Sunday, October 14, 2012

கந்தர் சஷ்டி கவசம் - சொல்லும் பொருளும் - 8

"எப்பொழுதும் எனை எதிர்வேல் காக்க.


அடுத்த பகுதியைப் பாடவா நண்பா?"

"இந்த முறை நான் பாடுகிறேன்.

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!
வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனையவேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!
தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!
காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!

சென்ற பகுதியின் தொடர்ச்சியாகவே இந்தப் பகுதியும் அமைகிறது. செய்த புண்ணிய பாவங்களுக்கு ஏற்ப பயன்கள் இந்தப் பிறவியில் கிடைக்கின்றன. எல்லா விதமான துன்பங்களில் இருந்தும் இறைவனின் அருள் உருவாகிய திருவேல் காக்க வேண்டும் போது அந்த துன்பங்களுக்கு ஊற்றுக்கண்ணாக இருக்கும் எல்லா பாவங்களும் தூள் தூளாகப் போவது போல் இறைவன் திருவருட் கருணைப் பார்வை கிடைக்க வேண்டும் என்று இந்தப் பகுதியில் வேண்டுகிறார் அடிகளார்.

கடைசி காலம் வரையில் கந்தன் கருணைப் பார்வை வேண்டும். மூச்சு நிற்பதற்கு சற்று முன்னர் நிற்பது பேச்சு. உயிரில்லாதவரைப் போல் மூர்ச்சையுற்றுக் கிடப்பவரை பேச்சு மூச்சு இல்லாமல் கிடக்கிறார் என்று தானே சொல்கிறோம். அப்படி கடைசி காலத்தில் பேச்சும் மூச்சும் நிற்கும் காலம் வரையில் விரைவாக வந்து கனகவேல் காக்க வேண்டும்.

உன் அடியவனாகிய எனது பேச்சு இருக்கும் காலம் எல்லாம் விரைவாக வந்து உனது கனகவேல் காக்கவேண்டும்!

அடியேன் வசனம் அசைவுள நேரம்
கடுகவே வந்து கனகவேல் காக்க!

இருக்கும் காலம் வரையில் இறைவன் துணை வேண்டும்! இரவும் பகலும் இறைவன் திருக்கை வேலின் துணை வேண்டும்!

நாள்தோறும் வருகின்ற பகல் நேரங்களில் வச்சிரம் போல் வலிமை உடைய வேல் காக்கவேண்டும்! அரையிருள் நேரத்திலும் அந்த வேலே காக்கவேண்டும்! முன்னிரவு நேரமான ஏமத்திலும் நடு இரவான நடுச்சாமத்திலும் பகைவர்களை எதிர்த்து அழிக்கும் எதிர்வேல் காக்க வேண்டும்!

வரும் பகல் தன்னில் வச்ரவேல் காக்க!
அரையிருள் தன்னில் அனைய வேல் காக்க!
ஏமத்தில் சாமத்தில் எதிர்வேல் காக்க!

எந்நேரத்திலும் மயக்கம், குழப்பம், அமைதியின்மை, சோம்பல் போன்றவற்றை ஏற்படுத்தும் தாமதகுணம் என்னை அண்டாமல் அந்தக் குணத்தினை நீக்கி திறமையுடைய வேல் காக்கவேண்டும்!

தாமதம் நீக்கிச் சதுர்வேல் காக்க!

கனகவேல் விரைந்து எப்போதும் என்னைக் காக்க காக்க காக்க! விரைவாக என் மேல் உனது கருணைத் திருவிழிகளால் நோக்குக நோக்குக நோக்குக! எல்லாவிதமான தடைகளும் அறவே நீங்கும்படி அவற்றைத் தாக்குக தாக்குக தாக்குக! உன் கருணைத் திருவிழிகளால் என் பாவங்கள் எல்லாம் பொடியாகப் போகும் வண்ணம் பார்க்க பார்க்க!

காக்க காக்க கனகவேல் காக்க!
நோக்க நோக்க நொடியினில் நோக்க!
தாக்க தாக்க தடையறத் தாக்க!
பார்க்க பார்க்க பாவம் பொடிபட!"

"நல்ல விளக்கம் நண்பா. அடுத்த பகுதி கொஞ்சம் கடினமான பகுதி என்று நினைக்கிறேன்"

"கடினம் இல்லை. எளிமை தான். ஆனால் அறிவியல் சார்ந்த சிந்தனை கொண்டவர்கள் நம்ப மறுக்கும் சிலவற்றை அடிகளார் இந்தப் பகுதியில் கூறுகிறார். ஐம்புலன்களுக்கு எளிதில் எட்டாதவை எத்தனையோ இருப்பதை அறிவியலாளர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அதனால் அப்படி நம் ஐம்புலன்களுக்கு இன்னும் எட்டாத சிலவற்றைப் பற்றி அடிகளார் இங்கே சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அப்படியும் மனம் ஏற்கவில்லை என்றால் துன்பங்களின் பலவிதமான வடிவங்களை இப்பகுதியில் சொல்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம்"

"சரி தான்.

அடுத்த பகுதியைப் பாடுகிறேன்.

பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!
வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!
இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

“பில்லிச் சூனியம் என்பது ஒருவர் மீது அவரது பகைவர்கள் ஏவிவிடும் மந்திர வடிவான துன்பம். அந்தத் துன்பங்களும் வலிமையுடைய பெரும்பகைவர்களால் ஏற்படும் துன்பங்களும் அகல வேண்டும்!

பில்லிச் சூனியம் பெரும்பகை அகல!

வலிமையுடைய பூதங்களும், மிகவும் வலிமையுடைய பேய்களும், அல்லல்களைக் கொடுத்து எந்த விதமான மந்திர தந்திரங்களுக்கும் அடங்காத முனிகளும், சிறுபிள்ளைகளைத் தின்று வீடுகளின் பின்புறத்தில் இருக்கும் புழைக்கடைகளில் வாழும் முனிகளும், தீயை வாயில் கொண்டு எல்லோரையும் பயமுறுத்தும் கொள்ளிவாய்ப் பேய்களும், குள்ள வடிவம் கொண்டிருக்கும் குறளைப் பேய்களும், வயதுப் பெண்களைத் தொடர்ந்து சென்று பயமுறுத்து பிரம்ம ராட்சதரும், உன் அடியவனான என்னைக் கண்டவுடன் அலறிக் கலங்கிட வேண்டும்!

வல்ல பூதம் வலாஷ்டிகப் பேய்கள்
அல்லல் படுத்தும் அடங்கா முனியும்
பிள்ளைகள் தின்னும் புழைக்கடை முனியும்
கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்
பெண்களைத் தொடரும் பிரம ராக்ஷதரும்
அடியனைக் கண்டால் அலறிக் கலங்கிட!

வயதிற்கு வரும் முன்னரே சிறுவயதிலேயே துர்மரணம் அடைந்த பெண்கள் கொள்ளும் இரிசி என்னும் பேய் வடிவங்களும், குருதியை விரும்பி உண்ணும் காட்டேரிகளும், இவை போன்ற துன்பங்களைக் கொடுக்கவே இருக்கும் படைகளும், பகலிலும் இருட்டிலும் எதிரே வந்து மிரட்டும் அண்ணர்களும், உயிர்ப்பலிகளுடன் கூடிய கனபூசைகளை விரும்பிப் பெற்றுக் கொள்ளும் காளி முதலானவர்களும், மிகுந்த ஆங்காரத்தை உடையவர்களும், இன்னும் மிகுதியான பலம் கொண்டிருக்கும் பேய்களும், பல்லக்கில் ஏறிவந்து அதிகாரம் செய்யும் தண்டியக்காரர்களும், சண்டாளர்களும், என் பெயரைச் சொன்னவுடனேயே இடி விழுந்தது போல் பயந்து ஓடிட வேண்டும்!

இரிசி காட்டேரி இத்துன்பச் சேனையும்
எல்லினும் இருட்டிலும் எதிர்படும் அண்ணரும்
கனபூசை கொள்ளும் காளியோடு அனைவரும்
விட்டாங்காரரும் மிகுபல பேய்களும்
தண்டியக்காரரும் சண்டாளர்களும்
என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட!"

“இந்தப் பகுதியின் தொடர்ச்சியாகவே அடுத்த பகுதிகளும் வருகின்றன. அந்தப் பகுதியையும் பாடுகிறேன்"

(தொடர்ந்து பேசுவார்கள்)

6 comments:

திண்டுக்கல் தனபாலன் October 15, 2012 12:55 PM  

விளக்கங்களுக்கு மிக்க நன்றிங்க... தொடர்கிறேன்...

VSK October 17, 2012 1:28 PM  

நேரடியான பொருளில் இவற்றையெல்லாம் அறிவியலாளர்கள் ஒத்துக்கொள்ளாவிட்டால் போகிறது, குமரன்! இந்தக் குணங்களை உடைய மனிதர்களைப் பற்றியும் நாம் அவ்வப்போது படிக்க, கேட்கத்தானே செய்கிறோம்! அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டுவதாக அவர்கள் பொருள் கொள்ளட்டுமே! :))

முருகனருள் முன்னிற்கும்!

குமரன் (Kumaran) October 21, 2012 3:25 PM  

உண்மை தான் ஐயா. :)

நன்றி.

Geetha Sambasivam October 23, 2012 8:29 AM  

அழகான விளக்கம். ஏத்துக்கறவங்க ஏத்துக்கட்டும். மத்தவங்க சும்மா இருக்கட்டும். நம்மைப் பொறுத்தவரை இதில் நல்ல பலன் காண்கிறோம். நன்றி.

குமரன் (Kumaran) October 23, 2012 10:31 AM  

நன்றி கீதாம்மா.

தமிழ் மொழி April 22, 2020 4:23 AM  

அருமையான பதிவு
https://tamilmoozi.blogspot.com/2020/04/blog-post.html?m=1

அறுபடை வீடுகள் (ஆற்றுப்படை வீடுகள்)

  © Blogger templates 'Sunshine' by Ourblogtemplates.com 2008

Back to TOP