமரர் சிறை மீட்ட...பெருமாளே!! = அமரரைச் சிறையில் இருந்து மீட்டினாயே!


பழனி ரகசியங்களைப் போட்டு உடைப்போமா? உம்ம்ம்...பழனியாண்டவர் உருவச் சிலையே ஒரு தெய்வ ரகசியம் தானே?

பழனி என்பது ஒரு படைவீடே கிடையாது!
திருவாவினன்குடி என்பது தான் அறுபடை வீட்டுள் ஒன்று!
திரு+ஆ+இனன்+குடி = இலக்குமி, காமதேனு, சூரியன் ஆகியோர் வணங்கிய தலம்! ஆவினர்கள் என்னும் சிற்றரசர்கள் ஆண்ட குடி என்றும் சொல்லுவர்.

இந்தப் படை வீடு, மலையின் கீழ் உள்ள ஆலயம்!
= குழந்தை வேலாயுத சாமி என்று இறைவனுக்குப் பெயர்.
கோபமாக, மயில் மேல் அமர்ந்த குழந்தைக் கோலத்தில் கருவறையில் காட்சி தருகிறான். சரவணப் பொய்கையும் உண்டு.


பின்னாளில் சித்த புருஷரான போகர், தண்டபாணி சிலை வடித்த பின்னர், மலை மேல் உள்ள ஆலயம் பிரபலமாகி விட்டது.
தண்டாயுதபாணியும் அழகும் பேரழகே!
ஆனா, அடுத்த முறை பழனி செல்லும் போது, மேலே உள்ள குழந்தையும் கண்டு, கீழே படைவீட்டில் உள்ள குழந்தையையும் கண்டு வாருங்கள்!

* பழனி என்றால் முதலில் எது? பஞ்சாமிர்தமா? முருகனா?? :)
சிறிய விருப்பாச்சி என்னும் வாழைப்பழங்களால் செய்வதே பஞ்சாமிர்தம்.
எல்லா வாழைகளும் போட முடியாது. நீர்ப்பதம் குறைவாய் உள்ள வாழை தான் ரொம்ப நாள் கெடாமல் தாங்கும்.
சர்க்கரை, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, கற்கண்டு, நெய், ஏலக்காய் - இவ்வளவு தான்! இதுக்கு மேல் ஆப்பிள், ஆரஞ்சு-ன்னு கண்டதையும் சேர்க்கக் கூடாது!:)

* கொடைக்கானல் மலையில் உள்ள குறிஞ்சி ஆண்டவர் ஆலயமும், பழனிக்கு உட்பட்டதே!
கொடைக்கானல் மலைகளில் இருந்து இறங்கும் போது, பழனி மலையின் அழகையும், கோயிலின் தூரப் பார்வையும் கண்டு களிக்கலாம்!

* முருகனுக்கு உரிய கடம்ப மலர், பூத்துக் குலுங்கும் தலம் பழனி!

* சித்தபுருஷர் போகர் பெருமானின் நிர்விகல்ப சமாதி அமைந்த தலமும் இதுவே!
அடுத்த முறை ஆலய வளாகத்துள் இருக்கும் போகர் குகைக்குச் சென்று வாருங்கள்! மரகத லிங்கம், நவ துர்க்கை என்று அவர் வழிபட்ட மூர்த்திகளும் சமாதியில் உள்ளன




காலங்கி நாதரின் சீடர் போகர்!
தன் குரு தீர்க்கதரிசனத்தால் பின்னாளில் நோய்கள் மலியும் என்று சொன்னதால், பாஷாணம் என்னும் ஒன்பது விஷங்களை மருந்தாகக் கலந்து, பழனியாண்டவர் சிலையை வடித்தார், தன் சீடர் புலிப்பாணி உதவியுடன்!
பாஷாண உருவத்தின் மேல்....அளவாகத் தீர்த்தமாட்டப்படும் பாலில், மருந்துப் படிமங்கள் படிந்து, நோய் தீர்க்கும் என்பது சித்தரின் மருத்துவக் கணக்கு!
Perkin-Elmer Atomic Absorption/Adsorption என்று Spectrometer வைத்து ஆய்வு செய்த பின்னர் கூட, பழனி முருகனின் மூலக் கூற்றை இன்னும் கண்டுபிடிக்க இயலவில்லை!

பேராசைப் பெருமகன்களாலும், அரசியல்-பணக் காரணங்களாலும், கணக்கே இல்லாமல் பால் குட அபிடேங்கள்! பழனியாண்டவர் சிலையைச் சேதார நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டனர் நம்ம ஆட்கள்!
சித்தரின் மருத்துவக் கணக்கு, பால் கணக்கால், அடிபட்டுப் போகிறது. பாவம், போகரே இதை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்! ஒரு மாதத்தில் 700 குளியல்களா?

போதாக்குறைக்கு, போகரின் பூசை முறையில் இல்லாத அந்தணர்கள்/அர்ச்சகர்கள் தான் இன்றைய கருவறைக்குள் நுழைவு!
பாஷாணம் சுரண்டிக் களவாடப்பட்டது என்று சொல்வார் கூட உண்டு!

இத்தனை உயர மூர்த்திக்கு, இத்தனைக் குடம் தான் அபிடேகம் போன்ற Work Instruction-கள் தான் ஆகமம். ஆறு காலப் பூசை, ஆறாறு குட முழுக்காட்டு என்று வரையறுக்கும். ஆனால் அதையெல்லாம் மீறிப் பேராசை பட்டதால் இன்று பழனிக் குழந்தை, கால்கள் எல்லாம் சூம்பிப் போன நிலையில், ஓடாய்த் தேய்ந்து நிற்கிறான்!
அர்ச்சகர்களே, அபிடேகத்தின் போது, கையைக் கிழித்துக் கொள்வோமோ, என்று பயந்து பயந்து செய்யும் நிலைமை!

பழனியில், அதிகாலை விஸ்வரூப அலங்காரத்தில், என்னவனைக் கண்டு கண் கலங்கியவர்களில் நானும் ஒருவன்.
யாரும் அதிகாலை விஸ்வரூம் பார்த்து விடாதீர்கள். பையன் எந்த அலங்காரமும் இன்றித் தனியாகத் தெரிவான்! குச்சி போல் மெலிந்த கோலம் கண்டு மனமே ஒடிந்து விடும்!

அவர்களே, நமக்கு அதிகம் காட்டாது, பரபரவென்று முடித்து விடுகிறார்கள்!
ராஜ அலங்காரம், ஆண்டிக் கோலம், அந்தண அலங்காரம் என்று அலங்கரித்த முருகனையே கண்டு வாருங்கள்!




* மலைக்குச் செல்ல நான்கு பாதைகள் உண்டு
யானைப்பாதை சிரமம் இல்லாதது. வயதானவர்களும் செல்லலாம். படிகள் கம்மி.
தீர்த்தப் பாதை, ஆலய நீர்த் தேவைக்கு மட்டும்.
ரோப்-கார் என்னும் இழுவை ரயில் ஒரு தனி அனுபவம் தான்! ஆனால் மலையை அனுபவிக்க முடியாது, நொடிகளில் ஏறி விடும்! ரயிலில் கூடப் பொது வழி, சிறப்பு வழி-ன்னு நம்ம தர்ம-நியாயங்கள்! :)

மொத்தம் 697 படிகள் தானே! படிகளில் ஏறிச் செல்லுங்கள்!
அதன் அழகே தனி!
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் படிகளில் செல்லும் போது தான் கிடைக்கும்!

அடிவாரம் பாத விநாயகரை வணங்கி, பாதி வழியில் இடும்பனை வணங்கி, சிவ கிரி-சக்தி கிரியைக் கண்டு, இடும்பனுக்கு உள்ள தனி மலையைக் கண்டு, பழனியின் வயல்வெளிகளைக் கண்டு, சண்முக நதியின் ஓடும் அழகைக் கண்டு.....இதெல்லாம் ரோப்-காரில் கிடைக்காது!

வேண்டுமானால், ரோப்-காரில் ஏறுங்கள்; இறங்கும் போதாவது படிகளில் வாருங்கள்!
ஏறுதலை விட இறங்குதல் எளிது! மூச்சு முட்டாது, வயதானவர்க்கும் எளிது!



* நகரத்தார்கள் சமூகத்துடன் நெருங்கிய தொடர்பு, பழனி ஆலயத்துக்கும், பழனிப் பாத யாத்திரைக்கும்.
பங்குனி உத்திரம் தான் மிகப் பெரும் விழா! காவடிக் கடல்! அடுத்து தான் தைப்பூசம், வைகாசி விசாகம், சஷ்டி எல்லாம்!

* பழனி ஆலயம், வருமானத்தில், தமிழ்நாட்டின் திருப்பதி!
இதற்கு மேல் நான் ஒன்னும் சொல்லலை! கல்லூரி, சித்த மருத்துவமனை - இதாவது நடக்கிறதே! மகிழ்ச்சி!

TTD, தெலுங்கு இலக்கியங்களை எல்லாம் டிஜிடைஸ் செய்து முடித்து விட்டு, அடுத்து ஆழ்வார் பாசுரங்களையும் தங்கள் கைக்குள் எடுத்துக் கொண்டார்கள்! சமூக முகாம்கள், தலித் கோவிந்தம், சுவடி ஆய்வு, கல்வெட்டு ஆய்வு, நீர் ஆதாரங்கள் என்று ஒரு தெலுங்கு நிறுவனம் தமிழ் வளர்ச்சி செய்யட்டும்!
எங்கள் அருணகிரியையும் டிஜிடைஸ் செய்யுங்க-ன்னு அவங்களிடம் போய்க் கேக்க முடியுமா? நம்ம கிட்டத் தான் அறநிலையத் துறை பாத்து பாத்து கவனிக்கும் பழனி ஆலயம் இருக்கே! :(

* தமிழர்கள் மட்டுமன்றி, கேரளாவில் இருந்தும் பல பக்தர்கள் வந்து செல்லும் தலம் பழனி!
மலையாள அறிவிப்புப் பலகைகளைப் பழனியில் காணலாம்! சேரமான் கட்டிய கோயில் அல்லவா!



* நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி பற்றித் தான் பேசுகிறார். பழனி பற்றியோ, மலைக்கோயில் ஆலயம் பற்றியோ பேசவில்லை!
தாவில் கொள்கை மடந்தையடு சின்னாள்
ஆவினன்குடி அசைதலும் உரியன்: அதான்று
- என்று பாடுகிறார்!
அறுபடை வீடுகளுள், மிக அதிக விவரணங்கள்/வரிகள் ஆவினன்குடியை பற்றித் தான் வருகிறது!

* அருணகிரியார் மிக அதிகமாகப் பாடிய தலம் பழனித் தலம்.
மொத்தம் 97 திருப்புகழ்கள் ஆவினன்குடி மீது! பிரபலமானவை இதோ:
- நாத விந்து கலாதீ நமோ நம
- சிவனார் மனங்குளிர
- தகர நறுமலர்
- திமிர உததி
- வசனம் மிகவேற்றி மறவாதே

* பழனியாண்டவர் கைகளில் வேல் இல்லை! தண்டம் என்னும் கம்பு மட்டுமே!
வேல் தோள்களில் தான் சார்த்தி வைக்கப்பட்டு இருக்கும்!


* பழனி மலை என்பது மொத்தம் இரண்டு மலைகள்!
சிவ கிரி = பழனியாண்டவர் இருப்பது!
சக்தி கிரி = இடும்பன் மலை

13 அடி உயர இடும்பன் சிலை உள்ள சிறு ஆலயம்.
இரு மலைகளும் அருகருகே தான்! இடும்பன் மலைக்குச் சென்றால் இடும்பனையும் காணலாம்! பழனி மலையை, அதன் பசுமையை, விதம் விதமான கோணங்களில் புகைப்படம் எடுக்கவும் சரியான Spot!

* எப்போதுமே என்னை கை நீட்டி அடிக்காத அப்பா, என்னை முதல் முறையாக அடித்த இடம் பழனி மலை தான்! :)
பழனியில் உள்ள கடையில் முருகனின் ஆறுபடை வீட்டுப் பொம்மைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, ஒவ்வொன்றிலும் ஒன்னொன்னு கேட்டிருக்கேன்! விலை அதிகம்!

பஞ்சாமிர்தம், தின்பண்டம், குட்டிப் பொம்மை, சொப்பு-ன்னு எதுக்கும் மசியாமல், அந்த ஆறு முருகன்கள் தான் வேண்டும் என்று நான் அடித்த லூட்டிக்கு, விழுந்த பளார், இன்னும் ஞாபகம் இருக்கு! :))

பழனி மலை-முருகனுக்கு அரோகரா!
என் காதல் அழகனுக்கு அரோகரா!
அவன் அழகான இடுப்புக்கு அரோகரா!
அவன் ஒயிலான உடம்புக்கு அரோகரா!!

3 comments:

cheena (சீனா) October 29, 2011 5:41 AM  

அன்பின் கேயாரெஸ்

பழனி மலையினைப் பற்றிய, ஆதங்கம் நிறைந்த இடுகை நன்று நன்று. என்ன செய்வது - எல்லாம் அவன் பார்த்துக் கொள்வான. கவலை வேண்டாம். நல்வாழ்த்துகள் கேயாரெஸ் - நட்புடன் சீனா

adithyasaravana October 30, 2011 11:29 AM  

சமீபத்துல தான் உங்க அண்ணிக்கு சொன்னேன். திருமலை தெய்வம், தெரிந்து தான் தன்னை காத்துக்கொள்ள தெலுங்கு தேசத்தோட சேந்துட்டார்னு..இங்கே இருக்கற சந்தர்ப்பவாத நாத்திகர்கள்கிட்ட இருந்தா திருமலையும் பொலிவிழந்திருக்கும்.. தொடர்ந்து இந்த திருப்புகழ் களை வாசித்து வருகிறேன்.. அதுக்கு பிறகு நீ போய் ஒளிஞ்சுக்குவியே, அது தான் வருத்தமா இருக்கு

Anonymous January 18, 2012 4:05 AM  

பழனில முருகன் ஏன் மேற்கு நோக்கி இருக்கிறார்? ஒரு வேளை கேரளவ பார்த்து இருப்பதால் தான் நிறைய பேர் அங்கேருந்து வருகிறார்களோ?

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP