Sunday, October 30, 2011

4) சாமிமலை: காமத்தில் அழுந்தி!!

சஷ்டி: 4ஆம் நாள்
வாங்க, இன்னிக்கி எங்கே ஓடணும்? மலை ஆனால் மலை இல்ல! அது எந்த இடம்?
= சுவாமி மலை! போவோமா?
சின்னப் பாட்டு தான்! நாலே வரி! கருப்பூரம் மாதிரி கப்-ன்னு பிடிச்சிக்கோங்க:)




காமியத்து அழுந்தி இளையாதே
காலர் கைப் படிந்து...மடியாதே


"ஓம்" எழுத்தில் அன்பு மிக ஊறி
ஓவியத்தில் அந்தம்...அருள்வாயே


தூமமெய்க் கணிந்த சுகலீலா
சூரனைக் கடிந்த கதிர்வேலா


ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா
ஏரகத்து அமர்ந்த...பெருமாளே!!



பொருள்:
காமியத்து அழுந்தி இளையாதே = அதீத ஆசை/காமங்களில் அழுந்தி அழுந்தி இளைத்துப் போகாமல்
காலர் கைப் படிந்து...மடியாதே = கடைசியில், காலனாகிய எமனின் கைக்குள் சிக்கி மடிந்து போகாமல்

ஓம் எழுத்தில் அன்பு மிக ஊறி = "ஓம்" என்னும் உனக்கும் எனக்குமான உறவுச் சொல்! அதில் அன்பு மிகவும் ஊறி ஊறி
ஓவியத்தில் அந்தம்...அருள்வாயே = ஒரு ஓவியத்தின் நேர்த்தியைப் போல், என் வாழ்வின் பயனை எனக்கு அருள்வாயே!

தூமமேய்க் கணிந்த சுகலீலா = வாசனை மிக்க அகில் புகை, அதையே உன் உடம்பில் நகை போல் அணிந்துள்ளாயே, என் முருகவா!
சூரனைக் கடிந்த கதிர்வேலா = சூரனை அழித்து விடாது, அவனைக் கடிந்து மட்டுமே கொண்ட வேலவா!

ஏம வெற்பு உயர்ந்த மயில்வீரா = பொன் மலையான மேருவின் உயரத்துக்கு பறக்கவல்ல மயில் வீரனே!
ஏரகத்து அமர்ந்த...பெருமாளே!! = திரு-ஏரகம் என்னும் சுவாமிமலையில், அன்று அமர்ந்து, இன்று நிற்கின்ற என் முருகப் பெருமானே!



சாமி மலை இரகசியங்களைப் பார்ப்போமா?
அது என்னாங்க சாமி மலை? குழந்தை மலை தானே அது?
சிவபெருமான் தானே சாமி?
அந்த சாமிக்கு = நாதன் தானே, சாமி-நாதன்?
அப்படீன்னா சாமிநாத மலை-ன்னு தானே சொல்லோணும்?:)

இளைய வயது பிருகு முனிவர், பிரணவ மந்திரத்தை சதா ஜெபித்து ஜெபித்து, அவர் தலையில் பிரணவ அக்னி கிளம்பியது.
சிறியவர்கள் எல்லாம் பிரணவ ரகசியம் அறிந்து கொள்வதா என்று பயந்து போன சிவபெருமான், அந்தப் பிரணவாக்னியைத் தம் கையால் அணைத்து விட்டார்.
இந்தச் செயலால், பிரணவம் அவருக்கும் சற்றே மறந்து போனது!

பின்னாளில், பிரம்மன் செருக்கினை அடக்குவது போல ஒரு காட்சியை உருவாக்கி,
தந்தைக்குப் பிரணவப் பொருளினைத் தெளிய உரைத்தது முருகக் குழந்தை!

எல்லாரும் பிரணவத்துக்குப் பொருள் சொன்னான், பொருள் சொன்னான் என்று தான் சொல்கிறோமே தவிர,
அந்தப் பிரணவத்துக்கு என்ன பொருளைச் சொன்னான்? என்று சொல்கிறோமா? ஹிஹி!
பிரணவம் என்றால் என்ன? = http://madhavipanthal.blogspot.com/search/label/MeaningOfOm

இளையவர் அறிவதா என்று நினைத்த சிவனாருக்கு, இளையனாரே பொருள் சொல்ல வேண்டி வந்தது!
சிவனார் மனம் குளிர, உபதேச மந்திரம், இரு செவி மீதிலும் பகர்ந்தான்!
இப்படிச் சாமிக்கே சாமியானவன் சாமிநாதன்!
அந்தச் சாமி நாதனின் மலையானதாலே, அது சாமி மலை! (சுவாமி மலை)!

மேற்சொன்ன எல்லாம் சம்ஸ்கிருத புராணங்கள்... தமிழ் அல்ல!:)
திருவேரகம் என்பதே பண்டைத் தமிழ்ப் பெயர்!
பின்னாளில், ஹிந்து மதம்/ சம்ஸ்கிருதம், தமிழில் கலந்த பின்.. மக்கள் வழக்கில் சாமி மலையானது!

* சரி, திருவேரகம் = திரு+ஏர்+அகம் என்றால் என்ன? ஏன் இந்தப் பெயர்? சொல்லுங்க பார்ப்போம்

* சுவாமி மலையில் கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் மலையே கிடையாது!
மலை என்பதே "பொய்"; ஏன்டா முருகா, பிரணவம் சொன்ன வாயால் பொய் சொல்லுற?:))

ஹா ஹா! அப்பறம் எப்படி சுவாமி "மலை" ஆச்சு?

சுவாமி மலை என்பது செயற்கையான ஒரு குன்று போல் அமைப்பு!
கொஞ்சம் உயரமான தளம் கொடுத்து, அறுபது படிக்கட்டுகள் வைத்துக் கட்டி இருக்காங்க! = இந்து ஆண்டுகளான பிரபவ என்று தொடங்கும் அறுபது ஆண்டுகளைக் குறிக்க!

* முருகப் பெருமானின் வாகனமாக இங்கு மயில் கிடையாது! 
பிணிமுகம் என்ற யானை தான்! கோயில் முகப்பிலும் அதுவே இருக்கு!

* கீழ்த் தளத்தில் ஒரு பிரகாரம் - மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்.
முப்பது படிக்கட்டுகள் ஏறி நடுவால இரண்டாம் பிரகாரம். மலையைச் சுற்றி வருவது போல்.
மீண்டும் முப்பது படிக்கட்டுகள் ஏறினால் மூன்றாம் பிரகாரம். முருகன் கருவறையைக் கொண்டது!

* சுவாமிமலை, காவிரி பாயும் மிகவும் அழகிய ஊர்! பச்சைப் பசேலென திருவலஞ்சுழி என்னும் பிள்ளையார் கோயிலும் அருகில் தான்!
குட காவிரிக்கு வட பாலார், திருவேரகத்தில் உறைவா என்று பாடுகிறார் அருணகிரி!


* சுவாமி மலை, ஆலயத்தின் உற்சவச் சிற்பங்கள் செய்வதற்கு மிகவும் புகழ் பெற்ற ஊர்!

Investment Casting/Lost Wax Casting என்று சொல்லப்படும் மெழுகினால் உருக்கி ஐம்பொன் சிலைகளைச் செய்யும் ஆச்சாரி/நகாசு வேலைகள் இங்கு சிறப்பு.
ஸ்தபதிகள் நடத்தும் கொல்லர் உலைக் கூடங்கள் நிறைய! வீட்டிற்கும் அழகிய சிறு சிற்பங்கள் செய்து கொடுக்கிறார்கள்!

காவிரிப் படுகைக் களிமண்ணின் சிறப்பு!
கைரேகையைக் கூடத் துல்லியமாகப் பிரதி எடுக்க வல்ல மண் என்பதால், உலோகச் சிற்பங்கள் அத்தனை அழகாக அமைகின்றன!

* ராஜன் கலைக் கூடம் இன்று ராஜன் என்னும் தலித் ஒருவரால் நடத்தப்படுகிறது!
பரம்பரை பரம்பரையாக இல்லாது, ஆர்வம் உள்ளவர் அனைவருக்கும் உலோகச் சிலை வடிக்கும் கலையைச் சொல்லிக் கொடுக்கிறார் ராஜன்.

புதிய வர்த்தக உத்திகள் கடைப்பிடிப்பதால், பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் உண்டு! மரபு அறிவோடு, புதிய தொழில் நுட்பமும் சேர்ப்பதால், வேலை நேர்த்தியும் அட்டகாசம்!

ஜீயர்கள் பலர், திவ்யதேச வாகனங்கள் எல்லாம் செய்ய, இவர் குழுவைத் தான் நியமித்துள்ளனர்!
தலித் ஒருவர் உருவாக்கிய பெருமாளின் திருவுருவங்கள் தான், பல ஆலயக் கருவறைகளை அலங்கரிக்கின்றன!

எதிர்ப்புகள் குறைந்து போய், இன்று பல புதிய ஆலயங்களில், சாமி சிலைகள் செய்ய சுவாமிமலை ராஜனையே பலரும் நாடுகிறார்கள்!
திருமணமே செய்து கொள்ளாமல், இறைத் திரு உருவங்கள் செய்தே பணியாகக் கொண்டுள்ளார் ராஜன்! - இன்னுமொரு நூற்றாண்டு இரும்!


* நக்கீரர், பழமுதிர் சோலையில் எப்படி வேடுவர்கள் முருகனைப் பூசை செய்ததைக் காண்பித்தாரோ,
அதே போல் சுவாமி மலையில், அந்தணர்கள் பூசை செய்வதைக் காட்டுகிறார்!

உச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந்து
ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி
நாஇயல் மருங்கில் நவிலப் பாடி
விரையுறு நறுமலர் ஏந்திப் பெரிந்து உவந்து
ஏரகத்து உறைதலும் உரியன்: அதான்று

என்பது திருவேரகத்துத் திருமுருகாற்றுப்படை!

* சுவாமி மலையைப் போலவே, தில்லி வாழ் தமிழர்கள், தில்லியில் முருகனுக்கு ஒரு ஆலயம் எழுப்பி உள்ளார்கள்!
 மலை மந்திர் என்பது லோக்கல் பெயர். உத்தர (வடக்கு) சுவாமி மலை என்பது சிறப்புப் பெயர்!

* பிரபலமான சில சுவாமி மலைத் திருப்புகழ்ப் பாடல்கள் இதோ:
- பாதி மதி நதி, போது மணி சடை,
- காமியத்து அழுந்தி இளையாதே,
- சரண கமலாலயத்தில்,
- செக மாயை உற்று,
- மருவே செறித்த குழலார் மயக்கின்

இதில் எனக்கு மிகவும் பிடித்தது, வாணி ஜெயராம் பாடும் பாதி-மதி-நதி பாடல். எம்.எஸ்.வி இசையில் மிகவும் அருமையாக இருக்கும்!
இலக்கண இசையாகவோ, அருணகிரியின் வழக்கமான சந்த இசையாகவோ இல்லாமல், மெல்லிசையாக இருக்கும்!
சூத மிக வளர் சோலை மருவிடு சுவாமி மலை தனில் உறைவோனே!

* ஒரு மாதத்துக்கு முன் நடைபெற்ற அம்மா-அப்பாவின் மணிவிழாவின் போது, அனைவரும் சிதம்பரம், திருக்கடவூர், சுவாமி மலைக்கும் சென்று வந்தோம். அப்போ, பல சுவையான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அந்தப் பயணக் குறிப்பு, மாதவிப் பந்தலில், வெகு விரைவில்! :)

சூதம் மிக வளர், சோலை மருவிடு, சுவாமி மலை தனில் உறைவோனே! - என் முருகவா!!

3 comments:

maithriim October 30, 2011 11:11 AM  

As always an excellent post! படித்துகொண்டே இருக்கத் தூண்டும் நடை. இப்பொழுது தான் இந்தியா வந்து சென்று இருக்கிறிர்கள் போலும், அடுத்த முறை சந்திக்க வேண்டும் :)
amas32

adithyasaravana October 30, 2011 11:40 AM  

சரண கமலாலயத்தை.. பெங்க்ளூர் ரமணியம்மா பாட்டு கேட்டு சின்ன வயசில உரு ப்போட்டது, இன்னைக்கு மனசுக்குள்ள பாடீடுறேன்.. நன்றி நன்பா...( என்ன புதுசுங்கறீயா..ச்சும்மா தான்)

cheena (சீனா) November 06, 2011 12:23 AM  

அன்பின் கேயாரெஸ் - அறுபடை வீடுகளீல் நான்காவது - சுவாமி மலை பற்றிய இடுகை. அருமை அருமை. பெயர்க்காரணம், மலை அல்ல அல்ல - தளங்களாக - உயரமாக - படிக்கட்டு வைத்து மலை போல கட்டிய கோவில் - அதன் பெயர்க்காரணம் - அங்கிருக்கும் ஸ்தபதிகள் - பல்வேறு கோவில்களை அலங்கரிக்கும் சிலைகள் பிறக்குமிடம் - ராஜன் கலைக்கூடம் - வழக்கமான மயிலிற்குப்பதில் யானை வாகனம் - தகவல் திலகமே கேயாரெஸ் - மிக மிக இரசித்தேன் 0 நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP