Sunday, August 12, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 4


"மையல் நடம் செய்து கொண்டே நம்மைக் காக்க வரும் முருகனை வரவேற்கும் வரிகளைப் பாடு நண்பா"


"வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக
இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக
வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக
ஆறுமுகம் படைத்த ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக
சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக
ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக
என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனை காக்க வேலோன் வருக

"இந்தப் பகுதியில் இரண்டு இரண்டு அடிகளாகவோ நான்கு நான்கு அடிகளாகவோ எடுத்துக் கொண்டு பொருள் சொல்லும் வகையில் வரிகள் அமைந்திருக்கின்றன"

"ஆமாம். வடிவேலும் மயிலும் துணை என்பதை மீண்டும் வலியுறுத்துவதைப் போல வேலாயுதனார் என்றும் மயிலோன் என்றும் முருகனை முதல் இரு அடிகள் விளிக்கின்றன"

"ஆமாம்.

வர வர என்பதும் வருக வருக என்பதும் ஒருவரை மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கும் போது புழங்கும் அடுக்குத் தொடர்கள்.

வேல் என்னும் ஆயுதத்தை அடியாரைக் காக்கும் பொருட்டு ஏந்தியிருப்பதால் முருகனை வேலாயுதனார் என்று அழைத்தார் அடிகளார்.

அவன் ஆடி வரும் மயில் மேல் ஏறி வருவதால் மயிலோன் என்றார்.

வர வர வேலாயுதனார் வருக
வருக வருக மயிலோன் வருக"

"அடுத்த இரு வரிகளில் இந்திரன் முருகப்பெருமானைப் போற்றுவதைக் குறிக்கிறாரா?"

"ஆமாம். இந்திரன் மட்டும் இல்லை. இந்திரனைத் தலைவனாகக் கொண்ட தேவர்களும் அவர்கள் காக்கும் திசைகளில் இருக்கும் அனைத்து உயிர்களும் போற்றிப் புகழ வடிவேலவன் வருவதைக் கூறுகிறார்.

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திசைகளிலும் இந்திரன், அக்கினி, இயமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் என்னும் எட்டுத் திசைக் காவலர்கள் இருந்து அனைத்து உயிர்களையும் காப்பதாக முன்னோர் நூல்கள் சொல்லும். இவர்களை அஷ்டதிக்பாலகர் என்று வடனூல்கள் அழைக்கும்.

அப்படி இந்திரன் முதலாக உள்ள எண் திசைக் காவலர்களும் அவர்களால் காக்கப்படும் உயிர்களும் போற்றிக் கொண்டாட மந்திர வடிவேல் ஏந்தியவன் வருக வருக"

"மந்திர வடிவேல் என்று தானே சொல்கிறார். ஏந்தியவன் என்பதை இங்கே நாமாக எடுத்துக் கொள்ள வேண்டுமா?"

"உடைமையின் பெயரை உரியவர் மேல் ஏற்றிக் கூறுவது உலக வழக்கு என்பதால் இங்கே வேலவனைக் குறித்ததாக எடுத்துக் கொண்டேன். வேலை வரவேற்பதாக எடுத்துக் கொண்டாலும் பொருள் பொருத்தமாகத் தான் இருக்கும்"

"சரி தான். மந்திர வடிவேல் என்பதற்கு என்ன பொருள்?"

"மந்திரங்களில் முதன்மையானது ஓங்கார மந்திரம். ஓங்காரமே வேல்வடிவாய் அமைந்ததால் மந்திரமே வடிவான வேல் என்று பொருள் கொள்ளலாம்.

அழகே வடிவான வேல் என்றும் பொருள் கொள்ளலாம்"

"கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்பட்ட வேல் என்றும் பொருள் கொள்ளலாமா?"

"மனிதர் கை வேல் என்றால் அப்படி பொருள் கொள்ளலாம். சிவசக்தியின் உருவான சிவகுமரன் கை வேல் கொல்லர் உலைக்களத்தில் வடிக்கப்படாததால் அந்த பொருள் இங்கே பொருந்தாது"

"சரி தான்.

இந்திரன் முதலா எண்திசை போற்ற
மந்திர வடிவேல் வருக வருக

அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறு"

"ஞான சக்தி வடிவான முருகப்பெருமானின் இருபுறமும் வீற்றிருக்கும் இச்சா சக்தி, கிரியா சக்திகளான திருத்தேவியர் இருவரையும் அடுத்த வரிகளில் நினைத்து அவர்களையும் முருகனுடன் சேர்ந்து வரவேற்கிறார் அடிகளார்.

உலகச் செல்வங்கள் அனைத்திற்கும் தலைவர்களாக எட்டு வசுக்கள் என்னும் தேவர்களைச் சொல்லுவார்கள். அந்த எட்டு வசுக்களின் தலைவன் இந்திரன். அதனால் அவனுக்கு வாசவன் என்று ஒரு பெயர் உண்டு. அவன் மகளாகிய தெய்வயானைப் பிராட்டியாரை மணம் புரிந்தவன் என்பதால் முருகனை ‘வாசவன் மருகா’ என்று விளித்து வரவேற்கிறார்.

குறவர் குலமகளாகிய வள்ளிப் பிராட்டியாரின் நெஞ்சம் நிறை நேசத்தை என்றும் மறவாமல் நினைத்துக் கொண்டே இருப்பதால் 'நேசக் குறமகள் நினைவோன்' என்றார்.

வாசவன் மருகா வருக வருக
நேசக் குறமகள் நினைவோன் வருக"

"அடுத்த வரிகளுக்கும் பொருள் கூறு நண்பா"

"ஆறுமுகம் கொண்ட ஐயா வருக
நீறிடும் வேலவன் நித்தம் வருக

ஆறு திருமுகங்களைக் கொண்ட ஐயனே வருக. திருநீற்றை நெற்றியிலும் உடம்பிலும் அணிந்திடும் வேலவன் தினந்தோறும் வருக.

சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக
சரஹணபவனார் சடுதியில் வருக

சிரம் என்றால் தலை; சென்னி என்றாலும் தலை. சென்னிமலையில் மேல் அமர்ந்திருக்கும் வேலவன் சீக்கிரம் வருக. சரவணப்பொய்கையில் உதித்த சரவணபவன் விரைவில் வருக.

சரஹணபவ என்பது ஷடாக்ஷரம் என்னும் ஆறெழுத்து மந்திரம். அதன் எழுத்துகளை சிறிதே முன்னும் பின்னுமாக மாற்றி உருவேற்றினால் வெவ்வேறு பயன்கள் கிடைக்கும் என்பார்கள் மந்திர நூலோர். அப்படி வெவ்வேறு உருவில் அமையும் ஆறெழுத்து மந்திரங்களையே மந்திர நூலாகிய இந்த நூலின் அடுத்த அடிகளில் அமைத்திருக்கிறார் அடிகளார். அவற்றின் பொருளினை குரு மூலமாக அறிந்து கொள்வதே நலம்.

எனக்கும் அவற்றின் உட்பொருள் ஏதும் தெரியாது. அதனால் அவற்றின் பொருளைச் சொல்லாமல் அடுத்த அடிகளுக்குப் பொருள் கூறுகிறேன்.

ரஹண பவச ரரரர ரரர
ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
விணபவ சரஹண வீரா நமோ நம
நிபவ சரஹண நிறநிற நிறென
வசர ஹணப வருக வருக
அசுரர் குடி கெடுத்த ஐயா வருக

கெட்டதை இல்லாமல் ஆக்க அதனை அழிக்கலாம்; அல்லது திருத்தி ஆட்கொள்ளலாம். கருணைக் கடலாகிய கந்தன் சூரனின் அசுரர் குடி முழுவதையும் திருத்தி ஆட்கொண்டதால் கெட்டது கெட்டது. அதனால் அசுரர் குடி கெடுத்த ஐயா என்றார்”

"ஆகா"

"என்னை ஆளும் சிவகுமரர்களில் இளையவனான ஐயன் தனது பன்னிரண்டு திருக்கைகளிலும் பன்னிரண்டு ஆயுதங்களையும் பாச அங்குசங்களையும் ஏந்தி அழகாக பரந்து இருக்கும் பன்னிரண்டு திருக்கண்களும் அழகுடன் திகழ விரைவாக எனைக் காக்க வருக.

என்னை ஆளும் இளையோன் கையில்
பன்னிரண்டாயுதம் பாசாங்குசமும்
பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
விரைந்தெனைக் காக்க வேலோன் வருக"

(தொடர்ந்து பேசுவார்கள்)

11 comments:

VSK August 13, 2012 11:15 AM  

இந்திரன் முதலான அஷ்ட திக்பாலர்களும் மந்திரத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். அந்த மந்திரங்களில் முதன்மையான ஓம் எனும் மந்திரத்தை ஆளுமை செய்யும் வடிவேலைக் கையில் தாங்கிருக்கும் குமரனை அந்த வரிகளால் அழைக்கிறார்.

நேசக் குறமகள் நினைவோன் என்பது இரு விதமாகப் பொருள் கொள்ளக் கூடியது.
வள்ளியின் நினவில் இருக்கும் முருகன் எனவும், வள்ளியை எப்போதுமே நினைவில் கொண்ட கந்தன் எனவும் கொள்ளலாம்.

சரவண பவனார் தொடங்கி, வசர ஹணப வருக வருக முடிய நீங்கள் சொன்னதுபோலவே, ஷடக்கர மந்திரங்களால் அழைக்கிறார்.

இந்த 12 ஆயுதங்கள் என்னென்னவென இன்னொரு கவசத்தில் [கவசம் 5 குன்றுதோறாடும் குமரன்] சொல்லியிருக்கிறார் ஸ்வாமிகள்.

ஒருகை வேலாயுதம், ஒருகை சூலாயுதம், ஒருகை நிறைசங்கு, ஒருகை சக்ராயுதம், ஒருகை நிறைவில்லு, ஒருகை நிறையம்பு, ஒருகை மந்திரவாள், ஒருகை மாமழு, ஒருகை மேற்குடை, ஒருகை தண்டாயுதம், ஒருகை சந்திராயுதம், ஒருகை வல்லாயுதம். என.

முருகனருள் முன்னிற்கும்.

Kavinaya August 13, 2012 9:52 PM  

//கெட்டதை இல்லாமல் ஆக்க அதனை அழிக்கலாம்; அல்லது திருத்தி ஆட்கொள்ளலாம். கருணைக் கடலாகிய கந்தன் சூரனின் அசுரர் குடி முழுவதையும் திருத்தி ஆட்கொண்டதால் கெட்டது கெட்டது. அதனால் அசுரர் குடி கெடுத்த ஐயா என்றார்”//

அழகான விளக்கம்.

//நேசக் குறமகள் நினைவோன் என்பது இரு விதமாகப் பொருள் கொள்ளக் கூடியது.
வள்ளியின் நினவில் இருக்கும் முருகன் எனவும், வள்ளியை எப்போதுமே நினைவில் கொண்ட கந்தன் எனவும் கொள்ளலாம்.//

அண்ணா சொன்ன இந்த விளக்கத்தையும் ரசித்தேன் :)

பல விஷயங்கள் புதிதாய்த் தெரிந்து கொண்டேன். நன்றி குமரன் :)

திண்டுக்கல் தனபாலன் August 14, 2012 1:29 AM  

ஆஹா.. சிறப்பான பகிர்வு... பாராட்டுக்கள்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…

VSK August 14, 2012 11:03 AM  

2 - 3 வாரங்களாக ஊரில் இல்லை. அதனால் உடனே பின்னூட்டம் இட இயலவில்லை. மன்னிக்கவும்.

'சஷ்டியை நோக்க' எனும் வரிக்குச் சொல்லியிருக்கும் பொருள் இனிமை என்றாலும், அதன் பொருள் அப்படி இல்லை எனக் கருதுகிறேன்.

சஷ்டி விரதம் தொடங்குவோர்க்கு ஒரு ஊக்கமாக இந்த வரியைச் சொல்லியிருக்கிறார் தேவராய ஸ்வாமிகள்.

சஷ்டியை நோற்க என்பதையே சஷ்டியை நோக்க எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

சஷ்டி விரதம் தான் நோற்கும்போது, சிஷ்டருக்கு உதவும் அந்தச் செங்கதிர் வேலோன் எப்படி வருகிறான் [வந்தான்] எனத் தொடங்குகிறார்.

வேலும், மயிலும் விளக்கம் அழகு.

முருகனருள் முன்னிற்கும்.

sury siva August 14, 2012 12:56 PM  

//மையல் நடம் செய்து கொண்டே நம்மைக் காக்க வரும் முருகனை வரவேற்கும் வரிகளைப் பாடு நண்பா"//


paadi vitten kumara

subbu rathinam.
http://kandhanaithuthi.blogspot.com

குமரன் (Kumaran) August 15, 2012 5:20 PM  

நல்ல விளக்கம் எஸ்.கே. ஐயா. நன்றி.

குமரன் (Kumaran) August 15, 2012 5:21 PM  

நன்றி கவிநயா அக்கா & திண்டுக்கல் தனபாலன்.

குமரன் (Kumaran) August 15, 2012 5:21 PM  

நீங்கள் பாடினதைக் கேட்டேன் சுப்புரத்தினம் ஐயா. மிக நன்றாக இருக்கிறது. மிக்க நன்றி.

Geetha Sambasivam October 23, 2012 8:15 AM  

பல பிரச்னைகளிலும் காத்து அருள் புரியும் கவசத்தின் விளக்கம் அருமை. தாமதமான வரவுக்கு மன்னிக்கவும். நன்றி.

Geetha Sambasivam October 23, 2012 8:15 AM  

தொடர

குமரன் (Kumaran) October 23, 2012 10:32 AM  

நன்றி கீதாம்மா.

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP